யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் இளம்யுவதிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். தறிகெட்டு அலையும் வாலிபர்கள் பேரூந்து நிலைய சுற்று வட்டாரங்களில் பெண்களுடன் எல்லை மீறி நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் அலுவலகம், கல்வி, சொந்த அலுவல்களிற்காக நகரிற்கு வரும் யுவதிகள் சிரமங்களை சந்திப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்லும் மாணவிகளை குறிவைத்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாலிபர்கள் பேரூந்து நிலையப் பகுதிகளில் முகாமிட்டு நிற்பதை அவதானிக்க முடிகிறது. பேரூந்துகளில் வந்திறங்கி, குறுக்குச் சந்துகளினால் பிரதான வீதிகளை நோக்கி செல்லும் யுவதிகளே அதிகளவில் சிரமங்களை சந்திக்கிறார்கள்.
பேரூந்து நிலையத்தையும் ஸ்ரான்லி வீதியையும் இணைக்கும் குறுக்குச் சந்தே ரௌடிகளின் கோட்டையாக உள்ளது. அங்கு அமைந்துள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிற்பவர்கள், வீதியோரங்களில் நிற்கும் தொலைபேசி அட்டை விற்பனை முகவர்கள், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் மீதே பெண்கள் அதிகளவில் குற்றம் சுமத்துகிறார்கள்.
குறிப்பாக பேரூந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களின் பணியாளர்கள் மற்றும் தொலைபேசி அட்டை விற்பனையாளர்கள் மாணவிகளுடன் எல்லைமீறி நடப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். ஆரம்பத்தில் மாணவிகளின் பக்கமாக நடந்து சென்று, விற்பனையென்ற பெயரில் ஜொள்ளு விட்டவர்கள், பின்னர் மாணவிகளை நகர விடாமல் முன்பக்கமாக சென்று மறித்து ஜொள்ளு விட்டார்கள். இதனை யாரும் தட்டிக் கேட்காமல் விட்டதை தொடர்ந்து, அந்தப்பகுதியில் மாணவிகளின் கைகளை பற்றி இழுக்கும் நிகழ்வுகள் சாதாரணமாகி விட்டது.
வாலிபர்களின் அத்துமீறலை பகிரங்கமாக முறையிடவும் இந்த மாணவிகள் தயங்குகிறார்கள். அந்தபகுதியில் பொலிசாரோ, வேறு பொறுப்பானவர்களோ இல்லாததும், பின்விளைவுகளை சிந்தித்தும் மாணவிகள் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது சிரமப்பட்டு வருகின்றார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகள் வேறுவிதமான விளைவுகளை சந்திக்கிறார்கள். அண்மையில் மேற்படி குறுக்குச்சந்தின் நுழைவாயிலில் உள்ள பழக்கடையில் நிற்கும் கண்ணாடி அணிந்த வாலிபனின் சில்மிசத்திற்கு யுவதியொருவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எல்லைமீறினால் பொலிசில் புகாரளித்து விடுவேன் என எச்சரித்துவிட்டு சென்றுள்ளார். மாலையில் அவர் திரும்பி வரும்போது, பழுதடைந்த சிறிய பழம் ஒன்றினால் அந்த யுவதியின் பின் பகுதியில் எறிந்துள்ளான் அந்த வாலிபன். வெள்ளைநிற பாவாடை அணிந்திருந்த யுவதி இந்த சம்பவத்தால் பெரும் அசௌகரியத்தை சந்தித்ததை அங்கு நின்றவர்கள் அவதானித்த போதும், யுவதிக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல, மேற்படி குறுக்குச்சந்தில் நான்கைந்து வாலிபர்கள் கூட்டமாக சென்று வேறுவிதமான நடவடிக்கை ஒன்றிலும் ஈடுபடுகிறார்கள். நடந்து செல்லும் மாணவிகளை நான்கைந்து பேரும் விரைவாக சென்று, இரண்டு பக்கங்களினாலும் கடந்து செல்கிறார்கள். அவசர அலுவலாக செல்பவர்களை போல விரைந்து கடக்கும் சமயத்தில் மாணவிகளின் பின்பகுதிகளில் தட்டிவிட்டு செல்வதையும் அவதானிக்க முடிகிறது. இரண்டு பக்கத்தாலும் நான்கைந்து இளைஞர்கள் கடந்து செல்வதால், யார் தட்டிவிட்டு செல்கிறார்கள் என்பதை தெரியாமல் மாணவிகள் மௌனமாக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
No comments:
Post a Comment