கடந்த யூலை மாதம் 17ஆம் திகதி அன்று சிட்னியின் கிறைஸ்ரன்ஸ் நகரில் வசித்துவந்தஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அகால மரணமாகியிருந்தார்.அவரது இறுதிக்கிரியைகள் வரும் புதன்கிழமை
(19.08.2015) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பெரிய கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த நவரெட்ணம் அஜந்தன் எனும் புகலிடக்கோரிக்கையாளர் தற்போது அவுஸ்திரேலியாவில் நிலவி வரும் அதிக குளிர் காரணமாக தமது படுக்கையறையினுள் மின் வெப்பமாக்கியுடன் இறைச்சி வாட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சூடான நிலக்கரி மணிகளையும் (charcoal heat beads) வைத்து உறங்கியுள்ளார். இதன்போது வெளியான காபன் மொனோ ஒக்சைட் (carbon monoxide) எனும் கடும் நச்சுத்தன்மையுள்ள வாயு வெளியான நிலையில் மூடிய அறையினுள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எந்த நாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடி வந்தாரோ – எந்த நாட்டுக்குத் தான் போக வாய்ப்பே இல்லை என்று இருந்தாரோ – அந்த நாட்டுக்கு அஜந்தனின் உடலம் செல்வது பொருத்தம் அற்றது என்பதால் அவரது மனைவி மற்றும் இரு சிறு பிள்ளைகளுக்கான வீசா பெறுவதற்காக விண்ணப்பித்தபோது அவ்விண்ணப்பம் அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் முதலில் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அஜந்தனின் மனைவி தன்னுடைய இரண்டு வயது கைக்குழந்தையினை இலங்கையில் விட்டுவிட்டு இறுதிக்கிரியைகளுக்காக தனது நான்கு வயது மகனை மட்டும் அழைத்துச்செல்வதற்காக விண்ணப்பித்தபோதிலும் இரண்டாவது தடவையும் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தமது கணவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரமுடியாததுடன் தாமும் இறுதிச்சடங்கிற்காக அவுஸ்திரேலியா செல்லமுடியாத நிலையினை எண்ணி வருந்திய அஜந்தனின் மனைவி மனமுடைந்து தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது அஜந்தனின் மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜந்தனின் உடலம் 19.08.2015 புதன்கிழமை லிட்கம் ரொக்வூட் மயானத்தில் (Lidcombe Rookwood Cemetery) பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 3:45 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4:00மணியளவில் தகனக்கிரியைகள் மேற்கொள்ள நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது போன்று, சென்ற மாதம் அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் நடந்த வீதி விபத்தில் இறந்த அருணன் மற்றும் றொபின் ஆகியோரின் உடலங்கள் சமூக ஆர்வலர்களால் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. சட்டரீதியான விசாரணைகளின் பின்னர் உரிய ஆவணங்களுடன் அவர்களின் உடலங்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்த போதிலும், மீள்பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பல மணி நேர விசாரணைகளின் பின்னர் மறுதினமே அவர்களின் உடலங்கள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment