July 29, 2016

கலாம் புதைக்கப் பட்ட இடத்தில் நிகழ்ந்த விசித்திர உலக சாதனைகள்..!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த வந்த மாணவர்கள், உலக சாதனைகள் பல நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.


மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், நாடு முழுவதும் லட்சகணக்கான மாணவ விதைகளை விதைத்துச் சென்றுள்ளார். அப்படி விதைக்கப்பட்ட மாணவ விதைகளில், பல ஆயிரம் பேர் அவரது மறைவின்போது ராமேஸ்வரத்திற்கு நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

கலாமின் நினைவிடம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அங்கு நினைவிடத்துடன் கூடிய அவரது 7 அடி உயர வெண்கல சிலையை மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் தலைமையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று(வியாழன்) ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது நினைவிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர். அப்படி அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலர் அவரது நினைவிடத்தில் பல உலக சாதனைகளையும் நிகழ்த்தி காட்டினர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து வந்திருந்த பிரத்வீஷ் என்பவர், கனசதுரம் வடிவம் கொண்ட க்யூப்புகள் மூலம் கலாமின் உருவத்தை உருவாக்கினார். 540 க்யூப்புகளை பயன்படுத்தி 6 நிமிடம் 34 விநாடிகளில் கலாமின் உருவத்தை உருவாக்கிய இவரது முயற்சி, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதேபோல் இவரது சகோதரர் பிரதீஷ், த்ரெட் ஆர்ட் மூலம் அப்துல் கலாமை ஓவியமாக வரைந்து கலக்கினார். 9.42 நிமிடங்களில் பல வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியமும் உலக சாதனைக்கான பதிவாக அங்கீகாரம் செய்யப்பட்டது.

புதுச்சேரியைச் சேர்ந்த மணற் சிற்ப கலைஞரான குபேந்திரன், அப்துல் கலாமின் பல்வேறு முக பாவங்களைக் கொண்ட 100 மணற் சிற்பங்களை உருவாக்கி அஞ்சலி செலுத்த வந்தவர்களை அசத்தினார். இதேபோல், 100 பூசணிகாய்களில் கலாமின் முக தோற்றத்தைச் செதுக்கி சிற்பங்களாக்கினார் தேனி மாவட்ட கூடலூரை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர். சதீஷ் என்பவர், 50 நிமிடங்களில் பென்சில் ஒன்றில் கலாமின் முழு உருவத்தை செதுக்கி பரவசமூட்டினார். சேலத்தைச் சேர்ந்த சங்கர், அரை அரிசி ஒன்றில் கலாமின் உருவத்தை வரைந்து ஆச்சரிய மூட்டினார்.

இப்படி ஏராளமான சாதனைகளை கலாமின் நினைவு நாளில் செய்ததன் மூலம், அவரின் கனவுகளை நனவாக்கும் மாணவர்களின் இந்த முயற்சிகளை சாதனை புத்தகங்களில் இடம் பெற உதவி செய்யும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் கலாம் இன்டர்நேஷனல் பவுன்டேஷன் நிர்வாகிகள் பாராட்டி மாணவர்களை கௌரவித்தனர்.





No comments:

Post a Comment