September 23, 2015

கொட்டதெனியாவ சிறுமி படுகொலை! திருமலையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

கம்பஹா - கொட்டதெனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை 05 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னிலையில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மாகாண ஆளுனர் தற்போது ஜெனீவா சென்றுள்ளமையினால் ஆளுனரின் செயலாளர் அவர்களிடமும், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களிடமும் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
அவர்கள் கையளித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு காலம் தாமதிக்காது விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டணையை வழங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதிகரித்துவரும் இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விசேட தேசிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படுவதுடன், அதன் அடிப்படையில் உரிய தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வகையான பாலியல் வன்கொடுமைகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாதிருக்க இவ்வாறான கொடுமைகளில் ஈடுபடும் காமுகர்கள் எவ்வழியிலும் தப்பிச் செல்ல முடியாதபடி கடுமையான சட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே உள்ள சட்டங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவை பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமுலாக்கப்பட வேண்டும். இதுபோல விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உடன் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தகுந்த நீதி வழங்கப்பட வேண்டும்.
பாடசாலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தொழில் ஸ்தாபனங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல், அவற்றை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்.
எமது நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மேற்குறிப்பிட்ட குற்றச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.





No comments:

Post a Comment