June 24, 2015

மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் மூலம் மருந்து பொருட்கள் விற்பனையை கைவிடுக!

ஆன்லைன் மூலம் உயிர்காக்கும் மருந்து பொருட்களின் விற்பனையை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது இந்த நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடுகிற விபரீதமான நடவடிக்கை.


ஆன்லைன் மூலம் மருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்தால் கோடிக்கணக்கான மருந்து விற்பனை கடைகளை இழுத்து மூட வேண்டிய நிலைமை ஏற்படும். இக்கடைகளை நம்பியுள்ள நடுத்தர மக்கள் நடுத்தெருவுக்குத்தான் வர நேரிடும்.

இத்தகைய விற்பனை முறையை அமல்படுத்தத் தொடங்கினால் தடை செய்யப்பட்ட ஏராளமான மருந்துகள் மிக எளிதாக புழக்கத்துக்கு வந்துவிடும். குறிப்பாக போதையை ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் சர்வ சாதாரணமாக நமது நாட்டின் இளைஞர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.

இது ஒட்டுமொத்தமாக நமது தேசத்தின் இளைய தலைமுறையின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கிவிடும். மருத்துவர்களின் ஆலோசனையின்றி உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கக் கூடிய மருந்துகள், காலாவதியான மருந்துகள் புழக்கத்துக்கு வருவதற்கும் இந்த நடைமுறை உதவும் அபாயம் இருக்கிறது.

ஆகையால் ஆன்லைன் மூலமான மருந்து பொருட்கள் விற்பனையை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment