April 15, 2015

தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா (படம் இணைப்பு)

யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரிலும் மறுநாள்
12.04.2015 ஞாயிற்றுக்கிழமை வால்ட்றோப் என்ற நகரிலும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
மண்டபம் நிறைந்த மக்களுடன் மாமனிதர் இரா . நாகலிங்கம் அவர்களின் அரங்கத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வு அரங்கேறியது . தமிழ்க் கல்விக் கழகத்தின் கால் நூற்றாண்டு அகவை நிறைவு விழா அதன் பரிணாம வளர்ச்சியை உறுதிப்படுத்தியது.
புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் தமிழ்க் குழந்தைகள் தொன்மை மொழியாக செம்மொழியாக இருக்கின்ற தமிழ் மொழிக்கு செழுமையும் புதுமையும் தந்து காத்து வருவதை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக மதிப்பளிப்பை பெற்ற ஒரு மாணவி அரங்கத்தில் தனது கருத்தை தெரிவிக்கையில் ; “இது தான் என் நிறம் , இது தான் என் இனம், நான் தமிழ் என்று எங்கும் உரத்து கூறுவேன்” என மண்டபம் நிறைந்த மக்களை நோக்கி தெரிவித்த பொழுது தமிழ் நிச்சியமாக வெல்லும் என்ற உறுதியை உணரக் கூடியதாக இருந்தது .
விழாவின் பிரதம விருந்தினர்களாக யேர்மனிய அரசியற் கட்சிகளிலிருந்தும் தமிழ்த் தேசியம் சார்பான பணியாளர்களும் கலந்துசிறப்பித்துவருகின்றார்கள். விழாவில் தமிழ்த்திறன், தேர்வு, ஆசிரியர்கள், நிர்வாகிகள், 12 ஆம் ஆண்டுவரை கற்றவர்கள் மற்றும் பட்டயச் சான்றிதழ் கற்றவர்கள் போன்றோர் மிகவும் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டு வருகின்றார்கள். மதிப்பளிப்புக்களை அலங்கரிக்கும் நிகழ்வுகளாகத் தமிழ்க் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
பிரதம விருந்தினர்களாக யேர்மனிய அரசியற் கட்சிகளில் இருந்து வருகை தந்தோர் விழாவின் ஒருங்கிணைப்பையும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பணியையும் நேரில் கண்டு வியர்ந்து நின்றார்கள் . அவர்களின் முழு அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு நிறுவனமாக தமிழ்க் கல்விக் கழகம் திகழ்கின்றது .
விழா நாடு முழுவதிலும் 5 அரங்குகளில் நடைபெறுவதற்கான திட்டமிடலில் 18.04.2015 ஸ்ருற்காட் நகரிலும் மறுநாளான 19.04.2015 புறுக்சால் என்ற இடத்திலும் நடைபெறவுள்ளது. நிறைவு விழாவாக 25.04.2015 சனிக்கிழமை கேர்பன் நகரிலும் நடைபெறவுள்ளது.வரும் வாரங்களில் தொடரும் வெள்ளி விழாவிற்கு தமிழ் உறவுகள் அனைவைரையும் அன்போடு அழைக்கின்றோம்.




































No comments:

Post a Comment