September 9, 2015

ஜெயகுமாரி பாலேந்திரன் இன்று பிணையில் விடுதலை!

காவல் துறையினரின் எதிர்ப்பினையும் மீறி, ஜெயக்குமாரி பாலேந்திரன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுர கெப்பற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டு ஒன்று சம்பந்தமாகவே இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வழக்கு எதிர்வரும் 16 ம் திகதி விசாரணைக்கு வரவிருக்கின்றது.
கடந்த புதன்கிழமை அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கெப்பற்றிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் அன்றைய தினம் ஆஜரானார்.
இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் கிளிநொச்சியில் உள்ளூர் காவல் நிலையத்தில் அவர் சென்று வந்தபொழுதும் அவரது நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அவருக்கு அறிவிக்கவில்லை.
கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் வைத்து கடந்த 2014 ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜெயக்குமாரியும் அவரது 13 வயதுமகளான விபூசிகாவும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவரது மகள் விபூசிகா, கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டார்.
சிறீலங்கா பயங்கரவாத விசாரணைப் திணைக்களத்தால் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படாமல் 362 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இவரது பிணைக்காக இரண்டு இலட்சம் ரூபா செலுத்தப்பட்டதோடு, அவரது கடவுச்சீட்டு இன்னமும் அவரிடம் கையளிக்கப்படவில்லை. அத்துடன், ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment