June 10, 2016

11-ம் தேதி பேரணியில் பங்கேற்பவர்களுக்கு பேரறிவாளன் விடுக்கும் வேண்டுகோள்!

11-ம் தேதி பேரணியில் பங்கேற்பவர்கள் எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது என பேரறிவாளன் வேண்டுகோள் விடுத்ததாக அவரை சந்தித்த அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை, அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் இயக்குநர் ஜனநாதன் ஆகியோர் (9-ம் தேதி) சந்தித்து பேசினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் கூறுகையில், ”வருகின்ற 11-ம் தேதியோடு பேரறிவாளனை சிறையில் அடைத்து 25 ஆண்டு முடிகிறது. அதையொட்டி ஏழு பேர் விடுதலைக்காகவும் வரும் 11-ம் தேதி நடக்க இருக்கும் பேரணியில், கட்சி பாகுபாடு இன்றி, கட்சி அடையாளமின்றி அனைவரும் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்திருந்தேன். மீண்டும் ஒரு முறை அன்போடு அழைக்கிறேன். என் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இருசக்கர வாகன பேரணியில் கலந்துக்கொள்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், இந்த பேரணியில் ஈடுபடுபவர்கள் எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது எனவும் பேரறிவாளன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த பேரணி பேரறிவாளனுக்கும், எனக்கும், மற்ற ஆறு பேருக்கும் புதிய நம்பிக்கையை தரும். மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜெயலலிதா, அவர்களின் விடுதலைக்காக முயற்சி எடுப்பார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். பேரறிவாளன் 25 ஆண்டு கால சிறை வாழ்க்கையிலிருந்து மீண்டு வருவான் என்று காத்திருக்கிறோம்” என்றார்.

இயக்குனர் ஜனநாதன் கூறுகையில், ”வருகின்ற 11-ம் தேதி ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி அற்புதம்மாள் தலைமையில் வேலூர் சிறையிலிருந்து – சென்னை ஜார்ஜ் கோட்டை நோக்கி நடக்க இருக்கும் வாகனப் பேரணி வெற்றி பெற வாழ்த்து கூறினேன். இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேரறிவாளன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தன் அனுபவங்களை நாவலாக எழுத தொடங்கியிருக்கிறார். அதனை விரைவில் எழுதி முடித்து வெளியிட இருக்கிறார். தன் வாழ் நாள் முழுக்க தனிமை சிறையிலேயே கழித்து வரும் அவர் விடுதலை பெறும் கோரிக்கைக்கு வலு சேர்க்க அனைவரும் திரளாக 11-ம் தேதி பேரணியில் கலந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment