June 25, 2016

பிரிட்டன் பிரிந்தமையால் ஆட்டம் காணும் இலங்கையின் பொருளாதாரம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்தமையானது இலங்கையின் கடன் வாங்கல் மற்றும் பங்குசந்தையின் சமச்சீர் தன்மையில் பாரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஐரேப்பிய ஒன்றியத்தில் நிலைப்பதா? பிரிவதா? என்பது தொடர்பன சர்வஜன வாக்கெடுப்பு பிரிட்டனில் நடைபெற்றது.

இவ்வாக்கெடுப்பில் 52 வீதமானவர்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதை ஆதரித்திருந்தனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்துச் செல்வதானது சர்வதேச பொருளாதாரத்தில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்த கூடும் என்று உலகலாவிய பொருளாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர்.

இலங்கையை பொருத்தமட்டில் 2008ம் ஆண்டு உலக அரங்கில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது உருவான நிதி நெருக்கடியை போன்றதொரு நிலையை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்படக்கூடும் என்ற கருத்துக்கள் வலுவடைந்துள்ளன.

ஏற்கனவே, கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தையில் அமெரிக்க டொலரை மிதக்க விடப்பட்டிருப்பதால் சமச்சீரற்ற பங்குச்சந்தையாக இலங்கையின் பங்கு சந்தை உள்ளது.

இதனால் சுமார் 3 பில்லியன் வரையிலான வெளிநாட்டு முதலீடுகள் மீள கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இலங்கையின் ஏற்றுமதியில் 28 வீதமானவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த 28 வீத ஏற்றுமதியில் பிரிட்டனுக்கு மாத்திரம் 10 வீதமான ஏற்றுமதி இதுவரை காலம் இடம்பெற்று வந்தது.

அதாவது, வருடத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதிகள் இடம்பெறுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கையின் முக்கிய ஏற்றுமதி நாடாக பிரிட்டன் காணப்பட்டதனாலேயே இலங்கை அரசு பிரிட்டன் பிரிவதை ஆதரிக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை ஆண்டொன்றுக்கு 1,500 கோடி வருவாயைப் பெறக் கூடும் என்று நிதி அரசு சுட்டிக்காட்டியிருந்தது.

அதேவேளை, ஜி.எஸ்.பி. சலுகை மீள கிடைக்கும் பட்சத்தில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய அபிவிருத்தியை நோக்கி நகரக் கூடும் என்று ஆரூடம் கூறப்பட்டது.

ஆனால், பிரிட்டன் பிரிந்தமையானது இந்த இரண்டு விடயத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இலங்கையின் ஆடை ஏற்றுமதியின் முக்கிய நாடாகவும் பிரிட்டன் இத்தனை காலமும் விளங்கியது.

இனிவரும் காலங்களில் பிரிட்டன் வகுக்கும் புதிய பொருளாதார, வர்த்தக கொள்கைகளுக்கு அமையவே இலங்கையும், பிரிட்டனுக்கு ஏற்றுமதிச் செய்துவந்த நாடுகளும் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment