June 14, 2016

மயிலிட்டி - பலாலி மக்கள் ஏதிலிகளாகி 26 வருடங்கள்! - தெல்லிப்பளையில் நாளை விசேட வழிபாடு!

யாழ்ப்பாணம் மயிலிட்டி - பலாலியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து நாளை புதன்கிழமையுடன் 26 வருடங்கள் நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

இதில் மயிலிட்டி - பலாலி மக்களைக் கலந்து கொள்ளுமாறு, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம் இது தொடர்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி எமது மக்கள், அப்பு - ஆச்சியர் ஆண்ட பூமியை விட்டு இடம்பெயர்ந்த நாள். சில மணி நேரங்களில் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையில் புறப்பட்டு, 26 ஆண்டுகளாக அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நாம் எமது மண்ணிலிருந்து விரட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டை ஏற்பாடு செய்துள்ளோம். எமது மண்ணுக்கு விரைவில் நாங்கள் திரும்ப வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து நாளை (14) புதன்கிழமை 10 மணிக்கு விசேட பூஜை இடம்பெறவுள்ளது.

இதில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள், உறவினர், நண்பர்கள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment