June 10, 2016

எமது உறவுகளை விதைத்த இடத்தில் வாகனம் ஓடவா போகின்றீர்கள்? உறவினர்கள் விசனம் !

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் ஊடாக வீதி அமைத்து,
தமது உறவுகளை அடக்கம் செய்த இடத்தின் மேல் வாகனம் ஓடவா போகின்றீர்கள் என உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கவனமெடுக்குமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் ஊடாக வீதி அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

1995 காலப் பகுதியில் முள்ளியவளையில், தமிழர் தம் வாழ்வுக்காக போராடி உயிர்நீத்த உறவுகளின் உடல்கள் அடக்கம் செய்வதற்கான துயிலுமில்லம் இடவசதி போதாமை காரணமாக வீதியொன்றை மூடியுள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதியெங்கும் உயிர்நீத்த உறவுகள் புதைக்கப்பட்டதுடன், இதற்கு பதிலாக மக்கள் பாவனைக்காக மாற்று வீதியொன்று அமைக்கப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர், இந்த துயிலுமில்லம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.

தற்பொழுது, தமது உறவுகள் புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலாக இராணுவத்தினர் நடமாடித் திரிவதாகவும் வாகனம் ஓடுவதாகவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட வீதி இருக்கும் இடத்திற்கு சொந்தமான நபர் புலம்பெயர்நாடு ஒன்றிலிருந்து வருகை தந்து, தனது காணியை கையகப்படுத்தி இந்த பாதையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இதனால் துயிலும் இல்லத்திலுள்ள பழைய பாதை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

எனவே, இதற்கு அருகில் வேறு வீதிகள் காணப்படுவதால், அவற்றை பயன்படுத்துமாறும், தமிழ் உறவுகள் இவ்விடத்தின் புனிதத்தன்மையை காக்க முன்வருமாறும் உயிர்நீத்த உறவுகளின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே இந்த விடயம் குறித்து மக்கள் பிரதிநிதிகளை கவனமெடுக்குமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment