May 16, 2015

வரலாற்றுப் பெருங்கடமையை ஆற்ற மே18இல் முள்ளிவாய்க்கால் நோக்கி அணி திரள்வீர்!

வரலாற்றுப் பெருங்கடமையை ஆற்றுவதற்காக மே 18 இல் தமிழ் மக்களை முள்ளி வாய்க்கால் நோக்கி அணிதிரளுமாறு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன அழிப்புப் போரில் உயிர்நீத்த எங்கள் உறவுகளை நினைவு கூர்ந்து,
எங்களின் நியாயமான உணர்வுகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தி எம் மரபை மீள நிலைநிறுத்த ஒன்று கூடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிற நினைவேந்துதல் நிகழ்வு வருகிற மே 18 இல், முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க. பாடசாலைக்கு அருகில் முற்பகல் 10 மணியளவில் நடைபெறும் எனவும், மக்களைத் தவறாது கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
இத் தீவிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொன்மையான அரசியல் மற்றும் பண்பாட்டு இருப்பை தமிழர்கள் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்..
1500-களில் ஏற்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பின் போது தமிழர்கள் கொண்டிருந்த இறையாண்மை, இலங்கைத் தீவின் சுதந்திரத்தின் போது மீள வழங்கப்படவில்லை. மாறாக தமிழரின் இருப்பை இல்லாதொழிக்கும் நோக்கிலான இன அழிப்பு நடவடிக்கைகளே இங்கு வலுப்பெற்றன.
இந்நடவடிக்கைகள் போராக பேய் வடிவம் எடுத்து 2009 மே 18இல் தன் உச்சக்கட்ட கோரமுகத்தைக் காட்டியது.
இறுதிப்போரின் இறுதிக்கணங்களில் உலகம் பார்த்திருக்க நடத்தப்பட்ட இந்த இன அழிப்பானது மனித நாகரீகத்தின் இழிவான அடையாளமாகும்.
இந்நாளில் எண்ணிலடங்காத எங்கள் உறவுகளையும்,எங்கள் வளங்களையும் நாம் இழந்திருக்கின்றோம்.எங்கள் இனத்தின் விலை மதிப்பில்லாத இயங்கு சக்தியைத் தொலைத்திருக்கிறோம். வாழ்வை இழந்தோம் .வரலாறைப் பறிகொடுத்தோம். எக்காலத்திலும் எதன்மூலமும் ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை நாம் அனைவரும் முகம்கொடுத்தோம்.
காலமே கதறி அழுத இந்த கடும் பேரழிவுகளை நாம் சந்தித்து, வருகிற மே 18 உடன் ஆறு ஆண்டுகள் முடிவடைகின்றன.
இந்நிலையில் எங்கள் மரபுகளை மீள நிலை நிறுத்தும் வரலாற்றுப் பெரும்பணி எம்மைச் சார்ந்திருக்கிறது
இப்பூமிப்பந்திலே தனித்துவமான தேசிய இன அடையாளங்களுடனும் ,மிக நெடிய வரலாறு கொண்ட மொழி வளம் மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்புடனும் வாழ்கின்ற நாம் ,கால ஓட்டத்தில் எத்தகைய அழுத்தங்கள் எம் மீது திணிக்கப்பட்டபோதும் எம் மரபுகளைக் காக்கத் தவறியதில்லை.
அதிலும் உயிரிழந்தோரை நினைவு கூர்வதிலும் முன்னோர் வழிபாட்டிலும் ,உலகின் அனைத்து மேம்பட்ட தொன்மையான நாகரீகங்களுக்கும் முன்னோடிகள் நாமே.. வழக்கம்போலவே எம் மீது வரலாறு திணித்த இந்த பேரழிவுச் சூழலில் இருந்தும் எம்மை விடிவித்து உறவுகளை நினைவு கூரும் எம் மரபை மீள நிலை நிறுத்த உறுதி பூணுவோம்.
2009 இறுதிப்போரில் உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவேந்துவதற்காக வடமாகாணசபையால் வருகிற மே 18 இல் முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க. பாடசாலைக்கு அருகாமையில் முற்பகல் 10 மணியளவில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிற நினைவேந்துதல் நிகழ்வில் தவறாது கலந்து கொண்டு எமது வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம்.
இன அழிப்புப் போரில் உயிர்நீத்த எங்கள் அனைத்து உறவுகளையும் நினைவு கூர்ந்து, எங்களின் நியாயமான உணர்வுகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தி எம் மரபை மீள நிலைநிறுத்த ஒன்று கூடுவோம்.

No comments:

Post a Comment