June 21, 2016

பயங்கரவாத தடைச்சட்டம்; ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் சந்தேகம்!

யுத்தம் முடிவுறுத்தப்பட்டதாக அரசாங்கம் கூறி வருகின்ற நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது  செய்யப்படும் நபா்களை கையாள வேணடிய நடைமுறைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள சூழலில், ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த அமர்வில் உறுதியளித்த பல விடயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவில்லை. ஆனாலும் இந்த அமர்வில் பங்கேற்றுள்ளதோடு ஸ்ரீலங்கா தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நற்பெயரை காப்பாற்றுவதற்கு பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்டுள்ள இந்த அறிவுறுத்தலும் அதன் ஒரு பகுதி என்ற கண்ணோட்டத்திலேயே அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

கைது செய்தல், விசாரணைகளை மேற்கொள்ளல், தடுத்து வைத்தல் தொடர்பிலான விடயங்களில் பொலிஸாருக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் வகையில் பயங்கரவாதச் தடைச் சட்டமானது (Prevention of Terrorism Act) 1978ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி அமரர் ஜே.ஆர்.ஜயவர்தனவினால் தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது. எனினும் நான்கு வருடங்களின் பின்னர் அதாவது 1982ஆம்  ஆண்டு இந்த சட்டம் நிரந்தரமாக்கப்பட்டது.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரானது என குறிப்பிடப்படும் இந்த சட்டத்தின் மூலம் பெரும்பாலும் தமிழ் இளைஞர்களே கைது செய்யப்படுகின்றர் என்ற குற்றச்சாட்டு கடந்த 30 வருடங்களுக்கும் காணப்படுகின்ற நிலையில் அந்த விடயத்தில் உண்மையில்லாமலும் இல்லை.

அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதலே மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அமைப்புக்களால் இந்த சட்டத்திற்கு வலுவான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை அதிகாரத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் செவிசாய்க்கவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் தனிநபர்கள் தொடர்பில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கடந்த மே மாதம் 18ஆம் திகதி சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. அதாவது கைது செய்யப்படும் நபர்களின் அடிப்படை உரிமைகள் அல்லது அவரது பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர் மனிதாபிமானத்தோடு நடத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டிந்தன.

சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், கைது செய்யப்படும் அவள் அல்லது அவனது பெயர் மற்றும் பதவிநிலைகள் தொடர்பில் அவரது உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு அறிவிக்க வேண்டியது அவசியம் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது.

மேலும், என்ன காரணத்திற்காக ஒருவர் கைது செய்யப்படுகின்றார் என்பது தொடர்பில் அவரது துணைவர், பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயம் என்பதோடு, கைது செய்யப்படுபவரின் பெயர், பதவி நிலைகள், கைதாகும் இடம், திகதி நேரம், எந்த இடத்தில் தடுத்து வைக்கப்படுகின்றார் என்பது பற்றிய விபரங்களையும் வெளியிட வேண்டுமெனவும் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

கைது செய்யப்படும் நபருக்கு தெரிந்த மொழியில் இந்த விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமெனவும் கைதாகும் குறித்த நபர் தனித்து இருந்தால், அவர் தன்னைப் பற்றிய தகவல்களை உறவினர்களிடம் அல்லது நண்பர்களிடம் அறிவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் பொலிஸாரோ, அல்லது முப்படையினரோ இது தொடர்பில் அவதானம் செலுத்தியதாக தெரியவில்லை என்றாலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பின்பற்றுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வாரம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியிருந்தார்.

அரசாங்க தரப்பு அதிகாரிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி பிரஜைகளை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும்,  2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்தபோதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் மொத்த எண்ணிக்கையின் உண்மை நிலவரத்தை அரசாங்கம் வெளியிடவில்லை எனவும் எனினும் சுமார் 120 தொடக்கம் 162 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை 11 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தையும் ஞாபகப்படுத்தினார். எனினும் இந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத் தரப்பு மௌனம் காத்ததே தவிர கருத்துக்களையோ அல்லது எதிர்ப்பினையோ வெளியிடவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால, முப்படைகளின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஐந்து பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை (17-06-2016) வெளியிட்டதோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் தொடர்பில் ஆயுதப்படைகளின்  தளபதிகள் மற்றும் பொலிஸ் தலைமைத்துவத்திற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கைது செய்யப்படும் நபர் ஒருவரின் பெயர், பதவி மற்றும் தரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான அடையாளப்படுத்தல் அவசியம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெண்கள் தொடர்பான கைது நடவடிக்கைகளின்போது தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புகள் பெண் அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டுமனவும் வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்படுவதற்கான காரணம் தொடர்பில் சந்தேகநபருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்பதோடு,  கைது குறித்து அவரது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஒரு நபரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறைகளை பின்பற்றுமாறும் தான் அறிவுறுத்தல் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் இது சுயநலத்துடன் அல்லது நாட்டின் நற்பெயரை பாதுகாக்கும் நோக்கிலேயே அவர் இந்த விடயத்தை  குறிப்பிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிவுறுத்தல்களில் ஒரு சிலதையே ஜனாதிபதி தனது அறிக்கையின் ஊடாக அறிவுறுத்தியுள்ளார். இது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில், எதிர்வரும் 27ஆம் திகதி ஸ்ரீலங்காவின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த விடயத்துடன் தொடர்புபட்டதாகவே ஜனாதிபதியின் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறும், கடந்த வருடம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் ஜெனீவாவில் கடந்த 13ஆம் திகதி தனது உரையில் வலியுறுத்தியிருந்தார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்குத் தேவையான அரசியல் சாசன மாற்றங்களையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அல் ஹுசைன் கடந்த 13ஆம் திகதி உரையாற்றியதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமையானது முற்றுமுழுதாக அரசியல் நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளது. மைத்திரிபால அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதோடு, பல போராட்டங்களை கைதிகளும், பொது அமைப்புகளும் முன்னெடுத்தன.

எனினும் மைத்திரிபால எவ்விதமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்பவர்கள் தொடர்பில் திடீரென ஜனாதிபதிக்கு எழுந்துள்ள கரிசனை நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை சர்வதேச ரீதியிலும், மனித உரிமைகள் பேரவையிலும் காப்பாற்றிக்கொள்ளும் ஒரு உபாயமாகவே அமைந்துள்ளது.

எது எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வில் உறுதியளித்த ஒருசில விடயங்களை பெயரளவில் நிறைவேற்றியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த அமர்விலும் ஏதோ சிக்கலை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை, அதிலிருந்த ஓரளவேணும் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார் என்பது மாத்திரம் வெளிப்படையான உண்மை.

No comments:

Post a Comment