June 24, 2016

UNHRC, பாதிக்கப்பட்வர்களின் பங்கேற்புடனான ஒரு தீர்வை முன்னெடுக்க வழிசமைக்குமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு பாதிக்கப்பட்வர்களின் பங்கேற்புடனான ஒரு தீர்வை முன்னெடுக்க வழிசமைக்குமா? என்பது பலரதும் ஏக்கம்.


2015 செப்டம்பர் ஐ.நா மனித உரிமைப் பேரவை பிரேரணை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றைப் பற்றி முக்கியத்துவப்படுத்தியது. எனினும் இது தொடர்பாக என்ன நடந்துள்ளது?

இலங்கை அரசின் நிலைப்பாடு பற்றி என்ன நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமைப் பேரவை முன்வைக்கின்றது? இவை பாதிக்கப்பட்ட, பலியாக்கப்பட்ட தொடரும் இனப்படுகொலையின் அடையாளங்களுக்கு என்ன நம்பிக்கையை தரப்போகிறது? என்பதை அனைவரும் நோக்குவது இன்றைய யதார்த்தத்தின் தேவை.

இலங்கை அரசு தமிழரின் அரசியல் அபிலாசைகளை  மதிக்காமல், அவர்களை கட்டமைப்புரீதியாக ஒடுக்கிவருவது வரலாறு. மனித நேயமின்றி இறுதிக்கட்ட போரில் அரசு நடந்துகொண்ட விதம் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இதனால் சர்வதேச குற்ற விசாரணை வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக இருந்தது. நீதியை உறுதி செய்ய கலப்புநீதிமன்ற பொறிமுறை முன்வைக்கப்பட்டபோது பல விட்டுக்கொடுப்புகளுடனேயே அது ஏற்கப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு மறுபடியும் வரலாற்றை தொடரும் வகையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என கூறிக்கொண்டிருக்கிறது. இதனை ஆழமாக நோக்கி சர்வதேச சமூகம் நீதியை உறுதி செய்ய வேண்டும். இது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடமை என்பது பாதிக்கப்பட்டவர்களின் நிலைப்பாடு.

தேவையில்லாத கருத்துக்களை கூறி காலத்தை விரயமாக்காமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை உண்மையுடன் தேடுவது அவசியம். ஒற்றையாட்சியை விட்டு விலகி, சமஷடி ஆட்சியைப் பற்றி தெளிவாக வலியுறுத்துவதும் சட்டரீதியாக அனைவரதும் அனைத்து உரிமைகளையும் உறுதி செய்வதும் அரசின் பொறுப்பு.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை,, சர்வதேச சமூகம், இலங்கை அரசு என்பவை இதனைச் செய்யாவிட்டால் எதிர்காலமும் கண்ணீருடனும் புலம்பலுடனுமே தொடரும் என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்றே.

இனப்படுகொலையின் தொடரே இராணுவமயமாக்கல். நடந்துகொண்டிருக்கும் காணி எல்லைப்பிரச்சினைகள் இதன் குறிகாட்டியே. அதன் அடையாளங்களாகவே போதைவஸ்து பாவனை, தற்கொலை, கொலை, கட்சி அரசியல் வெறி,  பிரதேசவாதம், வாள்வெட்டு – ரவுடித்தனம், விபத்து, விபச்சாரம், மனித நேயமற்ற பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள்… போன்றவற்றையும் நோக்க வேண்டியுள்ளது.

இவை மனித இருப்பின் அடிப்படைகளைப் பற்றி யோசிக்க விடாமல் சுயநலகனவுகளில், இனம், மதம், மொழி, பால் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சிறை வைக்கிறது.

கிரேக்க மொழி பேசும் குறிப்பிட்ட பெண்கள் பிரிவு முறையாக கவனிக்கப்படவில்லை எனும் பிரச்சினை தொடக்க கால திருச்சபையில் ஏற்பட்டபோது (திருவிவிலியம் - திருத்தூதர் பணிகள் 6:1-7) அதனை தீர்க்க அனைவரும் கலந்துரையாடினர்.

பாதிக்கப்பட்டவர்களிலிருந்து பொருத்தமானவர்கள் இப்பிரச்சினை ஏற்படாமலிருக்க நியமிக்கப்பட்டனர். புதிய கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதுபோலவே இலங்கையிலே இனப்பிரச்சினையாலே பாதிக்கப்பட்டோர் அவர்களது தீர்வுக்கு உரிய பங்கேற்பு முறையிலான பங்களிப்பை செய்ய சுதந்திரமாக சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். இதனை அடைய பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை கடந்து பங்கேற்பு ஜனநாயகத்தை அவர்களும் ஏற்று நடக்க வேண்டும்.

மன்னார் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியம்                                          

வவுனியா கிறிஸ்தவ ஒன்றியம்

வன்னி கிறிஸ்தவ ஒன்றியம்

வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம்

No comments:

Post a Comment