September 20, 2015

பருத்தித்துறை முனைப் பகுதி கடற்படை முகாம் முன்பாக மீனவர்கள் திடீர் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்து மீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி பருத்தித்துறை முனைப் பகுதி மீனவர்கள் நேற்று அங்குள்ள கடற் படை முகாம் முன்பாக திடீரெனப் போராட்டத்தில் குதித்தனர். மீனவர்களின் திடீர்
போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கடற்படை உயரதிகாரிகளும் வந்தனர்.
எமது பிரச்சினை தொடர்பில் பல தடவைகள் உரியவர்களிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமையாலேயே தாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர். பருத்தித்துறைக் கடற்பரப்புக்குள் கடந்த சில நாள்களாக ஊடுருவும் இந்திய மீனவர்கள் தமது தொழில் உபகரணங்களைத் தினமும் சேதப் படுத்துகின்றனர் என்று குற்றஞ்சாட்டிய மீனவர்கள் கடந்த வாரம் மட்டும் நூற்றும் மேற்பட்ட வலைகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டன என்றும் தெரிவித்தனர்.
இன்று (நேற்று) அதிகாலையும் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டன என்று விசனம் தெரிவித்த மீனவர்கள் இலங்கையின் எல்லைக்குள் அஞ்சி அஞ்சிப் பிரவேசித்த இந்திய விசைப்படகுகள் தற்போது எமது கிராம எல்லைவரை துணிச்சலுடன் வந்து செல்கின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடற்படையினரும், அதிகாரிகளும் இவற்றைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களாகவே உள்ளனர் என்று கவலை வெளியிட்ட மீனவர்கள். அதிக முதல் இட்டு தொழில் செய்யும் நாம் தினத்தோறும் நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டனர். கடற்படை உயரதிகாரிகள் இந்த விடயத்தை உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக மீனவர்களிடம் உறுதியளித்தனர். அதையடுத்து தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கடற் படை அதிகாரியிடம் கையளித்த மீனவர்கள் போராட்டத்தை முடித்து – கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment