April 15, 2015

துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 வருடங்களுக்கு மேலாக தண்டனை வழங்கலாம்?

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 வருடங்களுக்கு மேலாக தண்டனை வழங்கலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கு பெற்றோர்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள்
தெரிவிக்கின்றனர்.
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடமிருந்தும் குற்றமிழைத்தவர்கள் தொடர்ந்தும் தப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் மூன்று இலட்சம் பேரில் 600 பேர் மீது மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது மொத்த குற்றச்செயல்களில் 2 சதவீதம் மட்டுமே என்பது வேதனைக்குரிய விடயம்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சர்வதேச சாசனத்தில் இலங்கை அரசு கைச்சாத்திட்டுள்ள போதிலும் போதுமான நடவடிக்கைகள் எடுக்க முன்வராதிருப்பது இதனூடாகத் தெரிகின்றது.
ஐக்கிய நாடுகளின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 65சதவீதமானோர் ஒருமுறைக்கு மேல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
40 சதவீதமானோர் 20 வயதாகும் முன்னர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 சதவீதமானோர் செய்ய ஏதுமற்ற காரணங்களாலும் விளையாட்டாகவும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
3.2 சதவீதமானோர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 2.2 வீதமானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு குறிப்பிடுகின்றது.
முக்கியமாக 96.5 சதவீதமானோர் எந்தவொரு சட்டநடவடிக்கைக்கும் உட்படுத்தப்படவில்லை என்பது இந்த ஆய்வில் வெளிவந்துள்ளது.
அதுமாத்திரமன்றி 95 வீதமான பெண்கள் பொதுப் போக்குவரத்தின் போது துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கு நாட்டில் போதுமான சட்டங்கள் இல்லையென பெரும்பான்மையானோர் தெரிவித்திருந்தமை கருத்துக்கணிப்பின் ஊடாக தெரியவந்துள்ளது.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது சட்டமா அதிபரின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதுபற்றி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கையில்,
 சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பல்வேறு விசாரணைப் பிரிவுகள் நாடு பூராகவும் நிறுவப்பட்டுள்ளன. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அலுவலகம் ஆகியன முன்னெடுத்து வருகின்றன. விசேடமாக சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, சட்டமாஅதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படும். அவ்வாறான வழக்குகள் சட்டமாஅதிபரின் ஊடாக தாக்கல் செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களுக்கு முன்னுரிமை வழங்கி பொலிஸார் செயற்படுகின்றனர். என்றார்.

No comments:

Post a Comment