August 12, 2016

கனடாவில் தமிழ் அகதிகள் குடியேறி 30 ஆண்டுகள் - நியூபவுண்லாந்தில் உணர்வுபூர்வ நிகழ்வு!

இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும்,
கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது.

 
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரொறன்ரோ, மொன்றியால் நகரிலிருந்து சமூகத் தலைவர்கள், பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் நியூபவுண்லாந்தில் ஒன்று கூடினர்.

அகதிகளைக் காப்பாற்றிக் கரைசேர்த்த கனடா கடற்படைக் கப்பல் அருகே சம்பிரதாயபூர்வமாக நன்றி தெரிவிக்கும் பேச்சுக்கள் இடம் பெற்றன. மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்த சங்கரி அதில் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னாள் அமைச்சர் Gerry Weiner அவர்களும் அதில் பங்கெடுத்துக் கொண்டார்.

1986ஆம் ஆண்டு அந்த 155 தமிழர்களும் அகதியாக கப்பலில் வந்தபோது அவர்களைத் 'திருப்பி அனுப்பவேண்டும்' என்ற கோரிக்கைகள் எழுந்தன. அப்போது கனடாவின் பிரதமராக இருந்த Brian Mulroney அவற்றையெல்லாம் நிராகரித்து, அகதிகளாக அந்த 155 பேரையும் ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாகவே கனடாவின் அரச நிலைப்பட்ட அகதிக் கொள்கைகள் பலவும் சீரமைக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று கனடாவில் பெருமளவில் தமிழர்கள் அகதிகளாக குடியேறிக் குடியுரிமை பெற இக் கப்பல் பயணமும் பெரும் பங்காற்றியது.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இரண்டு சிறிய படகுகளில் 1986ஆம் ஆண்டு கடலில் பயணித்த இரு தமிழ் அகதிகள் 30 வருடங்களுக்குப் பின்னர் தாங்கள் வந்த படகில் அமர்ந்த போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.




No comments:

Post a Comment