June 19, 2015

பிரான்சில் சிங்கள அரச புலனாய்வாளர்கள் அடாவடி: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் படுகாயம்!

பிரான்சில் சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரின் கொலைவெறித் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பரமலிங்கம் அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் தனது வர்த்தக நிறுவனத்தை மூடிவிட்டு செல்ல முற்படுகையிலேயே அங்கு காத்திருந்த கும்பல் அவர்மீது கண்மூடித்தனமான தாக்குதலைமேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிரான்சு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் எமது தேசிய செயற்பாடுகளை முடக்கும் முகமாக  செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து சிறிலங்கா அரச புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் ஏற்கெனவே கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகியோரை பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் படுகொலைசெய்யப்பட்டமை,  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் பரிதி அவர்கள் பாரிசில் படுகொலை செய்யப்பட்டமை என்பன இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. அதன் தொடர்ச்சியாக பாரிசில் இருந்து வெளியாகிய ஈழமுரசு பத்திரிகை மற்றும் அதன் இணையத்தளங்கள் யாவும் கொலைவெறியர்களின் எச்சரிக்கை காரணமாக முடக்கப்பட்டன.

அத்துடன் நிறுத்திக்கொள்ளதவர்கள், தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் தமது நடவடிக்கைகளை விஸ்தரித்திருந்தனர்.

இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்நாடுகளில் உள்ள அனைத்து தேசிய செயற்பாட்டாளர்களையும் விசனமடையவைத்துள்ளது.

பொதுமக்கள் இதுகுறித்து விளிப்புடன் இருக்கவேண்டும் எனவும் - தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள சிறிலங்கா அரச புலனாய்வாளர்களை இனங்கண்டுகொள்ளவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரான்ஸ்

No comments:

Post a Comment