July 18, 2016

மூடப்பட்டது யாழ்.பல்கலைக்கழகம் – சுமுக நிலையை ஏற்படுத்த தீவிர முயற்சி!

விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.


விஞ்ஞானபீட புகுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், கண்டிய நடனத்தை புகுத்தியதால் தமிழ்- சிங்கள மாணவர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் மோதல் இடம்பெற்றது.

இதில் 20இற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். அத்துடன் விஞ்ஞான பீடத்துக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டு, சிங்கள மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த மோதல்கள் ஏனைய பீடங்களுக்கும் பரவுவதைத் தடுக்கும் வகையில், சுமுக நிலை ஏற்படுத்தப்படும் வரையில், யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வவுனியா வளாகமும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டு விரைவில் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

அதேவேளை, நேற்றுமுன்தினம் நடந்த மோதல் குறித்து ஆராய, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடந்த கூட்டத்தில், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பல்கலைக்கழகப் பகுதியில் இருந்து காவல்துறையினரை வெளியேறக் கோருவதென்றும், மோதல்கள் குறித்து விசாரிக்க குழுவொன்றை நியமிப்பதென்னும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment