June 24, 2016

உக்கிர போருக்கு முகம் கொடுத்த வன்னி மக்களை மறவாதீர்கள். சி.வி. கோரிக்கை!

வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.


யாழ்ப்பாணம் புத்தூர் தெற்கு , நவக்கிரி பகுதியில் வர்த்தகர் ஒருவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 15 வீட்டுத்திட்டங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நொந்து போன எம்மக்களைத் தாங்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பரோபகாரிகள் தயாராக இருக்கின்ற போதும் அவர்களின் பரோபகார சிந்தனைகள் தாராள மனப்பான்மைகள் ஆகியவற்றை நாம் முறையாக ஒழுங்கு செய்ய முடியாது முழுமையாகப் பயன்படுத்த முடியாது இருக்கின்றோம்.

இந்த நிலை மாற வேண்டும். கொடையாளர்களையும் வறுமையில் வாடும் எமது பயனாளிகளையும் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
.
முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தயார் செய்யப்பட்ட நியதிச் சட்டம் நிறைவுறும் நிலையில் உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் நிதி வழங்குபவர்கள் இந்த நிதியத்தினூடாகத் தாம் விரும்பியவாறு விரும்பிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

ஆளுநர் குழாமொன்றே அந்நிதியத்தைப் பரிபாலிக்கும். உரிய கணக்காய்வு போன்றவை காலத்திற்குக் காலம் நடைபெறும். அரசாங்க அனுசரணையுடனேயே அதை வழிநடத்த எண்ணியுள்ளோம்.

பலர் வன்னிப் பகுதியில் ஒரு நேர உணவுக்கே வழியின்றி, இருக்க இடமின்றி, தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளிலும,; மலசலகூட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் ஆகிய எந்தவித வசதிகளும் இன்றி வாடுகின்றார்கள். சிலர் பல்வேறு பாதிப்புக்களுடன் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களை இழந்து, கண்பார்வையற்று தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அம் மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

அன்பான என் சகோதர சகோதரிகளே! வன்னியை வாழ வைக்குங் கடப்பாடு எங்களுக்குண்டு என்பதை மறவாதீர்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டு இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்கு ஓடவே கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள். எமது மக்கள் யாவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல உத்தேசித்தால் நாம் ஏன் இத்தனை போராட்டங்களில் இறங்க வேண்டும்? பேசாமல் அரசாங்கம் செய்வதைச் செய்யட்டும் என்று விட்டு விடலாமே? வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள் அவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.


அண்மையில் கொஸ்கம சாலாவ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் அப்பாவி சிங்கள மக்களை கதிகலங்க வைத்தது. அது போன்ற எத்தனை வெடி விபத்துக்களைத் தமிழ் மக்கள் அனுபவித்து அல்லல்பட்டிருப்பார்கள் என்பதனை அனுபவ வாயிலாகவே இப்போது சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

அதற்காகச் சாதாரண சிங்கள மக்கள் தமது வருத்தங்களைத் தெரிவிக்கவும் பின்நிற்கவில்லை. நன்றாக வாழ்ந்த பல குடும்பங்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து 27 வருடங்களாக அகதி முகாம்களில் தரித்து நிற்கின்றார்கள். தமது  சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழக் கூடிய சூழ்நிலை எப்போது வரும், எப்போது வரும் எனக் காத்துத் தவம் கிடக்கின்றார்கள். இந்தக் காத்துக் கிடத்தலானது தெற்கின் மக்களைத் தற்பொழுது தாக்கியுள்ளது.

எம் மக்களின் பரிதாபகரமான நிலை பற்றி எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பல மேடைகளில் சிங்கள மக்கள் முன்நிலையிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் எமது மக்கள்  மீளக்குடியமர்த்தப்படுவதற்கான காலம் நெருங்கி வரவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.

ஈவினைப் பகுதி ஒரு காலத்தில் மஸ்கன் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழிற்சாலையைக் கொண்ட ஓர் இடமாக விளங்கியது. இங்கே மஸ்கன் நிறுவனத்தினால் நிறுவப்பட்டிருந்த கூரைத்தகடு தயாரிக்கப்படும் மிகப் பெரிய தொழிற்சாலை இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டு கொழும்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தமது பகுதியைச் சேர்ந்த தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான தொழிற்சாலைகள்; பல மூடப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இதனால் நட்ட மடைந்தவர்கள் எம்மக்களே.

வீடுகளைக் கட்ட முன்வந்திருக்கும் எமது கொடையாளர்கள் தொழில் வாய்ப்புக்களை மக்களுக்கு உண்டாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் பின்னிற்கக் கூடாது.

சிறிய சிறிய கைத்தொழில்களைச் செய்ய முன்வருவோர் ஆரம்ப முதலைப் பெற முடியாமல் வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சுழல் நிதியத்தை அமைத்து மக்களைக் குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட வைக்கும் அதே நேரம் சிறிய வட்டியில் முதல் பெற்று சிறுகைத்தொழில்களில் அவர்களை ஈடுபடவைக்கலாம். எடுத்த கடனைத் திரும்பப் பெறும் வகையில் நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

அதனால் சுழல் நிதியம் தொடர்ந்து மக்களுக்கு உதவி பயக்கும். நம்மை நாமே பார்த்தக் கொள்ளும், பராமரிக்கும் காலம் வந்துள்ளது. சூழலை அறிந்து நாம் செயற்பட முன்வர வேண்டும். என  தெரிவித்தார்.

திரைமறைவில் தமிழர்களுக்கு எதிரா நடவடிக்கை. சி.வி குற்றச்சாட்டு.

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன. என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கிரி பகுதியில் வர்த்தகர் ஒருவரினால் கட்டிக்கொடுக்கப்பட்ட 15 வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

சென்ற திங்கட் கிழமை மத்திய அமைச்சர் அவை அமைச்சர்களுடன் மற்றைய முதலமைச்சர்களுடன் அதிமேதகு ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது.

பல சவால்களை எதிர் கொண்டு முதல் நாளிரவு நான் கொழும்புக்கு இரயிலில் சென்றேன். கூட்டத்திற்குச் சென்றதுந் தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது. நான் சென்றதால் சதி அம்பலமானது.

வடமாகாணம் நோக்கி எமக்கு பொருளாதார மையமொன்றைத் தருவது போல் இது காறும் பெரிதாகக் கூறி வந்த கிராமிய பொருளாதார அமைச்சர் தன் உள்ளக் கிடக்கையை அன்று வெளியிட்டுவிட்டார்.

நான் அன்று வருகை தர இருந்ததை அவர் எதிர் பார்க்கவில்லை. அதாவது வடமாகாண மக்களால் பொருளாதார மையத்தை எங்கு நிறுவலாம் என்பதில் ஸ்திரமான நிலைப்பாடு  ஒன்று இல்லாததால் அதனை மதவாச்சியில் அமைக்க வேண்டும் என்று கேட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் “வேறு விடயங்கள்” என்று தலைப்பின் கீழ் தமது கருத்தைத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுடீனும் ஒத்துப் போனார் போல் தெரிந்தது.

நான் விளக்கமளிக்கையில் பொருளாதார மையம் வவுனியாவில் நிறுவுவது சம்பந்தமாக எமக்கு அறிவிக்கப்பட்டதும் ஐந்து இடங்களை அடையாளம் கண்டு அவற்றில் எது சிறந்தது என்று நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கேட்டோம்.

அவர்கள் தாண்டிக்குளத்திலும் மற்றைய மூன்று இடங்களிலும் அமைப்பது கூடாது என்றும் ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என்றும் கருத்து வெளியிட்டார்கள்.

தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாய கல்லூரியும் விவசாயப் பண்ணையும் பாதிக்கப்படுவன என்று கூறினார்கள். வேறு பல காரணங்களையும் முன்வைத்தார்கள். எனவே நான் ஓமந்தையில் நிறுவுமாறு அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.

அதன் பின் நான் பங்குபற்றாமல் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ ரிஷாட் பதியுதீன் தாண்டிக் குளத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி முடிவு எடுக்க வைத்தார். இந்தப் பிரச்சினையைத் தொடக்கி விட்டவரே அவர் தான்.

இது பிரச்சினையாகியவுடன் பொருளாதார மையத்தை இழக்கக் கூடாதென்ற காரணத்தினால் நான் அமைச்சர் ஹரிசனைப் போய் நேரில் சந்தித்தேன். அவர் தாண்டிக்குளமும் ஓமந்தையும் தூரமாய்ப் போய்விட்டன. வவுனியா நகரத்தினுள் ஒரு இடந் தரவேண்டும் என்று கேட்டார்.

வடக்கு நோக்கி அமைதலே உசிதம் இது வடக்குக்குக் கிடைக்க வேண்டிய மையம். எனவே மாங்குளத்தில் அமைப்பதே சிறந்தது. அப்படி இல்லை என்றால் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஓமந்தையே சிறந்தது என்று கூறிப்பார்த்தேன்.

அமைச்சர் ஒரேயடியாக நகரத்தினுள் இடந் தாருங்கள் என்று விடாப்பிடியாகக் கேட்டார். எனவே ஒரு வாரத்தினுள் நான் அவர் கேட்டவாறு A9 பாதையில்  இலங்கை போக்குவரத்து சபை  பஸ்நிலையத்திற்குப் பின்புறமாக மதவுவைத்த குளத்தில் ஐந்து ஏக்கர் காணிகளை அடையாளங் காட்டினேன்.

அது திரு.ரிஷாட்  பதியுடீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கம்பனிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் கூறினார். நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த  கம்பனி கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன்.

இது பற்றிய காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்று காலை அமைச்சர் கூட்டத்திற்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து அவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். எந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினேன்.

அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதார மையத்தைத் தர வேண்டும் என்று கூறி நிபுணர்கள் கூடாது என்று  கூறியிருப்பினும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக் குளத்தில் அமையுங்கள் என்றேன்.

முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன்.

மத்திய அமைச்சர் மதவாச்சிக்குக் கொண்டு போக ஆவணம் சமர்ப்பித்துள்ளார் என்பதை அமைச்சர் ரிஷாட் அறிந்து கூட மதவாச்சிக்கு எடுத்துச் செல்லும் திரு.ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் இணங்கியுள்ளார் என்று ஜனாதிபதிக்குக் கூறினார்.

தாண்டிக்குளத்தில் அமைக்கத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். ஜனாதிபதியோ சிரித்துக் கொண்டு இல்லை! இதை பிரதம மந்திரியுடன் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார்.

அமைச்சர் ரிஷாட்டுக்கு தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எமக்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. விவசாகக்கல்லூரி, விவசாய நிலம், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை.

ஆகவே தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் எமது கொடையாளர்களின் பரோபகாரம் உச்ச முக்கியத்துவத்தை அடைகின்றது. “எமக்கு நாமே” என்ற ஸ்லோகம் இவற்றினால் வலுவடைகின்றது.

எனவே எமது மாகாண முதலீட்டாளர்களும், தொழில் உரிமையாளர்களும் கூடுதலான தொழில்வளங்களை இப் பகுதிகளில் உருவாக்க முன்வரவேண்டும்.  அதன்மூலம் வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தொழில் வளங்களைப் பெற்று உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற பெருமையை தேடிக்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment