January 1, 2015

முதன்மை பெறவேண்டிய தமிழர் தேசத்தின் நலன்கள் - கலாநிதி சேரமான்!

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை, நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை’ என்பது பண்டைக் காலம் தொட்டு இன்று வரை அரசியலில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியாகும்.
ஆனால் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோக வரலாற்றை முதிசமாகச் சுமந்து நிற்கும் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகால அரசியல் நகர்வுகள் இவ்விதியின் அடிப்படையில் அமையவில்லை என்றே கூறவேண்டும்.
நாடாளுமன்ற அரசியல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுகமாக செயற்படுவதற்காக 2001ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். அதாவது தமிழீழ தேசத்தின் நலன்களை நாடாளுமன்ற அரசியல் களத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்வதற்கும், அதன் ஊடாக மிதவாத அரசியலின் போர்வையில் விடுதலைப் பாதையில் சிங்களம் போட்ட தடைக்கற்களை உடைத்தெறிவதற்காகவும் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

படை பலத்துடன் தமிழீழ மண்ணின் எழுபது தொடக்கம் எண்பது விழுக்காடு வரையான நிலப்பரப்பைத் தமது ஆளுகைக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருந்த அன்று முதல் சிங்களப் படைகளால் கிளிநொச்சி ஆக்கிரமிக்கப்பட்ட 02.01.2009 வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுச் செயற்படும் அரசியல் கூட்டமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்கியது.
ஆனால் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழீழ தேசத்தின் நலன்களை காற்றில் பறக்க விட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஓடும் வண்டியில் ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணி அரசியலை வரித்துக் கொண்டது.
இந்த ஒட்டுண்ணி அரசியலின் தொடர்ச்சியாகவே இப்பொழுது பச்சை இனவாதியான மைத்திரிபால சிறீசேனவை ஆதரிக்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இப்படிப்பட்ட முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என்பது ஏலவே எதிர்பார்த்த ஒன்றுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சிங்கள வாக்கு வங்கியில் மைத்திரிபால சிறீசேனவிற்கு சரிவை ஏற்படுத்துமா? அல்லது சம்பந்தரின் ‘சாணக்கியம்’ மகிந்தரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருமா? என்பதை எதிர்வரும் 9ஆம் நாள் வரை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.
எது எவ்வாறு நடந்தாலும் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அடியொற்றி அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறீசேனவிற்குத் தமிழர்கள் வாக்களித்து, அதன் விளைவாக அவர் வெற்றியீட்டும் பட்சத்தில் தமிழினத்தின் எதிர்காலம் இருண்டுவிடும்.
இவ் யதார்த்த மெய்யுண்மையை நாம் புரிந்து கொள்வாயின் பொருளரசியல் தரிசனத்தில் மேற்குலகின் கொள்கைகளையும், மைத்திரிபால சிறீசேன, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் நுணுகி ஆராய்வது இன்றியமையாததாகின்றது.
முதலாவதாக ஒரு விடயத்தை நாம் உறுதியாகக் கூறலாம்: மகிந்தரை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கியெறிந்து விட்டு மைத்திரிபால அரியாசனம் ஏற வேண்டும் என்பதே மேற்குலகின் எதிர்பார்ப்பாகும். இதற்கான சமிக்ஞைகள் பல மட்டங்களில் இருந்து வெளிப்படுகின்றன.
இரு சிங்களத் தலைவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிவருவதற்கு ஏறத்தாள இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் பற்றி 09.12.2014 அன்று பன்னாட்டு நெருக்கடிக் குழுவால் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. உலக அரசியல் நிலவரங்கள் பற்றி அலசி ஆராய்ந்து ஆய்வறிக்கைகளை வெளியிடும் பன்னாட்டு அறிஞர் குழாமாகத் திகழும் இவ் அமைப்பு சாராம்சத்தில் ஓர் பன்னாட்டு தன்னார்வ நிறுவனம் என்ற தகமையைக் கொண்டிருந்தாலும் இதற்கான நிதிவளத்தின் பெரும்பகுதி மேற்குலக அரசுகளிடமும், மேலைத்தேய பெருந்தொழில் நிறுவனங்களிடமும் இருந்தே கிடைக்கின்றது.
இவ் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை அதிபர் தேர்தலில் மகிந்தரின் தோல்வியையும், மைத்திரிபாலவின் வெற்றியையும் கட்டியம்கூறும் அதேவேளை, பொது எதிரணியின் நடுநாயகமாக சந்திரிகா குமாரதுங்க திகழ்வதால் மைத்திரிபாலவின் ஆட்சியில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக்கூடும் என்ற கருத்தையும் பூடகமான முறையில் முன்வைக்கின்றது. அதுவும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும், அதிகாரப் பகிர்வையும் முன்னிறுத்தும் ‘வாகையர்’ என்ற அடைமொழியை சந்திரிகா அம்மையாருக்கு இவ் அமைப்பு வழங்கியுள்ளது.
நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த அப்பாவிப் பொதுமக்களையும், நாகர்கோவில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களையும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தும், ஒரே இரவில் ஐந்து இலட்சம் தமிழர்களை குடிபெயர்த்திய யாழ்ப்பாண இடப்பெயர்வை தோற்றுவித்தும், செம்மணியில் நூற்றுக்கணக்கில் தமிழ் இளைஞர் – யுவதிகளைக் கொன்று குவித்துப் புதைத்தும், ‘நரபலி நாயகி’ என்று தமிழ் மக்களிடம் பட்டம்பெற்றவர் சந்திரிகா அம்மையார். ‘சமாதானத்திற்கான போர்’ என்ற கோசத்துடன் தமிழீழ மண்ணில் இனவழிப்பு யுத்தத்தை முன்னெடுத்தவர். தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போவதாகக் கூறித் தனது பதினொரு ஆண்டு கால ஆட்சியில் அவர் புரிந்த செப்படி வித்தைகள் ஏராளம். 01.11.2003 அன்று இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான திட்ட வரைவை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பாதுகாப்புத்துறை, உள்துறை, ஊடகத்துறை ஆகிய மூன்று அமைச்சுக்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இனப்பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வொன்றைக் காண்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு ஆப்பு வைத்தவர்.
அப்படிப்பட்டவர் பின்புலத்தில் இருக்கும் நிலையில் மைத்திரிபாலவின் ஆட்சியில் தமக்கு விடிவு கிடைத்து விடும் என்று எண்ணுவதற்கு தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் அல்லர். இது பன்னாட்டு நெருக்கடிக் குழுவிற்கு மட்டுமன்றி மேற்குலகிற்கும் நன்கு தெரியும். அப்படியிருக்கும் பொழுது எதற்காக சந்திரிகா அம்மையாரைத் தமிழர்களின் விடிவெள்ளியாகக் காண்பிப்பதற்கு பன்னாட்டு நெருக்கடிக் குழு முற்படுகின்றது? என்ற கேள்வி எழுவது இயல்பானதே. இதற்கு விடை காண்பதற்கு முன்னர் மைத்திரிபால பற்றி மேற்குலக சஞ்சிகை ஒன்றில் வெளிவந்திருக்கும் கட்டுரை ஒன்றையும் நாம் பார்ப்பது பொருத்தமானது.
மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்கும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுப்பதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை அது. பிரித்தானியாவைத் தளமாகவும், இலண்டன், நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் பணிமனைகளையும் கொண்டியங்கும் ‘த எக்கொணமிஸ்ற்’ என்ற சஞ்சிகையிலேயே இக்கட்டுரை வெளிவந்துள்ளது. ‘மன்னனின் இறுதிநாட்கள் எண்ணப்படுகின்றனவா?’ என்று தமிழில் பொருள்படக்கூடிய தலைப்புடன் வெளிவந்திருக்கும் இக்கட்டுரையை வெளியிட்ட ‘த எக்கொணமிஸ்ற்’ சஞ்சிகை பத்தோடு பதினொன்றாக வெளிவரும் ஒன்றன்று. மாறாக உலகளாவிய ரீதியில் தாராண்மைவாத வணிகத்தையும், திறந்தவெளிச் சந்தைப் பொருளாதாரத்தையும் முன்னிறுத்திப் பல தசாப்தங்களாக வெளிவரும் முக்கிய சஞ்சிகையே இதுவாகும். இச்சஞ்சிகை கூறுகின்றது:
‘‘திரு சிறீசேனவைத் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளியாகக் கருத முடியாது: கொடூரங்கள் நிகழ்ந்தேறிய போரின் இறுதி இரண்டு வாரங்களில் பாதுகாப்பு அமைச்சராக அவர் பணிபுரிந்தவர். ஆனாலும் ராஜபக்சவைத் தோற்கடித்து அவரை வெற்றியீட்ட வைப்பது நாட்டைப் பீடித்திருக்கும் இனநோயின் சில அம்சங்களைக் குணப்படுத்துவதற்குத் தேவையான முதற் படியாக அமையும். நிரந்தர உறுதிநிலை சிறீலங்காவில் ஏற்படுவதற்கு அடிப்படையான உண்மையான தேசிய நல்லிணக்கம் அவரது ஆட்சியில் ஏற்படும் என்று குறைந்தபட்சம் நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.’’
இதை இன்னொரு விதத்தில் கூறுவதானால் தமிழர்களிடத்தில் மைத்திரிபாலவிற்கு அன்பு கிடையாது என்றாலும், குறைந்தபட்சம் நல்லிணக்கத்தையாவது அவர் ஏற்படுத்துவார் என்பதால் அவருக்குத் தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதுதான் ‘த எக்கொணமிஸ்ற்’ சஞ்சிகையின் கருத்தாகும். இக்கருத்துத்தான் சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும், அதிகாரப் பகிர்வையும் முன்னிறுத்தும் ‘வாகையர்’ என்ற அடைமொழியை சந்திரிகா அம்மையாருக்கு வழங்கி பன்னாட்டு நெருக்கடிக் குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலும் பொதிந்து கிடக்கின்றது.
சரி, மகிந்தருக்கு மாற்றீடாக மைத்திரிபாலவை மேற்குலகம் விரும்புவதன் பின்னணியை இனி பொருளரசியல் தரிசனத்தில் பார்ப்போம்.
மகிந்தரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் எடுத்துக் கொண்டால், அதில் மேற்குலகிற்கும், அதன் நவ தாராண்மைத்துவத் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கும் எதிரான கருத்துக்கள் தாராளமாகப் பொதிருந்திருப்பதை அவதானிக்கலாம். மகிந்தரின் பதவிக் காலத்தில் நல்லாட்சி குன்றி வருகின்றது என்பது கடந்த ஐந்தரை ஆண்டுகளாக மேற்குலகம் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டாகும். இதற்குத் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பதிலளித்திருக்கும் மகிந்தர், ‘நல்லாட்சி என்பது நவ தாராண்மைத்துவ ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் சொந்தமான கருத்தியல் வடிவம் அல்ல’ என்று சாட்டையடி கொடுக்கின்றார். அத்தோடு மட்டும் மகிந்தர் நின்றுவிடவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் 1977ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டதே நாட்டில் தோன்றிய ஆயுதக் கிளர்ச்சிகளுக்கும், தற்பொழுது நாட்டில் நிலவும் பொருண்மிய நெருக்கடிகளுக்கும் காரணம் என்கிறார் மகிந்தர்:
‘‘எமது பொருளாதாரம் 1977ஆம் ஆண்டு தாராள மயப்படுத்தப்பட்டு திறந்து விடப்பட்டது. இதன் விளைவாக அமுல்படுத்தப்பட்ட கொள்கைகள் செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் நிலவிய விரிசலை விரிவுபடுத்தி எமது நாட்டு மக்களிடையே மிகப்பெரும் சமத்துவமின்மையைத் தோற்றுவித்தது. எமது சமூகத்தில் ஆழ வேரூன்றிய சமத்துவமின்மையில் இருந்தே ஆயுதக் கிளர்ச்சிகள் தோன்றின.’’
இதே கருத்தை தனது 2005ஆம் ஆண்டுக்கான விஞ்ஞாபனத்திலும் மகிந்தர் வெளியிட்டிருந்தார். அன்று பின்வருமாறு மகிந்தர் குறிப்பிட்டார்:
‘1977ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஆட்சியாளர்கள் பின்பற்றிய தூரநோக்கற்ற கொள்கைகளே எமது நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடும் துர்ப்பாக்கிய நிலைக்கு வழிகோலியுள்ளது என்பது எனது கருத்தாகும். ...இந்நிலையை மாற்றியமைப்பதே எனது நோக்கமாகும்.’’
நவ தாராண்மைவாதத்திற்கும், அதன் அடிநாதமாக விளங்கும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கும் விரோதமாக மகிந்தர் வெளியிடும் கருத்துக்களும், அவற்றுக்கு ஏகாதிபத்திய மூலாம்பூசி மகிந்தர் மேற்கொள்ளும் கற்பிதங்களுக்கும், அவரைத் தூக்கியெறிவதில் மேற்குலகம் கரிசனை கொள்வதற்கும் என்ன தொடர்பு உண்டு? என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான பதிலை 2007ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லுன்ஸ்ரெட் வெளியிட்ட கையேடு அளவிலான ஆய்வு நூல் ஒன்றில் பெற்றுக் கொள்ளலாம். லுன்ஸ்ரெட் கூறுகின்றார்:
‘‘1977ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பின்பற்றிய திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளும், அவரது மேற்குலக சார்பு அணுகுமுறையும் சிறீலங்காவில் அமெரிக்காவின் பன்னாட்டு அபிவிருத்தி முகவரகம் (யூ.எஸ்.எய்ட்) தனது பணிகளை விரிவுபடுத்துவதற்கு வழிகோலியது. ...1977ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் சோசலிச பொருளாதாரத்திலிருந்து விலகித் திறந்தவெளிப் பொருளாதாரத்தை வரித்துக் கொண்ட சிறீலங்கா, 1990களில் அரசுத் தலைவர் குமாரதுங்கவின் தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியிலும் அப்பொருண்மியப் பாதையிலேயே பயணித்தது. எனினும் இதனை மேலும் வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டது. அதிலும் முக்கியமாக பொருளாதாரம், பன்னாட்டு அபிவிருத்தி ஆகிய விடயங்களில் பெரும்பாலும் அமெரிக்க அரசாங்கத்தின் சிந்தனை வழித்தடத்தைப் பின்பற்றியே விக்கிரமசிங்கவின் புதிய அணுகுமுறை அமைந்தது. வெளியுறவுப் பொருண்மிய விடயங்களிலும் திறந்தவெளிப் பொருண்மியத்திற்கு ஆதரவான தனித்துவமான கொள்கைகளை விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பின்பற்றியமை அதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு கிட்டுவதற்கு வழிகோலியது.’’
சரி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரிபால என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். மைத்திரிபால குறிப்பிடுகின்றார்:
‘‘எமது நாட்டின் இயற்கை, சுற்றுச்சூழல், கனிமயியல், மனித வளம் போன்ற வளங்களின் ஊடாக அதிகபட்ச பயனை அடைவதற்கு அத்தியாவசியமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதற்கான மூலோபாயத் திட்டம் ஒன்றை நான் வகுப்பேன். ...அனைத்துலக அழுத்தங்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு முதலீடுகளைப் பன்முகப்படுத்துவதற்கு நான் உத்தேசித்திருப்பதோடு, தனியொரு நாடு மட்டும் முதலீடுகளையும், மீள்முதலீடுகளையும் மேற்கொள்ளும் சூழலை இல்லாதொழிப்பேன்.’’
அதாவது தனது ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஜே.ஆர், சந்திரிகா, ரணில் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இருந்தது போன்று மீண்டும் மேற்குலக முதலீட்டாளர்களுக்கு முழுமையாகத் திறந்து விடப்படுவதோடு, மகிந்தரின் ஆட்சியில் இப்பொழுது நடப்பது போன்று சீனாவின் முதலீட்டு ஆதிக்கத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்கிறார் மைத்திரிபால. இது மேற்குலகிற்குத் தித்திப்பான செய்திதானே? கரும்பு தின்பதற்கு எவராவது கூலியா கேட்பார்கள்? எனவே தான் தம்மையும், தமது திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளையும் ஏகாதிபத்தியம் என்று விளிக்கும் மகிந்தரை அகற்றிவிட்டு மைத்திரிபாலவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்கு மேற்குலகம் விரும்புகின்றது. மகிந்தரின் சீன சார்பு வெளியுறவுக் கொள்கைகளால் நீண்ட காலமாக அதிருப்தியடைந்திருக்கும் இந்தியாவிற்கும் இது ஏற்புடைய ஒன்றுதான். அதுவும் இந்தியாவிற்கு விரோதமான கொள்கைகளைத் தான் பின்பற்றப் போவதில்லை என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரிபால குறிப்பிட்டிருப்பது புதுடில்லிக்கு தித்திப்பான ஒரு செய்திதான்.
இங்கு ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் வாக்களிக்கின்றார்களோ, இல்லையோ, ஒன்றில் மகிந்தர் அன்றில் மைத்திரிபால தேர்தலில் வெற்றபெறத்தான் போகின்றார்கள். இதனைத் தீர்மானிக்கப் போவதும், தீர்மானிக்க வேண்டியவர்களும் சிங்கள மக்கள்தான். ஒருவேளை மகிந்தர் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும்சரி, மைத்திரிபால வெற்றிபெற்றாலும்சரி அது சிங்களவர்களின் பிரச்சினை. பாணுக்கும், பருப்புக்கும் வாக்களிக்கப் போகும் ஏழைச் சிங்கள மக்கள், எவர் ஆட்சிக்கு வந்தால் தமது வயிறு நிறையும் என்று எண்ணுகின்றார்களோ, அவர்களுக்குத்தான் வாக்களிக்கப் போகின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை பாணுக்கும், பருப்புக்கும் அப்பாற்பட்டது: தமது தாயகத்தையும், தேசிய உரிமையையும், தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சியுரிமையையும் மையப்படுத்தியது. பச்சை இனவாதிகளான மகிந்தராக இருந்தாலும்சரி, மைத்திரிபால சிறீசேனவாக இருந்தாலும்சரி இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு இவர்களால் அரசியல் ரீதியில் எவ்வித அனுகூலமும் ஏற்படப்போவதில்லை.
எனவே தமிழ் மக்களுக்கு ஒரேயொரு தெரிவுதான் உள்ளது: சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் அது. இது மேற்குலகிற்கு இரண்டு மெய்யுண்மைகளை இடித்துரைக்கும். ஒன்று சிங்கள தேசத்தின் எந்தத் தலைவரையும் தமிழர்கள் ஏற்கவில்லை என்பது. மற்றையது எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் தாயகம், தேசியம் தன்னாட்சியுரிமை ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழர்கள் விலகிக் கொள்ளப் போவதில்லை என்பது.
சரி, தமிழர்களின் ஆதரவின்றி மைத்திரிபால வெற்றிபெற்றால் ஈழப்பிரச்சினையில் மேற்குலகின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும்? என்று வாசகர்கள் கேள்வி எழுப்பக்கூடும். மேற்குலகில் இன்று தமிழர்களின் விடயத்தில் வீசும் அனுதாப அலை மகிந்தரின் பொருண்மிய – வெளியுறவுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்ற வகையில், திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மைத்திரிபாலவின் வெற்றி இவ் அனுதாப அலை அடிபட்டுப் போவதற்கு வழிகோலும் என்பதை மறுக்க முடியாது.
ஆனாலும் தமிழர்களின் ஆதரவின்றி மைத்திரிபால வெற்றியீட்டுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைவிட, தமிழர்களின் ஆதரவுடன் மைத்திரிபால வெற்றியீட்டுவதால் ஏற்படப் போகும் பாதிப்புக்களே அதிகம். ஒருவேளை தமிழர்களின் ஆதரவுடன் மைத்திரிபால வெற்றிபெற்றால், ‘நீங்கள் தெரிவு செய்தவருடன் நீங்களே பேசி உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று தமிழர்களை மேற்குலகம் கைவிட்டு விடும். ஆனால் தமிழர்களின் ஆதரவின்றி மைத்திரிபால வெற்றியீட்டும் பட்சத்தில் இதே நழுவல் போக்குடன் தமிழர்களை மேற்குலகம் புறந்தள்ளிவிட முடியாது.
எனவே சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர்ப்பதன் மூலம், ‘எம்மால் ஏற்றுக்கொள்ளப்படாத அந்நியர்களின் ஆட்சியின் கீழ் (அது மகிந்தரின் ஆட்சியாக இருந்தாலும் சரி, மைத்திரிபாலவின் ஆட்சியாக இருந்தாலும்சரி) உழல்வதற்கும், அவர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக எமது அரசியல் உரிமைகளைக் கைவிடுவதற்கும் நாம் தயார் இல்லை’ என்ற செய்தியை ஆணித்தரமாக மேற்குலகிடம் முன்வைத்துத் தமிழீழத் தனியரசுக்கான தமது அரசியல் முன்னெடுப்புக்களைத் தமிழர்கள் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.
இந்த வகையில் சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரின் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் (எழிலன்), ம.க.சிவாஜிலிங்கம் ஆகியோரும் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கதே. இங்கு தமிழர் தேசத்தின் நலன்களே முதன்மை பெறுகின்றன. இதுவே தமிழர் தேசத்திற்கு நன்மையை ஈட்டிக் கொடுக்கும்.

-கலாநிதி சேரமான்-

No comments:

Post a Comment