April 15, 2015

வறுத்தலைவிளானில் 46 ஏக்கரில் மக்கள் குடியிருப்பில் பாரிய படை முகாம்!

யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிப்பதாகஅறிவிக்கப்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் 46 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மக்களுடைய குடிமனைகளை முழுமையாக கையகப்படுத்தி பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறும் ஆசையுடன் சென்ற 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கவலையுடன் மீண்டும் நலம்புரி நிலையத்திற்கு திரும்பியுள்ளன. இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் மீள்குடியேற்றத்துக்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சிறீலங்கா இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகத் தெரிகின்றது.
சிறீலங்காவின் புதிய அரசாங்கத்தின் அறிவிப்பின் படி இரண்டாம் கட்டமான மீள்குடியேற்றத்திற்காக 8 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 590 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஜே.241 வறுத்தலைவிளான் பகுதியும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி சனிக்கிழமை விடுவிப்பதாக இனங்காணப்பட்ட பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. தமது சொந்த நிலங்களை பார்த்து அதில் குடியேறும் ஆசையுடன் கடந்த 27 வருடங்களாக உரும்பிராய் இந்துக்கல்லூரி முகாமில் வசித்து வந்த வறுத்தலைவிளான் மக்களும் அங்கு குவிந்திருந்தனர்.
மேற்படிக் கிராமசேவையாளர் பிரிவில் 118 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான காணிகள் விவசாய நிலங்கள் மட்டுமே. மக்களுடைய வீடுகளை உள்ளடக்கிய குடிமனைகளுடன் 46 ஏக்கரை இராணுவத்தினர் கையகப்படுத்தி பாரிய இராணுவ முகாம் அமைத்துள்ளனர். முகாமினைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளையும் இராணுவத்தினர் பலப்படுத்தியுள்ளதோடு, எல்லைப்பாதுகாப்பு அரண்களையும் அமைத்துள்ளனர்.
இதனால் தமது வீடுகளையும் காணிகளையும் பார்வையிடச் சென்ற மக்கள் இராணுவத்தினருடைய செயற்பாடுகளையும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் கண்டு பெரும் ஏமாற்றத்துடனும், கவலையுடனும் தமது முகாங்களுக்கே திருப்பினர்.

No comments:

Post a Comment