July 22, 2016

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் தீவிரமடையும் கடலரிப்பு!

அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தின் கடற்கரைப் பகுதிகள் ஒரு காலத்தில் பாரியளவான நிலப் பரப்பினைக் கொண்டிருந்ததோடு, அங்கு ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இப்போது நிலைமையோ தலைகீழாக மாறிவிட்டது.



ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கடலை அண்டிய பல நூற்றுக் கணக்கான மீற்றர் நிலப்பரப்புகள் கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்களின் தொழிலிடங்களும் வாடிகளும் கடலுக்குள் மூழ்கிச் செல்வது மாத்திரமன்றி, கடற்கரையினை அண்டியிருந்த நூற்றுக் கணக்கான ஏக்கர் தென்னந் தோப்புகளும் அழிவடைந்தன. இதனால், ஒலுவில் பிரதேசத்தில் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்கான வருமானங்களை இழந்துள்ளன.

ஒலுவில் துறைமுகத்தை அண்டிய பகுதிகளிலேயே, கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ளதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், கடலரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்காக அவ்வப்போது, கடலினுள்ளும், கரைகளிலும் பாரிய பாராங்கற்களைப் பரவும் நடவடிக்கையில் துறைமுக நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்ற போதும், கடலரிப்பின் தீவிரம் குறைவடையவில்லை.

ஒலுவில் கடற்கரைப் பகுதியினை அண்டி அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதி நிலங்களும், அங்குள்ள கட்டிடங்களும் தற்போது கடலரிப்பின் காரணமாக சேதமடைந்து வருகின்றன.

இதேவேளை, இங்கு கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்கு முடியாமலும், தமது தோணிகள் மற்றும் படகுகளை தரித்து வைப்பதற்கான இடவசதிகள் இன்றியும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறுகின்றனர்.

ஒலுவில் கடலரிப்பினை அரசியல்வாதிகள் பலரும் பார்த்து விட்டுச் சென்றுள்ள போதிலும், இதுவரை, அவர்களில் எவரும் கடலரிப்பினைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடலரிப்பினால் இந்தப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில், ஊடகங்களும் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தபோதும், சம்பந்தப்பட்ட தரப்பினர் – இது விடயத்தில் முழுமையான கவனத்தினைச் செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் கடலரிப்பினை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படாது விட்டால், பாரிய அனர்த்தங்களை இந்தப் பிரதேசம் எதிர்கொள்ள நேரிடும் எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கடலரிப்பினால் இந்தப் பிரதேசம் இழந்தவை போக, இருக்கின்ற நிலங்களையாவது காப்பாற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.




No comments:

Post a Comment