August 31, 2015

இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்கியமைக்கு வைகோ, ராமதாஸ் எதிர்ப்பு!

இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற போர்க்கப்பலை, சிங்கள  கடற்படைக்கு  இந்தியா  இலவசமாக வழங்கியமையானது, ஈழத்து தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த துரோகம் என ம.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
1992 ம் ஆண்டு,  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த  வராஹா கப்பல், தொடக்கத்தில், கடலோரக் காவல் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு,  2006ம்  ஆண்டில்,  சிங்களக் கடற்படையின் சேவைக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இந்திய மற்றும் இலங்கையின் உயர்மட்ட மேல் அதிகாரிகள் முன்னிலையில்,  ஒரு விழாவில்  இக்கப்பல் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்செயலானது, ஈழத்து தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் செய்த மிகப்பெரிய துரோகம் என வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கப்பலானது, தமிழர்களை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய கடற்படைகள், இலங்கை கடற்படைகளுடன் சேர்ந்து இலங்கை கடற்படை புலிகளை அழித்ததற்கான ஆதரங்கள் இருப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி , தமிழ் நாட்டின் கட்சிகளான  பா.ம.க. மற்றும் திமுக போன்ற கட்சிகள்,  2009 ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழர்கள் பெரிய அளவில் கொலை செய்யப்பட்டமைக்கு  பொறுப்பு எனவும், இதன்போது அடையாளப்படுத்தினார்.
தமிழர்களின் நலன்களுக்கு எதிராக வேலை செய்தமை தொடர்பில், இந்திய அரசாங்கத்தையும் இதன்போது குற்றம் சாட்டினார்.
மேலும், இது தொடர்பில் பா.ம.க. நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் கூறும்பொழுது, இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட கப்பல், தற்போது தமிழக மீனவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
ஈழத்து தமிழ் மக்களை கொல்லுவதற்கு, இறுதி யுத்தத்திலும் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இலங்கை ஒருபோதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உதவப்போவதில்லை எனவும், இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட 3 போர்க் கப்பல்கலையும், மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment