June 21, 2016

எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சதீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டதா..?

சட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சதீவு. அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன்.
1974-ம் ஆண்டு கச்சதீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா.

மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காக கச்சதீவை மீட்பேன் என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

இது குறித்து சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. தி.மு.க உறுப்பினர் பொன்முடியின் கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்தார் முதல்வர்.

அவர் பேசும்போது, கச்சத்தீவு தொடர்பான கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து போராட்டம் நடத்தினாரா? மத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, கச்சத் தீவை மீட்பேன் என்று பேசவில்லை.

அன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்? ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்? உச்ச நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான். 2008-ம் ஆண்டு, மத்திய அரசை அணுகி எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இங்கே முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. இன்று மீனவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான்.

அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது" எனக் கொந்தளித்திருந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டுகாலமாக கச்சத்தீவு என்ற பெயர் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு அரசியலாக்கப்படுகிறது. அதன்பிறகு அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை.

உண்மையில், 1170-ம் ஆண்டில் இலங்கை மன்னன் நிசங்க மல்லனால் ராமேஸ்வரம், ராமநாதசுவாமிக்கு சாசனமாக ஒப்படைக்கப்பட்டதுதான் கச்சத்தீவு. அந்தக் காலகட்டங்களில் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நெடுந்தீவில் இருந்து பாலும், கச்சத்தீவில் இருந்து பூக்களும் கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளது. அப்படிப் பார்த்தால் ராமநாதசுவாமிக்குச் சொந்தமான கச்சத்தீவு என்பது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது.

இந்து அறநிலையத்துறையின் சட்டப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தவறு" என்றும் சொல்கின்றனர் இராமேஸ்வரம் கோவிலின் நிர்வாகிகள் சிலர்." கச்சத்தீவைப் பற்றிப் பேசுவதற்கு தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்குமே எந்தத் தகுதியுமில்லை.

அவர்களின் அரசியலுக்கு கச்சதீவு இரையாகிக் கொண்டிருக்கிறது. 1925-ம் ஆண்டிலேயே மதராஸ் ராஜதானியின், மீன்வளத்துறை மூலமாக இலங்கைக்கு கச்சதீவு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ' நமது மீனவர்களுக்கு அங்கே எந்த உரிமையும் இல்லை' என்ற ஆவணம், இப்போதும் மீன்வளத்துறை வசம் உள்ளது.

இதைப் பற்றி இப்போதைய அரசுக்குத் தெரியுமா?" என அதிர வைக்கிறார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன். தொடந்து அவர், இலங்கை அதிபரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்படும்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது' என்கிறார் முதல்வர். உண்மைதான்.

ஆனால், இந்திய வரைபடத்தில் இருந்து கச்சதீவை நீக்கி ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தது 1983-ம் ஆண்டு (மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எண்: RCF 23-75/83). அப்போது ஆட்சியில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.

இலங்கை அதிபருடன் பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட ஒப்பந்தம் ஒருபக்கம் இருந்தாலும், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரைபடத்தையே மாற்றி அமைக்கப்பட்டது எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில்தான்.

இதுபற்றி அன்றைக்கு சட்டசபையில் யாராவது பேசினார்களா? இராமேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சமூகத்து மக்கள் மீனவர்கள். இந்திய வரைபடத்தில் இருந்து கச்சதீவை நீக்கியதற்குப் பிறகுதான், இராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதற்கு முன்பு வரையில் இந்தளவுக்கு படகுகள் இருந்ததில்லை.

இப்போது பெரிய படகுகளில் மீன் பிடிக்கும் முதலாளிகளில் பெரும்பாலானோர் மீனவர்களே அல்ல என விவரித்தவர், பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் இராமநாதசுவாமிக்கு என கச்சதீவில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. அதை அழித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

அதன்பிறகு 1923-ம் ஆண்டில் ஓலைக்குடாவைச் சேர்ந்த ஒருவர்தான், கச்சதீவில் அந்தோனியார் வழிபாட்டைத் தொடங்கி வைத்தார்.

1170-ம் ஆண்டு முதல் 1197-ம் ஆண்டு வரையில் இராமேஸ்வரம் கோவிலுக்கு பல சாசனங்களை எழுதி கொடுத்திருக்கிறார் இலங்கை மன்னர் நிசங்க மல்லன்.

இராமநாத சுவாமிக்கு அருகிலேயே விஸ்வநாதர் கோவிலைக் கட்டியது, கிழக்குப் பகுதியை எழுப்பியது என பல நல்ல காரியங்களை அவர்தான் செய்தார்.

ஏனென்றால், அப்போது இராமேஸ்வரம் பகுதி என்பது இலங்கை மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இலங்கை சிங்களவர்களும் பாண்டியர்களும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் அளவுக்கு சம்பந்திகளாகவும் இருந்தனர்.

பிற்காலத்தில், சேதுபதி மன்னராக இருந்த சண்முக ராஜேஸ்வர சேதுபதி, கச்சதீவை குத்தகைக்கு விட முயற்சித்தபோது, ' அந்தப் பகுதி இலங்கைக்குக் சொந்தமானது.

நீங்கள் உரிமை கொண்டாட முடியாது' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்றவர், இறுதியாக, " நமது மாநிலத்தைப் பொறுத்தவரையில்,கச்சதீவு என்பது அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்து ட்ரம்ப் கார்டாக மட்டுமே பயன்படுகிறது.

மத்திய அரசு நினைத்தால் மட்டுமே, இலங்கை அரசுடன் நல்லுறவு அடிப்படையில் கச்சதீவை திரும்பப் பெறுவதற்கு முயற்சிக்கலாம். அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்கிறார் தீர்மானமாக. '

மத்திய அரசுடன் சுமூகமான நட்பு பாராட்டும் தமிழக அரசு, கச்சத் தீவு தொடர்பாக கொடுக்கும் அழுத்தங்கள் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்' என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

இதுதொடர்பான ஆவணங்களை இந்து சமய அறநிலையத்துறையும் மீன்வளத்துறையும் வெளிக் கொண்டு வருவது கூடுதல் நன்மைகளை உருவாக்கும் என்கின்றனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

No comments:

Post a Comment