June 20, 2016

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை ஏன்?' - பேரறிவாளனுக்கு வந்த திகைப்பான பதில்!

இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.


உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம்.

மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு மும்பை தடா நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தண்டனையை உறுதி செய்தது. ஆனால், தண்டனைக் காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்தது.

வழக்கு விசாரணையின் போது பதினெட்டு மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்து, ஜாமீனில் வெளியே வந்திருந்தார் சஞ்சய் தத். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், எஞ்சிய தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக மீண்டும் எரவாடா சிறையில், 2013-ம் ஆண்டு மே மாதம் அடைக்கப்பட்டார்.

இடைப்பட்ட காலத்தில் பலமுறை அவர் பரோலில் வெளிவந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே, அவர் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

குறிப்பாக, தண்டனைக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் இருந்த நிலையில், சிறை கண்காணிப்பாளர், ' தன்னுடைய அதிகாரத்தின்கீழ் விடுவிப்பதாக' அறிவித்திருந்தார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிவாளன், மிகுந்த அதிர்ச்சியோடு சில விஷயங்களை தனது வழக்கறிஞர்களிடம் குறிப்பிட்டார்.

அவர் கூறும்போது, ' உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2015 டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ' குற்றவியல் பிரிவு 435(1) கீழ் வரும் எந்த வழக்கிலும் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முடியாது' எனக் கூறியுள்ளது.

அந்தத் தீர்ப்பில், ' பிரிவு 432(7)(A) பிரிவின் கீழ் வரும் அனைத்து வழக்குகளிலும் தண்டனைக் குறைப்பு வழங்க மத்திய அரசால் மட்டுமே முடியும்' என வரையறை செய்துள்ளது.

இதில், மத்திய அரசைக் கலந்தாலோசித்து சஞ்சய் தத் விடுவிக்கப்பட்டாரா? என்பது இந்த வழக்கின் மிகப் பெரிய கேள்வி. இதையொட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு செய்ய இருக்கிறேன்' எனப் பேசியிருந்தார்.

இதுகுறித்து, கடந்த மார்ச் 24-ம் தேதி தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் எரவாடா சிறை நிர்வாகத்திடம் சில கேள்விளை முன்வைத்திருந்தார் பேரறிவாளன்.

அதில், சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, சான்றளிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும், எந்த அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டது, இது தொடர்பாக, மாநில அரசு மற்றும் சிறை நிர்வாகம் போன்றவை மத்திய அரசைக் கலந்து ஆலோசித்ததா? அப்படி ஆலோசனை நடத்தியிருந்தால் அது தொடர்பாக சான்றிளிக்கப்பட்ட ஆவணங்களின் நகல்களைத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார்.

தகவல்களைக் கேட்டு முப்பது நாட்களாகியும் எரவாடா சிறை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கடந்த மே 4-ம் தேதி மேல்முறையீடு செய்தார்.

அதற்குப் பதிலளித்த சிறை அதிகாரி, ஒரு மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது' என அலட்சியமாக பதில் கூறியிருந்தார்.

அதிகாரியின் பதிலால் அதிர்ச்சியடைந்த பேரறிவாளன், கடந்த 2-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஓர் அரசாங்கமோ, அரசு அதிகாரியோ தன்னுடைய அதிகார வரம்பைப் பயன்படுத்தி எடுக்கும் எந்த முடிவையும் மக்களின் ஆய்வுக்கு சமர்ப்பிக்க கடமைப்பட்டவர்கள். மூன்றாவது நபர் என்பன போன்ற காரணங்களைக் கூறி மறைக்க அரசியலமைப்புச் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற நியதியை விளக்கியிருந்தார்.

இந்தப் பதிலை எதிர்பார்க்காத எரவாடா சிறை அதிகாரிகள், வருகிற 28-ம் தேதி உங்கள் சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளுமாறு' பதில் அனுப்பியிருக்கிறது.

இதையடுத்து, சஞ்சய் தத் விடுதலை தொடர்பான ஆவணங்களைப் பார்ப்பதற்காக பேரறிவாளன் தரப்பின் பிரதிநிதி ஒருவர் எரவாடா சிறைக்குச் செல்ல இருக்கிறார்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவகுமார், சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கும் ஒவ்வொரு ஆவணமும் மிக முக்கியமானது. பேரறிவாளன் வழக்கின் அடுத்தக்கட்ட சட்ட நகர்வுகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

மும்பையில் 257 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் சஞ்சய் தத். அவரை விடுதலை செய்ததில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

எங்களின் கேள்விகளுக்கு எரவாடா சிறை அதிகாரிகள் கொடுக்கப் போகும் விளக்கம் மிக முக்கியமானதாக இருக்கும் என்றார் உறுதியாக.

நீங்கள் கேட்கும் விவரங்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என்பதே தகவல் உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது.

இப்படியொரு பதிலை அளிக்கும் அதிகாரிகள், சஞ்சய் தத் விடுதலையில் உரிய விதிகளைப் பின்பற்றியிருப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.

No comments:

Post a Comment