October 1, 2015

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் (ICET) ஏற்பாட்டில் ஐ.நா. மனிதஉரிமைகள் மன்றத்திற்குள் நடைபெற்ற தமிழர் நீதிக்கான கருத்தரங்கு(படங்கள் இணைப்பு)

ஐக்கியநாடுகள் சபையின் 30 ஆவது மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் இம்முறை சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான
பரிந்துரைகளும் வெளியிடப்பட்டது. சிறீலங்கா அரசானது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்புவிசாரணை முறையையும் நிராகரித்திருப்பதுடன் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்வதற்கு பல பிரயத்தனங்களை யெனீவா கூட்டத்தொடரை நோக்கி முன்னெடுத்துள்ளது.இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை முறைகள் தொடர்பான தீர்மானம் நாளைய தினம் வெளிவர இருக்கும் நிலையில்  நேற்றைய தினம்  அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் (ICET) ஏற்பாட்டில் ஐ.நா. மனிதஉரிமைகள் மன்றத்திற்குள் பக்க அறையில்  தமிழர் நீதிக்கான கருத்தரங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
ஐக்கியநாடுகள் மனிதஉரிமை மன்றத்தின் சிறீலங்கா தொடர்பான அறிக்கையும் தமிழ்ச் சமூகத்தின் பார்வையும்   என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது . இவ் நிகழ்வில் தாயகத்தில் இருந்து , மக்கள் பிரதிநிதியாக அனந்தி சசிதரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமிழகத்தில் இருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ,மற்றும் புலம்பெயர் தேசத்தில் இருந்து யேர்மனியில் தமிழின அழிப்பு தொடர்பாக நடைபெற்ற மக்கள் தீர்பாயத்தின் நீதிபதியும் ,மனிதவுரிமை செயற்பாட்டாளரும்  ஆகிய கலாநிதி Maung  Zarni அவர்களும் , தமிழின அழிப்புக்கு எதிரான அமைப்பின் சார்பில் ஜனனி ஜனநாயகம் அவர்களும் கலந்துகொண்டனர் .
குறிப்பாக வெளிவர இருக்கும் அமெரிக்கா தீர்மானத்தின் முன்வரைவில்  ஈழத்தமிழர்களுகான உண்மையான நீதி மறுக்கப்படும் அபாயம் தெரிவதாக அனைவராலும் கூறப்பட்டதோடு , ஐக்கிய நாடு மனிதவுரிமை சபையின் விசாரணைக் குழுவால்   பரிந்துரைக்கப்பட்ட கலப்புவிசாரணை முறையையும் மீளாய்வு செய்யப்பட்டது .கருத்தரங்கில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தமிழின அழிப்புக்கு நம்பகத்தன்மை உள்ள சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர் .
இவ் நிகழ்வில் வேற்றின மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர் .
சிறீலங்கா அரசின் முன்னெடுப்புகளை இராஐதந்திர வழியில் முறியடிக்கும் பணிகளில் தாயக  , தமிழக , புலம்பெயர்   தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள்  ஒற்றுமையோடும் மிக முனைப்போடும்  செயற்பட்டு வருகின்றனர் . தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பல இராஜதந்திரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது நிலைப்பாட்டைக் கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இன்றைய தினமும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் (ICET) ஏற்பாட்டில் "சிறீலங்காவில் தமிழ் பெண்களின்  பாதுகாப்பும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும்"  என்ற தலைப்பில் மற்றொரு கருத்தரங்கும் இடம்பெறவுள்ளது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை .





No comments:

Post a Comment