இலங்கையில் சிறுமிகள், சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோங்களுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் அவல நிலையை காணக்கூடியதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொட்டதெனியாவ பிரதேசத்தில் அண்மையில் 5 வயதான சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் 13 வயதான சிறுமி, மூன்று பேரினால், தொடர்ந்தும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று குறித்தும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில், கம்பஹா மீரிகம பிரதேசத்தில் 9 வயதான சிறுமி, அயல் வீட்டில் உள்ள இளைஞர் ஒருவரால், பாரதூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மீரிகம காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான இளைஞனை கைது செய்ய தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
பாடசாலை மாணவியான குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தொழில் புரிந்து வருகின்றனர். சிறுமி தனது தாத்தாவின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமி, அயல் வீட்டில் உள்ள இளைஞரால் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது பற்றி சிறுமி, தனது தாயிடம் கூறியதை தொடர்ந்தும் தாய் நேற்று மீரிகம காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மூன்றாம் ஆண்டில் பயிலும் இந்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரிகம காவற்துறையினர் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் தென் பகுதிகளில் மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளிலும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அவ்வாறான சம்பவங்களில் ஒரு சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன.
இதனால், சிறுவர்களை, கொடிய மனித மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க கிராம மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment