August 3, 2016

மஹிந்தவைத் தூக்கிலிட வேண்டும்! - பூநகரி மக்கள் கோரிக்கை !

தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சாட்சியமளித்த மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பொது மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தகுதி, தராதரம் பாராது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்களது கொல்லப்பட்டமைக்கு நியாயம் வழங்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வை எந்தவொரு இடையூறுமின்றி அனுஸ்டிப்பதற்கு வழியேற்படுத்தி தர வேண்டும். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு இராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை செயலணி நடைபெறும் குறித்த பகுதியில் இன்று காலை இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் எனினும் மனித உரிமை ஆணைக்குழுவினரின் வருகையை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment