July 18, 2016

சிங்கப்பூரில் சிறிலங்கா பிரதமர் – இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடுகிறார்!

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்கின் அழைப்பின் பேரில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அங்கு அவருக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று சிறிலங்கா பிரதமருக்கு சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சில் வரவேற்பு அளிக்கப்படும், அதையடுத்து சிங்கப்பூர் அதிபர் ரொனி ரான் கெங் யாம், பிரதமர் லீ சென் லூங் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

சிங்கப்பூர் – சிறிலங்கா பிரதமர்களின் முன்னிலையில் இருதரப்பு உடன்பாடுகள் பலவும் கையெழுத்திடப்படவுள்ளன.

அத்துடன் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளையும், முதலீடுகளையும் அதிகரிப்பது தொடர்பான பேச்சுக்களிலும் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும், சிறிலங்கா பிரதமருடன் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.


No comments:

Post a Comment