June 21, 2016

யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தினால் மூன்று கோடி பெறுமதியான செயற்கைக் கால்கள் வழங்க ஏற்பாடு!

யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவிலுள்ள சேலம் மாவட்ட றோட்டறிக் கழகங்களினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் அவயவங்களை இழந்தவர்களுக்காக செயற்கைக் கால்கள் வழங்கும் “ஹோப்” செயற்றிட்டம் நாளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.


செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்தியா – சேலம் 2982 மாவட்ட றோட்டறிக் கழகங்களின் ஆளுநர் ஆர். வாசுவும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ. ஏ. நடராஜன், சேலம் றோட்டறி மாவட்டத்தின் “ஹோப்” செயற்றிட்ட இயக்குநர் வி. சிவக்குமார் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த வருடம் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தியக் குழுவினரால் அளவுகள் பெறப்பட்ட சுமார் எழுநூற்றைம்பது பேருக்கு இந்த செயற்றிட்டத்தின் கீழ் நவீன இயங்கு திறன் மிக்க செயற்கைக் கால்கள் பொருத்தப்படவுள்ளன.

செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 22 ஆம் திகதி கிளிநொச்சியிலும், 23ஆம் திகதி முல்லைத்தீவிலும், 24 ஆம் திகதி திருகோணமலையிலும், 25ஆம் திகதி மட்டக்களப்பிலும் கால்கள் பொருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.

வடக்கு கிழக்கு பகுதிகளில் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் யாழ்ப்பாண றோட்டறிக் கழகம் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள றோட்டறிக் கழகங்களின் அனுசரனையுடன் இரு தடவைகள் இயங்கு திறன் மிக்க செயற்கைக் கைகள் பொருத்தியதுடன்,  போரினால் குடும்பத் தலைமையை இழந்த பெண் தலைமைக் குடும்பங்களுக்கு வாழ்வாதார விருத்திக்காக தையல் இயந்திரங்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment