June 11, 2016

வடமாகாண சபையில் குழப்பங்கள் நடப்பதை சம்பந்தன் விரும்பவில்லை: சீ.வி.விக்னேஸ்வரன்!

வடமாகாண சபையில் குழப்பங்களை தவிர்க்கவும், மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்யவும் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.


அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கின்றது என கூறியிருக்கும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்,

மாகாண சபையில் குழப்பங்கள் நடப்பதை தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்பவில்லை எனவும் கூறியிருக்கின்றார்.

அண்மைக்காலமாக வடமாகாண சபையில் ஆளுங்கட்சிக்குள் நடக்கும் குழப்பங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றைய தினம் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை உண்மையே. ஆனால் அந்த முயற்சிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.

இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து பேசுவதற்காக நான் கொழும்பு சென்றிருந்தேன்.

ஆனால் துரதிஸ்டவசமாக அவர் யாழ்ப்பாணம் வந்துவிட்டார். இந்நிலையில் சில விடயங்களை நாங்கள் நேரடியாக பார்த்து நடவடிக்கை எடுக்க முடியும்.

வேறு சில விடயங்களை கட்சி ரீதியாக பார்த் து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்நிலையில் இவ்வாறான குழப்பங்களை தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவர் மீதும் குற்றஞ்சாட்டலாம். அதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி அல்ல. அது நிரூபிக்கப்பட வேண்டும். சும்மா ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக அவரை குற்றவாளி என கூற முடியாது.

எனவே இவ்வாறான விடயங்களை புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என நான் நம்புகிறேன் என்றார்.

No comments:

Post a Comment