March 5, 2015

யாருக்கும் சொல்லாதையுங்கோ…!

முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிப்போன நிலையினில் இப்போது நிற்கின்றது பரிதாபம் தான்.பாண்டவர்கள் ஜந்து நாடு கேட்டு கிராமங்கேட்ட கதை போல
முதலமைச்சர், அமைச்சர் எல்லாம் கேட்டவரிற்கு போட்டி போட சீற் கூட கடைசியில கிடைக்கவில்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தலில் சீற் கேட்டு கோபித்துக்கொண்டு வெளியால ஆள் வெளிக்கிட்டுவிட்டார். எனக்கென்னவோ அண்ணை கஜேந்திரகுமார் கூட்டமைப்பில இருந்து வெளியேறிய போது மஹிந்தவிடம் பணம் வாங்கிக்கொண்டதாக உவர் அவிழ்த்துவிட்ட கதைகள் தான் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றது. தான் இப்போது கூட்டமைப்போட இல்லையெண்டதை அவரே சொல்ல வேண்டியிருக்கின்றவளவிற்கு நிலைமை கவலைக்கிடம் பாருங்கோ.

பல்கலைச்சமூகம் நடத்தின போராட்டத்தின் மூலம் மீண்டும் மக்கள் தலைமை தாங்கி போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான நம்பிக்கை துளிர்த்திருக்கின்றது. அதிலயும் கூத்தமைப்பின் போலி அரசியலில் முகத்தை அம்பலப்படுத்தும் நிகழ்வாகவும் அப்போராட்டம் அமைஞ்சிட்டுது.முகம் செத்துப்போய் நாய்க்குட்டிகள் போல பின்னால் போன அந்த தலைவர்கள் முகம் இப்பவும் கண்ணுக்குள்ள நிற்கின்றது.இனியும் அவையின்ர பருப்பு வேகாது பாருங்கோ.சனம் தெளிவாகியிட்டுதுகள்.

வடமாகாணசபை அமைச்சர்களது வெள்ளை வேட்டிகளிற்குள்ளால பெருச்சாளிகள் எட்டிப்பார்க்கத்தொடங்கியிட்டுதெண்டு பேப்பர் பொடியள் கிசுகிசுக்கின்றாங்கள்.தோல் இருக்க சுளை விழுங்கின பூதங்கள் பற்றி கதைகள் வெளிச்சுக்கொண்டிருக்குது.ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் வாசிக்கின்றதாக கேள்வி.ஏற்கனவே சொகுசு வாகனம் வாங்கினதில் உள்குத்தெண்டு கதைக்கிறாங்கள்.அதிலயும் பொட்டுக்கேடுகளை வெளியால தெரியாதவாறு மூடி மறைக்கின்றதில பேப்பர் மேல்மட்டங்களை கவனித்துப்போடுறதாகவும் தகவல்.சரி சரி கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகவேண்டும்.

சமயங்களில சொல்லப்படுகின்ற விடயங்களில மத ரீதியான நம்பிக்கைகள் என்பதற்கப்பால் ஆசை நிறைவேறாமல் செத்த சீவன்கள் அந்தரித்து திரியுமெண்டு அம்மா முந்தி அடிக்கடி சொல்லுறவா.பல்கலை சமூகத்தின்ர போராட்டத்தை நல்லூரில முடிக்கின்றதென்று திட்டம் போட்டிருந்த போதும் திலீபனின் தூபியிலதான் அதனை முடிக்கின்றதென்ற எந்தவொரு திட்டமும் இருக்கவில்லையாம்.விதி இழுத்துக்கொண்டு போனது போல போய் முன்னால தலைமை தாங்கி வந்தவையை பின்னால திரண்ட சனத்திரள் தான் முன்னநகர்த்தி அங்கு கொண்டு போய் சேர்த்ததாம்.சிலதை நம்பித்தான் ஆகவேண்டியிருக்குப்போல.

தேர்தல் தொடங்கினால் கொழும்பில இருந்து ஆட்களை களம் இறக்கின்றது தமிழரசு பாரம்பரியம் பாருங்கோ.இப்ப புதிசா தமிழ் பேராசிரியர் ஒருத்தரை தீவகத்தால களமிறக்க சொல்லி சிங்கக்கொடி வீரன் ஓடர் போட்டிருக்கின்றாராம்.அவரது ஓடரை சிரமேற்கொண்டு முன்னாள் பல்கலை வித்துவான்கள் சிலர் கூடி கூட்டம் போட்டு கடிதம் எழுதியிருக்கினமாம்.ஏற்கனவே ஒதுக்கிவழங்க சீற் இல்லாமல் கூத்தமைப்பு சிதறப்போகின்றதென்றது அம்பலமாகியிட்டுது.இப்ப இதுவென்ன புதுக்கன்றாவியெண்டு மாவையர் தலையில அடிச்சுக்கொண்டிருக்கின்றதாக கேள்வி.

சுமந்திரனின்ர கொடும்பாவி எரிப்பினையடுத்து பலரும் முண்டியடித்துக்கொண்டு அண்ணை நாங்களில்லையெண்டு அவசரப்பட்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கினம்.இன்றும் சிலரோ தங்களின்ர நாய்குட்டி விசுவாசத்தை வெளிப்படுத்த ஆலாய் பறந்து மாகாணசபையில பேசித்தீர்க்கினம்.இன்னொன்று வீ ஆர் சிறீலங்கன் எண்டு உண்மையை போட்டு உடைச்சுப்போட்டுது.பலருக்கும் அடுத்து நாடாளுமன்ற தேர்தல்களத்தில சீற்பிடிக்கின்ற ஆசையோட திரியினமெண்டது வெளியால தெரியுது.ஓவர் குரைப்புக்கள் உடல்நலத்திற்கு நல்லதில்ல பாருங்கோ.

பல்கலைச்சமூகத்தை தொடர்ந்து இப்ப சிவில் சமூக அமையமும் களம் இறங்கியிருக்கின்றது.மனதார பாராட்டுக்கள்.ஆனால் கையெழுத்து திரட்டிறதை மேல்மட்டங்களோட நிப்பாட்டிப்போடாமல் கிராமங்கள் எல்லாம் கொண்டு போய் சேருங்கோ.பல்கலை சமூகம் அத்தனை மட்டங்களிலயும் போகக்கூடிய வலுவோட இருக்கின்றது.நிச்சயம் அதனால முடியக்கூடிய காரியம் .நீண்ட காலமாக தனிச்சு நின்று குரல்கொடுத்து வரும் சிவில் சமூக அமையத்திற்கு தோள்கொடுக்க வேண்டியது அனைவரதும் கடமையுமாகும்.மக்கள் அரசியல்வாதிகளை நம்பியிருக்கின்றதை விடுத்து தாங்களே தலைமை தாங்கி போராடுற மனப்பாங்கிற்கு வந்தது பெரிய அதிசயம் தான் பாருங்கோ.

- இது இதுநம்தேசம்

No comments:

Post a Comment