July 1, 2014

சுவிஸ் தமிழர்கள் கட்டாயத் திருமணத்தில் ஆதாரங்கள் அம்பலம்

கோடைகால விடுமுறைகளும் கட்டாய திருமணங்களும் 5வருட சிறையும்
இந்த கட்டுரையை எழுத எண்ணிய போது சொர்க்கமே ஆனாலும் அது நம்ம ஊரை போல வருமா என்ற இளையராசாவின் பாடல்தான் ஞாபகத்திற்கு வந்தது. போர்ச்சூழல், பொருளாதாரப் பிரச்சினை, இப்படி பல காரணங்களால் சொந்த நாட்டை விட்டு மேற்குலக நாடுகளில் வாழும் பலர் தமது வாழ்க்கையை தொலைத்து விட்டு நடைப்பிணங்களாக திரிவதை காணமுடியும்.
போர்ச்சூழலால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சிலர். ஆனால் பொருளாதாரக்காரணங்களுக்காக தமது சுகபோக வாழ்க்கை வாழலாம் என்ற நோக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு வந்தவர்கள் பலர். 1980களில் 1990களில் ஐரோப்பிய மற்றும் கனடா ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு வந்தவர்களுக்கு ஆரம்பகாலத்தில் உழைக்க வேண்டும், ஊரில் சகோதரிகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டும், சகோதரர்களை வெளிநாடுகளுக்கு எடுக்க வேண்டும், உறவினர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற பிரச்சினைகள் தான் காணப்பட்டன.
அதை அவர்கள் ஓரளவு தீர்த்துக்கொண்டனர். ஆனால் அவர்கள் திருமணம் முடித்து இப்போது அவர்களின் பிள்ளைகள் திருமண வயதை எட்டிய போதுதான் பெரும் பிரச்சினைகளே உருவாகியிருக்கின்றன. தாங்கள் வாழும் மேற்குலக கலாசாரத்தையும் பேண வேண்டிய அதேவேளை தமது பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ வேண்டிய இரண்டை வாழ்க்கை வாழும் பிள்ளைகள்,
தங்கள் பிள்ளைகள் தமது சுய அடையாளங்களை மறந்து மேற்குலக கலாசாரத்திற்குள் மேற்குலக வாழ்க்கைக்குள் சிக்கி விடுவார்களோ என்ற ஏக்கத்துடன் வாழும் பெற்றோர்.
இதனால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகி வரும் இடைவெளிகள்.
இன்று ஐரோப்பிய நாடுகளில் ஆசிய நாட்டவர்கள் மத்தியில் முக்கியமாக ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது.
பிறப்பதற்கும் வாழ்வதற்கும் சிறந்த நாடுகள் வரிசையில் சுவிட்சர்லாந்து முதலாம் இடத்தை பெற்றுள்ளது. லண்டனிலிருந்து வெளிவரும் எக்கனமிக்ஸ் என்ற சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை அடுத்து ஒஸ்ரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, கொங்கோங் ஆகிய நாடுகள் வாழ்வதற்கு மிகவும் சிறந்த நாடுகள் என அக்கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை விடயங்கள், சுமூகமான வாழ்க்கைக்கான சூழல், கிரிமினல் குற்றங்கள், போன்ற விடயங்கள் இந்த ஆய்வில் கவனத்திற்கு எடுக்கப்பட்டிருந்தன. உலக செல்வந்த நாடுகளாக சுவிஸ் நோர்வே போன்ற நாடுகள் காணப்படுகின்றன.
இந்த ஆய்வுகள் எல்லாம் மேற்குலக நாடுகளை சொர்க்கமாக காட்ட முனைந்தாலும் இந்த நாடுகளை சொர்க்கம் என தேடி வந்த ஆசிய நாட்டவர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் தமது வாழ்க்கையை தொலைத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
தற்போது கோடைகால விடுமுறை ஆரம்பமாகியிருக்கிறது. சுவிஸ், நோர்வே லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலரும் இப்போது விடுமுறைக்காக இலங்கைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த வேளையில் சுவிஸ் நோர்வே போன்ற நாடுகள் ஆசிய நாட்டவர்களின் பிள்ளைகளுக்கு எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருக்கின்றன. இது தொடர்பான அறிவித்தல்கள் இப்போது இந்த நாடுகளின் ஊடகங்களில் வெளிவருகின்றன.
உங்கள் பெற்றோர் பிறந்த நாடுகளுக்கு அவர்களுடன் விடுமுறையில் செல்லும் போது அவர்கள் உங்களுக்கு கட்டாய திருமணங்களை செய்து வைக்கலாம், இது தொடர்பாக எச்சரிக்கையாக இருங்கள் என்ற அறிவிப்புக்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
நோர்வே நாட்டு அரசாங்கம் இளவயதுடையோர் இந்த கட்டாய திருமணத்திலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளையும் இது தொடர்பான முறைப்பாட்டை உடனடியாக வழங்குவதற்கு வழிசெய்யும் வகையில் கைத்தொலைபேசியில் வசதியும் செய்து கொடுத்திருக்கிறது.
பிள்ளைகளை தண்டித்தார்கள், சித்திரவதை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நூற்றுக்கணக்கான பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் சுமார் 500பேர் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் பலருக்கு தெரியாத விடயம். இப்போது கட்டாய திருமணத்திற்கு எதிராக கடுமையான சட்டத்தை நோர்வே நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
அதேபோன்று கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டம் கடந்த வருடம் முதல் சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சுவிட்சர்லாந்தின் சமஷ்டி அரசு அறிவித்துள்ளது.
கட்டாய திருமணத்தை செய்து வைப்பதில் சுவிட்சர்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதாக சுவிசர்லாந்தின் பிரபல பத்திரிகையான சொண்டாக் பிளிக் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் சராசரி 400 கட்டாய திருமணங்கள் நடப்பதாகவும் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளை சேர்ந்த பெற்றோரே தமது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர் என்றும் சுவிஸ் சமஷ்டி அரசின் ஆதரவுடன் நொசத்தல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சூரிச் மாநிலத்தில் உள்ள 22வயதுடைய சிந்துஜா என்ற தமிழ் பெண் தமது பெற்றோர் தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார். 16வயதில் விடுமுறைக்காக இலங்கைக்கு சென்ற போது தனது விருப்பத்திற்கு மாறாக தனது தந்தை தனக்கு தெரியாத ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் அத்திருமணத்தை செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்வேன் என அச்சுறுத்தினார் என்றும் சொண்டாக் பிளிக் பத்திரிகைக்கு சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோரை பிரிந்து தனது சுவிஸ் நாட்டு நண்பருடன் வாழ்ந்து வரும் சிந்துஜா பெரும்பாலான தமிழ் பெண்கள் பெற்றோர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும் பெண்கள் தாங்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது தனது பெற்றோருடனான தொடர்புகளை முற்றாக துண்டித்து சுதந்திரமாக வாழ்வதாகவும் முன்னர் தனது தந்தை எல்லா விடயத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்து அடக்கி வைத்ததாகவும் 22வயதுடைய சிந்துஜா தெரிவித்துள்ளார்.
இப்போது சுவிட்சர்லாந்தில் நடைமுறைக்கு வந்திருக்கும் சட்டத்தின் மூலம் திருமண வயது 18க்கு மேல் இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டவர்களால் வயது குறைந்தவர்களுக்கு நடத்தப்படும் திருமணம் சுவிஸில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசு அறிவித்துள்ளது
சில பெற்றோர் பிள்ளைகளை தங்கள் தாய் நாட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து கட்டாய திருமணங்களை செய்து வைக்கின்றனர். இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்தின் மூலம் இனிமேல் சுவிஸில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்டாய திருமணங்கள் நீண்டகாலத்திற்கு நிம்மதியான வாழ்வை தராது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் றொலன் பிற்றர் கான்ஸ் தெரிவித்துள்ளார். கட்டாய திருமணங்களை செய்து வைக்கும் பெற்றோர்கள் தொடர்பாக பொதுமக்கள் எவரும் தமது அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்தை வரவேற்றுள்ள சுவிட்சர்லாந்தின் கட்டாய திருமணத்திற்கு எதிரான அமைப்பின் தலைவியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான அனுசூயா சிவகணேசன் இச்சட்டம் கட்டாய திருமணத்திலிருந்து பெண்களை பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றங்களில் பெரும் பாலும் இலங்கை தமிழர்கள் ஈடுபடுகிறார்கள் என சுவிட்சர்லாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. உங்கள் நிறுவனத்திற்கு அவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறதா என அனுசூயா சிவகணேசனிடம் கேட்ட போது கட்டாய திருமணம் செய்து வைக்கும் குற்ற செயல்களில் தனியே இலங்கை தமிழர்களை மட்டும் குற்றம் சாட்டமுடியாது. ஏனைய ஆசிய, ஆபிரிக்க நாடுகள் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுகிறார்கள் என தெரிவித்தார்
கோடைகால விடுமுறையில் தங்கள் தாய் நாட்டிற்கு பிள்ளைகளை அழைத்து செல்வோர் இத்தகைய குற்றங்களை புரிகின்றனர் என்றும் இது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படும் என்றும் அனு சிவகணேசன் தெரிவித்தார்.anu sivaganesan quer (1)
பிள்ளைகளின் விருப்பத்துடன் பெற்றோர் பேசி முடித்து வைக்கும் திருமணங்கள் கட்டாய திருமணம் என்ற குற்றத்திற்குள் அடங்காது என்றும் அனுசூயா தெரிவித்தார். பிள்ளைகளின் பூரண சம்மதத்தை பெற்று பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதில் எந்த தவறும் கிடையாது என்றும் அனு தெரிவித்தார்.
சில பெற்றோர் பிள்ளைகளை அச்சுறுத்துகிறார்கள், தாங்கள் தெரிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்யாவிட்டால் தாங்கள் தற்கொலை செய்வோம் என சில பெற்றோர் பிள்ளைகளை அச்சுறுத்துகிறார்கள் என்றும் கட்டாய திருமணத்திற்கு எதிரான அமைப்பை சேர்ந்த அனு கூறுகிறார்.
பிள்ளைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது குற்றம் என்ற போதிலும் தமது பிள்ளைகள் தமது கலாசாரத்தை விட்டு தமது உறவுகளை விட்டு அந்நியப்பட்டு சென்று விடுவார்களோ என்ற அச்சம் பல பெற்றோரிடம் காணப்படுகிறது. இதற்காகவே பல பெற்றோர் கோடைகால விடுமுறைக்கு தமது நாட்டிற்கு பிள்ளைகளை அழைத்து சென்று தாம் விரும்பும் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
எந்த நாடுகளை சொர்க்கம் என்று தேடி வந்தார்களோ அந்த நாடுகளில் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு தங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடைப்பிணங்களாக அலையும் பல பெற்றோரை காணமுடியும்.
தன் மகளுக்கு கட்டாய திருமணம் முடித்து வைத்ததற்காக 5 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கும் தமிழ் பெற்றோரை சுவிஸில் காண முடியும். தன் பிள்ளையை கண்டித்தார் என்ற குற்றத்திற்காக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் பல பெற்றோரை நோர்வேயிலும் சுவிஸிலும் காண முடியும்.
பிள்ளைகளை தண்டித்தார்கள் அல்லது கணவனும் மனைவியும் சண்டை பிடித்தார்கள் என்ற காரணத்திற்காக பெற்ற பிள்ளைகளை அரசு பறித்தெடுத்து சென்று காப்பகத்தில் வைத்திருப்பதும் அதற்காக வருடக்கணக்காக பிள்ளைகளை பிரிந்து ஏக்கத்துடன் வாழும் பெற்றோரை நோர்வேயில் காண முடியும்.
இவற்றை பார்க்கின்ற போது சோர்க்கமே ஆனாலும் அது நம்ம ஊரைப்போல வருமா என்ற இளையராசாவின் பாடல் எவ்வளவு நிதர்சனம் என்பது புரிகிறது.
இரா.துரைரத்தினம்sWISS-sL

No comments:

Post a Comment