சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வலியுறுத்துகிறோம் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி இமானுவேல் செபமாலை தெரிவித்துள்ளார்.
இன்று மன்னாரில் நடைபெற்ற காணாமல் ஆக்கபடுதலுக்கு எதிரான சர்வதேச தின நிகழ்வு நடைபெற்றபோது அந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஆர்ப்பாட்டங்களை செய்தோம். காணாமல் போனவர்களை கண்டறிவதே எமது நோக்கமாக இருந்தது.
ஆனால் ஆட்சியாளர்களோ இது தொடர்பாக விசாரணை செய்யவில்லை. ஆள் கொணர்வு மனுக்களை பதிவுசெய்தோம் அது இழுத்தடிக்கப்பட்டது. மனுக்களை கொடுத்தார்கள் அறிக்கைகளை கொடுத்தார்கள் அவை பலனளிக்கவில்லை.
குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னால் உறவுகளை இழந்தவர்கள் தமது வாக்கு மூலங்களை பதிவு செய்தார்கள். ஆனால் அந்த காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இது வரை சரியான பதிலை தரமுடியவில்லை.
ஆணைக்குழு நடத்தபடுகின்ற விதத்திலே ஏராளமான தவறுகள் இருக்கின்றன. இந்த ஆணைக்குழுவினால் எங்களுக்கு நீதிகிடைக்கப் போவதில்லை என்று சொல்லி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், சிவில் சமூக அமையம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு என்பன மாறி மாறி மனுக்கள் கொடுத்தன.
ஆனால் எதற்குமே இந்த ஆட்சியாளர்கள் அசையவில்லை.
ஆகவே தான் இந்த காலகட்டத்தில் பார்க்கும் போது சர்வதேசமும், இலங்கை அரசாங்கம் மற்றும் கூட்டமைப்பிலே இருக்கின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளக விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நாங்கள் அறிகிறோம்.
மீண்டும் மீண்டும் எங்கள் மக்களை காட்டிகொடுக்கின்ற செயற்பாடுகளை எமது தமிழ்த் தலைவர்களும் அதேபோன்று சிங்கள தலைவர்களும் செயற்பட்டு கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
தென் இலங்கையில் பார்க்கின்றபோது பல வழக்குகள் தள்ளுபடியாக்கபட்டிருக்கின்றன. மைத்திரி அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சியாளர்கள் நீக்கப்பட்டு தமக்கு சாதகமான ஆட்சியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட சிலர் தேசிய பட்டியலூடாக தமக்கு சார்பானவர்களை தெரிந்து எடுத்திருக்கிறார்கள்.
தென் இலங்கையில் நாங்கள் பார்க்கும்போது மகிந்த ராஜபக்ச காலத்தில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் தற்போது உள்ள விசாரணை போதும் என எந்தவித ஆதாரமும் இல்லாமல் எதுவிதமான காலக்கேடும் இல்லாமல் அதற்கு ஒத்துப்போகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.
குறிப்பாக எங்களுடைய வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. காணாமல் போணவர்கள் ஒருவர் கூட இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அரசியல் கைதிகள் பத்து வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரை இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும், பாதுகாப்பு படைகளாலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
பாதிக்கபட்டவர்கள் அழுது அழுது தங்களினுடைய கவலைகளை சொல்லக்கூட இன்றுவரை பயந்து கொண்டு இருக்கிறார்கள்.
பிரதீப் எக்னெலிகொட கடத்தல் விவகாரத்தில் மூன்று இராணுவத்தினரை கைது செய்துள்ளார்களாம். ஏன் என்றால் சர்வதேச ரீதியில் பிரதீப் எக்னெலிகொட பிரபல்யமாகியுள்ளதால் சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக இவ்வாறு செய்கிறார்கள்.
இந்த இராணுவத்தினர் கைது செய்யபட்டார்களோ அல்லது கைது செய்யபடவில்லையே தெரியாது. ஆனால் நாடகம் ஆடுவது போலவே தெரிகிறது.
சர்வதேச நாடுகள் தங்களின் சுயநலத்திற்காக இதனை பாவிக்கிறார்கள். இலங்கை தேசத்தை சர்வதேசம் தங்களினுடைய சுயநலத்திற்காக பாவித்து கொண்டு எங்களை பகடைக் காய்களாக ஆள்கின்றார்கள்.
சர்வதேசம் எங்களுக்கு நீதியை பெற்றத் தரும் என்று நாங்கள் ஏமாந்து ஏமாந்து களைத்து போய்விட்டோம். ஆகவே இந்த காலகட்டத்திலே நாங்கள் என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் போது எமது இதயத்திலே இரண்டு விதமான சிந்தனை தோன்றுகிறது.
ஒன்று நாங்கள் கூனிக் குறுகி எதை என்றாலும் தாங்கள் என்று சொல்லி அவர்கள் தருகின்ற பிச்சையை நாங்கள் எடுக்கவேண்டும் இல்லை என்றால் துணிந்து நின்று எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடவேண்டும்.
ஆகவே நாங்கள் எதை தெரிந்தெடுப்பது என்பது எங்களுக்கு விடப்படுகின்ற சவாலாகும்.
கடந்த முப்பது ஆண்டுகளாக எமது உரிமைக்காக போராடிப் போராடி களைத்துவிட்டோம். எமது இளைஞர்கள் எல்லாம் கொன்று அழிக்கப்பட்டுவிட்டார்கள். இனிப் போராடுவதற்கு பிள்ளைகள் இல்லை அப்படி என்றால் யார் போராடுவது? என்ற கேள்வி வருகிறது.
ஆகவே நாங்கள் விரக்தியின் நுனியில் தள்ளப்பட்டிருக்கின்றோம்.
உள்ளக விசாரணைகள் வேண்டும் என்று சொல்கிறவர்கள் யாரை யார் விசாரிக்க போகிறார்கள். இங்கு ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கம் கடத்தல் செய்யவில்லை, எந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை கொல்லவில்லை, எந்த அரசாங்கம் அநீதி இழைக்கவில்லை, இலங்கையில் எந்த அரசாங்கம் மனித உரிமை மீறல்களை செய்யவில்லை.
யார் யாரை விசாரிப்பது? ரணில் ரணிலை விசாரிக்க முடியுமா? ராஜபக்சவை விசாரிப்பது என்றால் ரணிலை யார் விசாரிப்பது? ஆகவே இவ்வாறான கேள்விகளுக்கு அவர்கள் எவ்வாறு பதில் சொல்வார்கள் என்ற ஆதங்கம் எங்களில் இருக்கிறது.
அகவே இந்த காலகட்டத்திலே யாரும் பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம். ஆகவே இந்த உலக வல்லரசுகளும் எம்மை கைவிட்டதுபோலவே இருக்கின்றது.
ஆகவே காணாமல் போனவர்களை தேடுவதை விட எமக்கு வேறுவழி இல்லை. நாம் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று சொன்னாலும் சர்வதேசம் கருத்தில் கொள்வதாக இல்லை. ஏன் என்றால் நாம் பலவீனப்படுத்தபட்டுள்ளோம்.
பலம் உள்ள பக்கம் தான் அரசுகள் சேர்கின்றன. ஆகவே இவ்வாறான சிந்தனை எமது உள்ளத்தில் இருக்கின்ற போதும் இந்த காணாமல் ஆக்கபடுவதற்கு எதிரான தினத்திலே மன்னார் பிரஜைகள் குழு மற்றும் வட கிழக்கில் காணாமல் ஆக்கபட்டவர்களின் குடும்பங்களின் சங்கமும் வலியுறுத்தி சொல்லது உள்ளக விசாரணைகளில் துச்சமும் எமக்கு நம்பிக்கையில்லை.
கடந்த காலங்களிலே உள்ளக விசாரணைகளில் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ஆகவே சர்வதேச தரத்திலான சர்வதேச நாடுகள் இவ் விடயத்தில் தலையிட்டு சர்வதேச விசாரணைக்கூடாக ஒரு பொறிமுறையை உருவாக்கி காணாமல் போனவர்களை கண்டுபிடிக்ககூடிய பொறிமுறையை உருவாக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்
No comments:
Post a Comment