September 20, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கையை வரவேற்கின்றோம்: தமிழ் சிவில் சமூக அமையமும், 21 அமைப்புக்களும்!

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை நாம் வரவேற்பதாக தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட 22 அமைப்புக்கள்
கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் இலங்கை தொடர்பாக 16 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் வரவேற்கின்றோம். (ஐ.நா மனித உரிமை பேரவைக்கு விசாரணைக்கான தரவுகள் சேகரிப்பதற்கு கொடுக்கப்பட்ட ஆணைக்குட்பட காலப் பகுதியாகிய) பெப்ரவரி 2002க்கும் நவம்பர் 2011 க்கும் இடைப்பட்டகாலப் பகுதியில் இடம் பெற்ற குற்றங்கள் தொடர்பிலான தரவுகளை ஆழமாக முன்வைக்கும் அறிக்கையாக இது இருக்கின்றது. இலங்கையில் நீதியையும் பொறுப்புக் கூறலையும் விரும்பும் எவரும் அவசியம் வாசிக்க வேண்டிய அறிக்கை இது என நாம் கருதுகிறோம். இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பங்காளிகளான அனைத்து தரப்பினரும் உள்நோக்கியும் விமர்சனப் பார்வையுடனும் சுய தேடல் செய்வதற்கு அவசியமான ஒரு மூலவளமாக இவ்வறிக்கை இருக்கும் என நாம் நம்புகிறோம்.

இழைக்கப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் மூலமாக குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட முடியாது என்பதனை தீர்க்கமாக அறிக்கை குறிபிட்டுள்ளமையை நாம் வரவேற்கிறோம். உள்நாட்டுப் பொறிமுறை மூலம் குற்றவியல் நீதிமன்ற விசாரணை சாத்தியம் இல்லை என்பதற்கு 30 வருடகாலயுத்தம் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நீதித் துறை சிதைவடைந்தும் கறைபடிந்தும் போயுள்ளமை மட்டும் காரணமன்று. மாறாக, அவ்விசாரணையை கொண்டுநடத்துவதற்கு அவசியமாகத் தேவைப்படும் அரசியல் விருப்பு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்திடமும்; இல்லாமையே உள்நாட்டுப் பொறிமுறை மூலம் குற்றவியல் நீதிமன்றவிசாரணை சாத்தியம் இல்லை என்பதற்கான முக்கியகாரணமாகும். உதாரணமாக கடந்த திங்கட்கிழமை (14 செப்டம்பர் 2015) அன்று ஐ. நா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டமைச்சர் தம்மீது நம்பிக்கை வைக்குமாறு வினயமாக உறுப்புநாடுகளைக் கோரியிருந்தார். ஆனால் தாம் நடத்தும் உள்நாட்டுவிசாரணை மூலம் இலங்கையின் இராணுவத்தின் நற்பெயரை காப்பாற்றுவோம் என அவர் அதே உரையில் தெரிவித்தமை தம் மீது நம்பிக்கைவைக்கும் வண்ணம் அவர் கோரியமையின் நம்பகத் தன்மைக்கு தானே பங்கம் ஏற்படுத்திக் கொண்டதாகத் தான் கருத வேண்டும்"

இத்தகைய சூழமைவில்தான் நாம் ஜெனீவாஅறிக்கையின் கலப்புபொறிமுறை ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற பரிந்துரையை கவனத்தில் கொள்கிறோம். கருத்தளவில் கலப்புமுறையின் பொருத்தப்பாடு தொடர்பாக நாம் இப்போது நிலைப்பாடெடுப்பது அவசியமற்றது. ஜெனீவாஅறிக்கை கூறுவது போன்று எந்தவொரு பொறிமுறையும் பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துபேசி அவர்களின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்படவேண்டிய ஒன்று என்பதால் இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் தனதுமுன் மொழிவுகளை பகிரங்கமாக முன் வைக்கும் போது நாம் எமது கருத்துக்களை முன் வைப்போம். ஆனால் ஓர் கலப்புபொறிமுறை உண்மையிலேயே கலப்புமுறையாக இருப்பதற்கு வெறுமனே வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் நியமிக்கப்படுவது போதுமானதன்று. அப்பொறிமுறையானது பகுதியளவில் தானும் ஐ.நா.வால் தலைமை தாங்கப்படுவதாகவும் சர்வதேச சட்ட ஆணையின் அடிப்படையிலானதாகவும் இருக்கவேண்டும்.

உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளை இலங்கை அரசாங்கம் நியமிப்பதானது கலப்புபொறிமுறையாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. முன்வைக்கப்படும் எந்தவொரு கலப்புப் பொறிமுறையிலும் அதன் சர்வதேச பங்களிப்பானது உள்ளக பங்களிப்பை விட மேலோங்கியதாகவும் முதன்மையானதாகவும் இருக்கவேண்டும். இதுவே, இலங்கையில் இடம்பெறக்கூடிய நியாயமான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான குறைந்த பட்ச தகுதியாக் இருக்க வேண்டும். அல்லாவிடில் கலப்புபொறிமுறையின் உள்ளக அங்கமானது கலப்புபொறிமுறையின் நம்பகத்தன்மைக்குபாதிப்பை ஏற்படுத்திவிடும். இறுதியில் கலப்புப் பொறிமுறையின் சர்வதேசஅங்கம் மீயுர்வானதாக இல்லாதவிடத்து எக்காரணங்களுக்காக உள்ளகப் பொறிமுறையை ஜெனீவா அறிக்கை நிராகரிக்கிறதோ அதே காரணங்களுக்காக கலப்புமுறையையும் நிராகரிக்கவேண்டிய நிலை உருவாகலாம். மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்கள் அரைகுறையானதொரு முயற்சி மூலம் ஏமாற்றப்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தை ஏற்றுக் கொண்டு அந்தநீதிமன்றில் இலங்கை இணைந்துகொள்ளவேண்டும் என்ற அறிக்கைiயின் பரிந்துரையை நாம் வரவேற்கிறோம். இலங்கை அவ்வாறாக அச்சாசனத்தில் இணைந்து கொள்ளும் போது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கான நியாயதிக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு வழங்கும் வகையில் ஒரு பிரகடனத்தையும் தாக்கல் செய்யவேண்டும் என நாம் கருதுகிறோம். பொறுப்புக் கூறல் தொடர்பான நியாயமான கரிசனையை வெளிப்படுத்துவதற்கு இது உதவும்.

மேலும் அறிக்கையின் நிலைமாறு நீதிதொடர்பிலான விரிவான பரந்துபட்ட அனைத்து பரிந்துரைகளையும் நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம். குறிப்பாக காணாமல் போகச் செய்யப்பட்டோர், காணி விடுவிப்பு மற்றும் படையினரை விலக்கிக் கொள்ளல் தொடர்பான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். மேலும் ஐ. நா விN~ட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் குறிப்பிட்டுள்ளவாறு நிலைமாறு நீதி தொடர்பிலான செயன்முறையானது பாதுகாப்புத் தரப்பை மறுசீரமைத்தல், சுயாதீனமான உண்மையை கண்டறியும் முறைமையை ஸ்தாபித்தல் மற்றும் நட்டஈடுகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்திட்டத்தை முன்னெடுத்தல் உட்பட பல்வேறு அங்கங்களை கொண்டதாக இருக்கவேண்டும். இவை பாதிக்கப்பட்டமக்கலின் பங்குபற்றலோடு உருவாக்கப்பட வேண்டும் என்பதனையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் இவை எவையுமே குற்றவாளிகளை நீதிமன்ற குற்றவியல் செயன்முறைக்கு முன் கொண்டுவரும் செயன்முறைக்கு மாற்றீடானவை அல்ல என்பதையும் முழுமையான நிலைமாறு கால நீதிமுறையின் ஓர் அங்கம் என்றவகையில் நீதிமன்ற விசாரணைக்கு அணிசேர்க்கும் வகையிலானதாகவே இந்த ஏனைய முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதனையும் வலியுறுத்தி கூறுகின்றோம். மேலும் ஜெனீவா அறிக்கையானது ஒடுக்குமுறைக்கு காரணமான கட்டமைப்புக்கள் தொடர்ந்தும் இலங்கையில் நிலவுகையில் இருப்பதை சுட்டிக் காட்டுவதை நாம் கோடிட்டு காட்ட விரும்புகிறோம். இக்கட்டமைப்புக்கள் நீக்கப்பட்டால் அன்றி தொடர்ந்து குற்றங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது. அறிக்கை குற்றங்கள் தொடர்ந்துநிகழ்காலத்திலும் நிகழ்வதைச் சுட்டிக் காட்டுகின்றதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்து இலங்கை தொடர்பில் தனது கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையில் ஜெனீவா அறிக்கை முழுமையாக அதன் சொல்லிலும் அர்த்தத்திலும் வெளிப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். குறிப்பிட்டகால வரையறைக்குள் அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாவிட்டால் ஐ. நா அங்கங்களும், உறுப்பு நாடுகளும் ஐ. நா. பாதுகாப்பு சபை மூலம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுகொள்கிறோம்.

அறிக்கையில் இணைந்து கொள்ளும் அமைப்புக்கள்:
1. Tamil Civil Society Forum (TCSF)
2. Centre for Human Rights and Development (CHRD)
3. Home for Human Rights (HHR)
4. Centre for the Protection and Promotion of Human Rights (CPPHR), Trincomalee
5. Vavuniya Citizens Committee
6. Mannar Citizens Committee
7. Tamil Lawyers Forum
8. North East Coordinating Committee of the Relatives of the Forcibly Disappeared
9. Jaffna University Teachers Association
10. Jaffna University Science Teachers Association
11. Jaffna University Employees Union
12. Vanni Christian Union
13. Foundation of Changers - Batticaloa
14. East Civil society Activist Alliance – Batticaloa
15. Commission for Justice and Peace of the Catholic Diocese of Jaffna
16. Batticaloa Social Workers Network
17. Paduvaankarai People’s Alliance
18. Vadamarachchi Christian Union, Jaffna
19. Mannar Economic and Social Development Organization
20. Hindu Development Society Karaithivu – Amparai
21. Tamilar Valvurimai Maiyam
22. Valikamam North Development Board, Jaffna. - See more at: http://www.vannionline.com/2015/09/21.html#sthash.9blzEUuB.dpuf

No comments:

Post a Comment