September 3, 2014

வணக்கம் சீமான் அண்ணா! : ச.ச.முத்து!!

தங்களின் அண்மைய அரசியல் நகர்வுகள், அறிக்கைகள், பேச்சுகள் பற்றி உங்களுடன் கதைப்பதற்கே இந்த மடல். எனக்குள் மட்டுமல்லாமல்,
எமக்குள் எழுந்துள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்த மடல்.
முதலில் உங்களை எமக்கு அறிமுகம். ஒரு நல்ல திரைப்படஇயக்குநராக, அதிலும் தமிழ்தேசியம், தமிழ் மொழி என்பனவற்றை வர்த்தக சினிமாவினுள்ளும் தரமுடிந்த அளவுக்கும் மேலாக தந்த ஒரு இயக்குநர். ஆனால், 2009 மே மாதம். அதுதான் நாங்கள் உலகப்பெரும்பரப்பில் யாருமற்றவர்களோ, நாதி அற்றவர்களோ என்று எண்ணும் வண்ணம் வஞ்சிக்கப்பட்ட பொழுது. பெரும் வீழ்ச்சி. அதைவிட பேரழிவு, களம், கட்டமைப்புகள் எல்லாம் இழந்த பொழுது. தமிழரின் போரிடும் ஆற்றல் உலகப்பெருவல்லாதிக்கங்களின் துணையுடன் சிதைக்கப்பட்ட நேரம்.
யாரும், எப்போதும் தட்டப்படும் கதவுகளின் வீடுகளாகவும், காவல் இல்லாத பெருநிலப்பரப்பாகவும் எமது தாய் நிலமும் மக்களும் ஆகிய நேரத்தில் அடர் இருளுக்குள், மலைதொட உயரும் பெரும் அலைகளுக்கும், சூறாவளிக்கும் நடுவில் பிடிப்பதற்கு ஏதுமற்ற ஒரு பொழுதில், எங்களின் குரலாக ஒன்று எழுந்தது. அது உங்களின் குரலாக இருந்தது.
எங்கள் ஏக்கங்கள், எங்களை வஞ்சித்த அரசியல் இவைகளை எல்லாம் நாங்கள் சொல்லும் குரலில் நீங்கள் பல்லாயிரம் மக்களுக்கு முன்னால், எமது தொப்புழ்கொடி உறவுகளுக்கு சொல்லி நின்ற போது உண்மையில் ஏதோ ஒரு நம்பிக்கை எமக்குள் எழுந்தது. அதற்கு என்றென்றும் தமிழினம் உங்களுக்கு நன்றி சொல்லி நிற்கும். அதிலும், இந்திய வல்லாதிக்கத்தின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும், அல்லது அதனை காரணம் சொல்லி மத்தியின் காங்கிரஸ்ஆட்சியை ஆட்சி கட்டலில் இருந்து இறக்கும் சாத்தியங்கள் அனைத்தும் இருந்தும் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகம், முதுகில் குத்தும் அறிக்கைகள் என்று காலம் கடத்திய கருணாநிதிக்கு எதிரான தமிழின உணர்வின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக உங்களின் குரல் தமிழகம் முழுதும் சுழன்றடித்தபோது இதோ எங்களின் குரல் என்றே நம்பிக்கை கொண்டோம். அப்படி நம்பியே ஏராளமான தமிழுணர்வுள்ள, விடுதலையின் மீதும், சுதந்திர தேடல் மீதும் பெரு நம்பிக்கை கொண்ட ஆயிரம் தமிழினைஞர்கள் உங்கள் பின்னால் ஒன்று திரண்டார்கள்.
நிறைய போராட்டம் நடாத்தினீர்கள். நீங்கள் வெளியில் இருந்ததைவிட சிறைக்குள் இருந்த நாட்களே அதிகம் என்று சொல்லுமளவுக்கு போராட்டங்கள். எல்லாமே, அந்த நினைப்பு, அந்த ஆசை, அந்த கனவு உங்களுக்குள் வந்த பின்னர் தலைகீழாக மாறிப்போனது. ஆட்சிக் கட்டிலில் ஏறுவதன் மூலமே தமிழினத்துக்கு உதவமுடியும் என்ற உங்களின் இலட்சியம் உங்களுக்குள் என்று புகுந்ததோ அன்றிலிருந்து நீங்கள் போர்க்குணம் நீக்கப்பட்ட, மேடை அரசியலை மட்டுமே நம்பிடும் பத்தோடு பதினொன்றாக மாறிக் கொண்டு வந்தீர்கள்.
பிடரி தடவப்பட்ட பூனைபோல பவ்வியமான அரசியலுக்குள் மெல்ல மெல்ல நுழைந்தீர்கள். உங்களுக்கு போட்டியாக வரக்கூடும் என்று நீங்கள் நினைத்த வைகோ போன்றவர்களை ஏகத்துக்கும் மிகக்கடுமையாக தாக்கீனீர்கள். அவரின் ஆதிமுன்னோர் கன்னடர் என்றோ தெலுங்கு நாயுடு என்றோ முத்திரை குத்தும் வரைக்கும் சென்றீர்கள்.
தமிழினத்தின் உரிமைக்குரலாக நீங்கள் மட்டுமே நிற்க வேண்டும் என்ற உங்களின் நினைப்பு அதற்கு முன்னமேயே தமிழினத்தின் விடுதலைப்போரில் மிகப்பெரும் துணைநின்ற உணர்வாளர்களை தூக்கி எறிய தூண்டியது. அதனையே செய்தீர்கள். அப்போதெல்லாம் மிகவும் கவலையுடனும் குழப்பத்துடனும் இவற்றை பார்த்து செய்வதறியாது நின்றோம். இது எங்கே போய்முடியப்போகிறதோ என்று கலங்கினோம். அதன் உச்சமாக உங்களின் இப்போதைய நிலை வந்தடைந்துள்ளது.
கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை தடைசெய்யும் போராட்டங்களை, முடக்கும் முன்னெடுப்புகளை மாணவர்கள் முன்னெடுத்த போது அதற்கு எதிராக, கத்தி, புலிப்பார்வை தயாரிப்பாளர்களுக்கு ஆதரவான கருத்துகளை நீங்கள் வெளியிட்டது உங்களின் சறுக்கல்களின் உச்சம். சரி நீங்கள் சொல்வதுபோலவே கத்தி திரைப்படம் சம்பந்தமான பிரச்சாரங்கள் போட்டி வர்த்தகத்தின் வெளிப்பாடு என்றே ஒரு கதைக்கு வைத்துகொள்ளுவோம். ஆனால் புலிப்பார்வை... அந்த திரைப்படத்தில் தேசியத் தலைவரின் மகனை ஒரு ஆயுதப்போராட்ட போராளியாக, உருமறைப்பு ஆடையுடன், ஆயுதத்துடன், ஆயுத பயிற்சியுடன் என்று காட்டியுள்ளார்கள். அதற்கான புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. அந்த திரைப்பட தயாரிப்பாளரோ, இயக்குனரோகூட அதனை மறுக்கவேயில்லை. அவர்களுக்கு என்ன காட்சி பிச்சுக்கொண்டு போகவேண்டும், பார்வையாளர் மத்தியில் விசில் எழும்ப வேண்டுமானால் எதனையும் செய்வார்கள்.
ஆனால் நாங்கள்... பாலச்சந்திரன் என்ற பாலகன் உயிருடன் பிடிக்கப்பட்டு, மிகத் தெளிவான திட்டமிடலுடன் அவனுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டு மிகக்கிட்ட வைத்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளான். அந்த புகைப்படங்கள் வெளிவந்தபோது தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் மனிதஉரிமை மீது ஆர்வம் கொண்ட மக்களனைவரும் திடுக்கிட்டு நின்றார்கள். இப்போது புலிப்பார்வை அதனையே மாற்றி பாலச்சந்திரன் ஒரு போராளி, ஆயுதந்தரித்தவன், ஆயுதப்பயிற்சி பெற்றவன் அவனை ஒரு மோதலில் கொண்டதாக கருத இடம்தருகிறது அல்லவா.. எத்தனை துரோகம் இது..
இவ்வளவும் தெரிந்து கொண்டே நீங்கள் அதன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்றது ஏற்று கொள்ள கனமானது. அதே மண்டபத்தில் அந்ததிரைப்படத்துக்கு எதிராக அமைதி வழியில் குரல் தந்த மாணவர்களை குண்டர்கள் ஆயுதங்கொண்டு தாக்கிய போது நீங்களும் மேடையில் இருந்தீர்கள். ஒரு குரல், ஒரு வசனம் அந்த சம்பவம் நடைபெறும்போது ஒலிவாங்கியை வாங்கி நிறுத்துங்கள் என் தம்பிகள் மீதான இந்த தாக்குதலை என்று நீங்கள் சொல்லி இருந்தால் உங்களின் மண்டியிடாத வீரத்தை ஏற்று கொண்டிருப்போம்.
ஆனால் நீங்கள் ஏதுமே தெரியாததுபோல நீங்கள் அமர்திருந்தீர்கள். அந்த மண்டபத்தில் ஆயுதந்தாங்கின குண்டர்களால் அடித்து தாக்கப்பட்ட அந்த உறவுகள், அந்த மாணவர்கள் யார்... மற்றைய மாணவர்கள்போல படித்து முடித்து 'ரை' கட்டி வேலைக்கு போய், லட்சமாக சீதனம் வாங்கி ஒரு வாழ்வுக்குள் சமைந்துபோகும் சராசரி வாழ்வினுள் இருந்து உடைத்தெறிந்து வெளிவந்து அநீதிகளுக்கு எதிராக, இந்த இனத்துக்கு நேர்ந்திருக்கும் அடிமை நிலைக்கு எதிராக என்று எப்போதும் சிந்தித்து நிற்கும் அவர்களை காப்பாற்றி இருக்க வேண்டியது அந்த இடத்தில் இருந்த உங்களின் கடமை அல்லவா..? அவர்களுக்கு ஆதரவான குரலாக உங்களுடையது எழுந்திருக்க வேண்டியது தமிழ் அறம் அல்லவா..?
ஏதோ கண் இமைக்கும் பொழுதுக்குள் நடந்துவிட்டது என்றே வைத்து கொண்டாலும், அதற்கு பிறகு இத்தனை நாட்களாகிவிட்டது.. ஒரு கண்டனம்.. ம்ஊம்... ஒரே ஒரு ஆதரவு அறிக்கை மாணவர்களுக்காக.. ம்ஊம். ஏன்... இந்த நிமிடம் வரைக்கும் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு நீங்கள் கண்டனம் விடவேயில்லை.
இப்போது பார்த்தால் வைகோவை நல்லெண்ண சந்திப்பு சந்தித்தித்து இருக்கிறீர்கள். இது ஏதோ ஒன்றை, இன்னொரு பக்கத்தில் எழுந்துவரும் ஏதோ ஒரு பெரும் எதிர்ப்பை சமாளிப்பதற்கான சந்தர்ப்பவாதமாகவே எம் கண்களுக்கு தெரிகிறது.. பின்னே.. தாக்கப்பட்ட மாணவர்களை இன்றுவரை சந்திப்பதையோ, அவர்களுக்கு ஆதரவாக கதைப்பதையோ தவிர்த்துவரும் நீங்கள் இப்படி திடீரென வைகோ அண்ணாவை போய் பார்திருப்பது வேறு என்னவாம்... இரு கோடுகள் தத்துவம்தானே.. இருக்கும் ஒரு கோட்டுக்கு அருகில் இன்னொரு கோடு... நல்லது.. அரசியல் சாமர்த்தியம்தான்...
சீமான் அண்ணா, தேசியதலைவர் அடிக்கடி சொல்லும் ஒரு மேற்கோள்...' தவறுகள் திருத்தப்படலாம். மன்னிக்கப்படலாம்.. ஆனால் துரோகங்கள்தான் மன்னிக்கவே முடியாதவை' என்று..
நீங்கள் செய்துகொண்டிருப்பது உங்களைப்பொறுத்தவரையில், உங்களின் அரசியல் அமைப்பை பொறுத்தவரையில் சரியானது என்றே இருந்தாலும்கூட அது தமிழினம், உலக தமிழினம் என்று மேடைக்கு மேடை குரல் தரும் உங்களின் அத்தனை வார்த்தைகளையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
நீங்கள் செய்துகொண்டிருக்கும் தவறுகளை நியாயப்படுத்துவதற்காக, அதனை நீதி ஆக்குவதற்காக நீங்கள் இப்போது எடுத்து வைத்திருக்கும் இந்த அடிவைப்புகள் எங்கே உங்களை இன்னும் ஆழமாக தவறுகளை நோக்கியே கொண்டு சென்றுவிடுமோ என்றே அஞ்சுகின்றோம்...
எமது வேண்டுகோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்..
போராடும் அந்த மாணவசக்திக்கு ஆதரவாக நில்லுங்கள். அவர்களின் பாதுகாப்பு கேடயமாக நில்லுங்கள். அப்படி அவர்களுடன் நிற்கும் ஒரு பொழுதில் உங்களால் வைகோ அண்ணாவுடனும் மற்றும் அனைத்து தமிழின எழுச்சி அமைப்புகளுடனும் தோழமைக்குரலில் கதைக்க முடியும்.
ஏனெனில் போராட்டகளத்தில் நிற்கும்போது உருவாகும் நல்லிணக்கத்துக்குதான் அதிக வலு இருக்கும். அதுவே உண்மை..
நன்றி அன்புடன்.
ச.ச.முத்து

No comments:

Post a Comment