June 15, 2016

இனப்படுகொலைகளுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்க இந்தியா செயலாற்ற வேண்டும்! - மோடியிடம் ஜெயலலிதா கோரிக்கை !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் ஈழத்தமிழர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் கலந்தரையாடப்பட்டதோடு, 96 பக்கங்களைக் கொண்ட அறிக்கையையும் இந்தியப் பிரதமரிடம் தமிழக முதல்வர்கையளித்துள்ளார்.

 
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறும் அதிகாரப்பரவலாக்களை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் இறுதி இலக்கை அடையும் முயற்சியாக, ஜனநாயக அதிகாரத்தைப் பெறுவதற்கு இந்திய அரசு தீரக்கமான முடிவுகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை தண்டிக்க சர்வதேச அரங்கில் இந்தியா தீவிரமாக செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் முகாம்களிலும் வெளியிலும் உள்ள ஈழ அகதிகள், வேலைவாய்ப்புப் பெறுவதற்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா கடற்படை அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க, 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் ஸ்ரீலங்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இரத்து செய்து, கச்சத்தீவை மீட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலாயத்தை புனரமைப்பதற்கு முன்பதாக, தமிழக மீனவர்களின் ஒப்புதலை ஸ்ரீலங்கா அரசாங்கம் பெறவேண்டும் எனவும், இரு நாடுகளும் இணைந்து அப்பணியை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக முதல்வர், இந்தியப் பிரதமரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment