கடந்த அரசாங்கம் யுத்தத்தால் எமது தமிழ் மக்களை அழித்தது, யுத்தம் ஓய்ந்து விட்டது தற்போது மதுவைக் கொடுத்து எம்மை அழிக்க முற்படுகின்றது ,இதுதான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியா? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது, இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, திவிநெகும பணிப்பாளர், திவிநெகும வங்கி முகாமையாளர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில், கடந்த காலத்தில் ஆட்சி புரிந்தவர்கள் எமது மக்களை ஏமாற்றிப் பிழைத்தவர்கள். திவிநெகும என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் நிதியில் கைவைத்தமையால் தான் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சிறையில் இருந்தார்.
எங்கள் மக்களுக்கு செய்த பாவத்தின் பலன் அவரை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்று இந்த சமுர்த்தி உதவியைப் பெறுவதற்கு எமது மக்கள் அதிஸ்டசாலிகள். எனவே இதனைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
இது உங்களது நிதி இதனை யார் சுரண்டினாலும் அவர்களுக்கு தகுந்த தண்டணை வந்து சேரும். அதுமாத்திரமல்ல கடந்தகால ஆட்சியில் பல அநீதிகள் எமக்கு இடம்பெற்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகத் தான் கிழக்கின் உதயம் என்ற திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டது.
சென்ற வருடம் 250 மில்லியன் கிழக்கின் உதயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தது. ஆனால் அதில் பட்டிப்பளைப் பிரதேசத்தில் அரை மில்லியன் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டது. கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு அதாவது ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்பட்டது என்றால் சென்ற அரசு எவ்வாறு எமது மக்களின் அபிவிருத்தியில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையில் மிகவும் வறிய மாவட்டம் அதிலும் எமது பிரதேசங்கள் மிகவும் வறிய நிலையில் இருந்திருக்கின்றது. யுத்த காலத்தில் படுவான்கரை பகுதியில் ஒரு மதுபானசாலைகளும் இருக்கவில்லை. ஆனால் தற்போது இந்தப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் ஒன்பது மதுபானசாலைகள் இருக்கின்றன.
யுத்தத்தால் எமது தமிழ் மக்களை அழித்தது முன்னைய அரசாங்கம். தற்போது யுத்தம் ஓய்ந்து விட்டது மதுவைக் கொடுத்து அவர்களை மீண்டும் அழிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான மதுபானசாலைகளை இங்கு அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் இதுதான் அதன் அபிவிருத்தி. தற்போது அவ்வாறான நிலைமாற்றப்பட்டு ஜனவரி 08இன் பின் ஒருமாற்றம் வந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றத்தின் பொறுப்பு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு உரியதாக இருக்கின்றது.
மைத்திரிபால சிறிசேனவாக இருக்கலாம் ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கலாம் இவர்கள் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் வாக்கினால் வந்தவர்கள் அந்தப் பெருமை எமது மக்களுக்கு இருக்கின்றது.
அந்த வகையில் எமது மக்களைக் கொண்டு வாக்களிக்க வைத்த பெருமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. நாங்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றோமே தவிர அரசாங்கத்தில் மத்திய அரசில் அமைச்சுப் பதவிகள் ஏதும் எடுக்கவில்லை.
ஏனெனில் எமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைத்து எமது இளைஞர்கள் எந்த நோக்கத்திற்காக தியாகத்தினைப் புரிந்தார்களோ அந்தத் தியாகத்திற்கு சரியான தீர்வு வரும் வரைக்கும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் வரை நாம் மத்திய அரசில் அமைச்சுப் பதவியைப் பெறப்பேவதில்லை.
ஆனாலும் அரசாங்கம் செய்கின்ற நல்ல விடயங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றோம். கடந்த காலங்களில் எல்லாம் நாம் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை. நாங்களும் கலந்து கொள்வதுமில்லை.
தற்போது நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் நாம் அதன் பல செயற்திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment