July 16, 2016

ஆட்சியாளர்களினதும் – அரசுகளினதும் நலன்கள் சார்ந்த ‘ஆள்கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன!

இலங்கையில் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், கைதுகள், தடுத்துவைத்தல்’ சம்பவங்கள் அரசியல் தலைமைகளாலும், இராணுவத் தலைமைகளாலும், அரசு சார்பு துணை ஆயுத குழுக்களாலும், நின்று நிதானித்து நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும்,
ஆட்சியாளர்களினதும் – அரசுகளினதும் நலன்கள் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி’ நிரலின் பிரகாரம் இவை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஆகியன,

‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் (Office for Missing Persons – OMP) என்ற சொல் பிரயோகத்தை நீக்கி, ‘கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கான அலுவலகம்’ (Office for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – OFSHKFDR) என்ற சொல்பதம் பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைச் செயலணி ஆனது, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவுக்கும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்துக்கும் சமர்ப்பித்தல்களை கோரி 2016 ஜீலை 05 அன்று அழைப்பு விடுத்திருந்தது.

கொழும்பு 07, சுதந்திரச்சதுக்கத்தில் அமைந்துள்ள சிறீலங்கா பவுண்டேசன் இல் இடம்பெற்ற அமர்வில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் சார்பாக ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் சார்பாக பொருளாளர் திருமதி கா.ஜெயவனிதா ஆகியோர் கலந்துகொண்டு தமது பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தனர்.


உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டடைந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் பற்றி சிவில் சமுக மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சமர்ப்பித்தல்களை கலந்தாலோசனை செயலணி கோருகிறது.

01. விசேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை.
02. உண்மை, நீதி, நல்லிணக்கம், மீள்நிகழாமை, ஆகியவை தொடர்பான ஆணைக்குழு.
03. காணாமல் போனோர் தொடர்பான விடையங்களை கையாள்வதற்கான அலுவலகம்.
04. இழப்பீடுகளுக்கான அலுவலகம்.
05. இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் வேறுமாற்று பொறிமுறைகள், செயல்முறைகள், நடவடிக்கைகள்.

இந்த கட்டமைப்புகளில் (03).காணாமல் போனோர் தொடர்பான விடையங்களை கையாள்வதற்கான அலுவலகம் (Office for Missing Persons) அதாவது OMP நிறுவனம் சார்பு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் – பழுதுகளை சுட்டுவதோடு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஒத்திசைவோடு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் (Vavuniya Citizen’s Committee) சார்பாக எமது பரிந்துரைகளையும், முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

அறிமுகம்:

01. காணாமல் ஆக்கப்படுதல் என்றால் என்ன?

குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவத் தலைமை அல்லது அரசு சார்பு துணை ஆயுத குழுக்கள், அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ, அல்லது கைதுசெய்து காணாமல் போகச்செய்வதாலோ, அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் போய்விடும். இதையே ‘காணாமல் ஆக்கப்படுதல்’ என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள்.


02. காணாமல் போதல் என்றால் என்ன?

குடும்பத்தில் எழும் சச்சரவுகளை (பிணக்குகள்) அடுத்து மனஸ்தாபங்களுடன் (தன்னிச்சையாகவோ, துரத்தப்பட்டோ) வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும் நபர்கள் சிலர், மனம் ஆறுதல் அடைந்து மறுபடியும் வீடு திரும்பும் இஸ்டம் இல்லாமலும், தமது குடும்பத்தினருடன் தொடர்பினை பேணும் மனவிருப்பம் இல்லாமலும் (வைராக்கியம் வளர்த்துக்கொண்டு) தமக்கு பாதுகாப்பு என்று உணரும் ஏதாவது இடம் ஒன்றில் நிரந்தரமாகவே தங்கிவிடுகின்றனர். இவர்கள் தமது நடமாட்டம் (சீவிப்பு) தொடர்பில் குடும்பத்தினருக்கு சிறு தகவலேனும் சென்றடைந்து விடக்கூடாது என்பதில் கூடியளவில் கவனம் எடுத்து நடை, உடை, பாவனை அனைத்திலும் தம்மை உருமறைப்பு செய்துகொண்டோ, அல்லது தம்மை அடையாளப்படுத்தாமல் (தமது சுயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்) நன்கு திட்டமிட்டு ஒளிவுமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பர்.

மேலும் கோவில் திருவிழாக்கள் – கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட சனங்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களிலும் கூட்டநெரிசலில் அகப்பட்டு சிறுவர்கள் – குழந்தைகள் – முதியவர்கள் ஏதேச்சையாக வழிதவறி விடுகின்றனர். இதேபோல தமக்கு முன்னர் அறிமுகம் இல்லாத பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்யும் நபர்களும் கூட, அப்பிரதேசம் தொடர்பான நிலபுல அறிவும், போக்குவரத்து பரிச்சயமும் இல்லாமல் வழிதவறி விடுவதுண்டு. மண் சரிவு, வெள்ளம், கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களிலும் பலர் சிக்குண்டு அவற்றினால் அள்ளுப்பட்டு கொண்டு செல்லப்படுவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுமே, உலக வழக்கத்திலும் – பழக்கத்திலும் ‘காணாமல் போதல்’ என்கிற சொல் பதம் பயன்படுத்தப்படுகின்றது.

03. தடுத்து வைக்கப்படும் காலங்களில் ‘காணாமல் ஆக்கப்படுதலின் அரசியல்’

எதிர்ப்பாளர்களை உடல் ரீதியாக அழித்தொழிப்பது மட்டுமல்ல, சமுகத்தையும் பயமுறுத்துவதே இந்த அரசியலின் நோக்கம் ஆகும். சுரண்டப்பட்ட தொழிலாளர்களும் – பிற உழைக்கும் வர்க்க மக்களும் ஒன்று சேர்வதும், ஒடுக்கப்பட்ட தேசிய இனமக்கள் தமது உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்து போராடுவதும், வேறு வகையான சமுக கட்டமைப்புக்காக செயல்படுவதும், இந்த அரசியலின் மூலமாக தடுக்கப்படுகின்றது. இவற்றுக்கு தலைமை தாங்கும் இயக்க மற்றும் தொழில்சங்க தலைவர்களும், இவற்றில் தீவிர ஈடுபாடுடைய செயல்பாட்டாளர்களும் – தொழிலாளர்களும் கடத்தப்பட்டோ, கைதுசெய்யப்பட்டோ, தடுத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.

04. ‘காணாமல் ஆக்கப்படுதல்’ ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

(இலங்கை உட்பட) சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, இவற்றுடன் தொடர்புடையவர்களை ‘கடத்தி காணாமல் ஆக்குவதை’ ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் ‘கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்படுதல்’ என்பது தடை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்துகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும், அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா கூறுகிறது. எனினும் இப்படி காணாமல் போகச்செய்யப்படுவோரை இரகசிய சித்திரவதை முகாம்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ, யாரும் அறியாத இடத்தில் புதைத்து விடும் அபாய நிலைமைகள் இன்னமும் தொடர்கின்றன.

கடத்தப்பட்டவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்’ என்றே பொதுவாக பலருக்கும் தெரிந்திருக்கும். கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களது உயிரை எண்ணி கவலைப்படுவதுடன், அவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்புகின்றனர். அச்சமுற்றுள்ள உறவினர்கள் நம்பிக்கையுடனும், சந்தேகத்துடனும் காலம் கழிக்கின்றனர். இவ்வாறு உலகெங்கும் பல இலட்சம் பேர்கள் காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள். எத்தனை பேர்கள்? என்று குறிப்பிட்டு நிச்சயமாக சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.

OMP பெயர் மாற்றம்:

இழப்பீடு மற்றும் நீதியை பெற்றுக்கொடுக்கும் மைய நிறுவனமாக (Office for Missing Persons) அதாவது OMP தொழில்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு OMP தொடர்பில் குழப்பங்களும், விளக்கமின்மையும், நம்பிக்கையீனங்களும், அதிருப்திகளும் உண்டு.

‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்ற சொல் பதம் இங்கு பிரயோகிக்கப்படுகின்றது. ஏலவே அறிமுகம் – 01,03,04இல். நாம் சுட்டியிருப்பது போல, தாங்கள் இலக்கு வைத்த நபர் ஒருவரை, அல்லது தாங்கள் விரும்பாத நபர் ஒருவரை, அவர் எங்கு போகின்றார் – வருகின்றார்? எப்போது போகின்றார் – வருகின்றார்? எத்தனை மணிக்கு போகின்றார் – வருகின்றார்? என்று அந்த நபரை பின் தொடர்ந்து சென்று அவர் பற்றிய தகவல்களை முழுமையாக திரட்டிய பின்னர், நின்று நிதானித்து நன்கு திட்டமிட்டு, இந்தப் பெரிய ஜனத்திரளுக்குள் இருந்து அந்நபரை மட்டும் தனியாக வகைப்படுத்தி (தேர்ந்தெடுத்து), அரசியல் தலைமைகளாலும், இராணுவத் தலைமைகளாலும், அரசு சார்பு துணை ஆயுத குழுக்களாலும் இலங்கையில் ‘ஆள்கடத்தல் மற்றும் கைது’ சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

எனவே இலங்கையில் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், கைதுகள், தடுத்துவைத்தல்’ சம்பவங்கள் நிகழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்களையும் – இடங்களையும் நீங்கள் அறிவார்ந்தமாக ஊகித்துக்கொண்டால் மாத்திரமே, உங்களால் மானசீகமாக இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவும் – தெளிவுறவும் முடியும்.

ஆள்கடத்தல் மற்றும் கைதுகள் நிகழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்களும் – இடங்களும்.
v அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்தவர்கள். (தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்துக்கு சார்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்)
v விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பிரயாணம் செய்தவர்கள். (விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது முகவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்)
v மே 2009ம் வருடம், முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில் ஆயுதங்களை களைந்து விட்டு நிராயுதபாணிகளாகவும், பாரிய விழுப்புண்களுடன் தாமாகவே இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளும், போராளிக்குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
v முல்லைத்தீவு நகரம், வட்டுவாகல், ஓமந்தை சோதனைச்சாவடி பகுதிகளிலும், வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இராணுவத்தினர் கேட்டுக்கொண்டதற்கு அமைய, குடும்பத்தினரால் கொண்டு செல்லப்பட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் – ஐ.நா பிரகடனங்களுக்கும் முரணான இத்தகைய ‘கட்டாயமாக காணாமல் போகச்செய்யப்படுதல்’ நடவடிக்கைகள், ஆட்சியாளர்களினதும் – அரசுகளினதும் நலன்கள் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி’ நிரலின் பிரகாரம் நின்று நிதானித்து நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன.

ஆதலால் அறிமுகம் – 02இல். நாம் சுட்டியிருக்கும் விளக்கத்துக்கு அமைய, ‘காணாமல் போன’ என்ற சொல்பதம் அலுவலகத்தின் முகப்பிலிருந்து (பெயர் பலகையில்) இருந்து நீக்கப்பட்டு, அறிமுகம் – 01,03,04இல். நாம் சுட்டியிருக்கும் விளக்கத்துக்கு அமைய, ‘கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களுக்கான அலுவலகம்’ (Office for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives) என்ற சொல்பதம் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுதல் வேண்டும். OFSHKFDR இந்த அலுவலகம் வெளியிடும் அறிக்கைகள், பிரசுரங்கள் இதர வெளியீடுகள் அனைத்திலும் குறித்த சொல்பதம் கட்டாயமாக பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

ஆளணி (பணியாள்கள் தொகுதி):

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் தொழில்பட்டு வருகின்றன. மாவட்ட வாரியான இந்த சங்கங்களுக்கு திருமதி ஜெ.நாகேந்திரன் (திருகோணமலை மாவட்டம்) திருமதி அ.அமலநாயகி (மட்டக்களப்பு மாவட்டம்), திருமதி த.செல்வராணி (அம்பாறை மாவட்டம்), திருமதி கா.ஜெயவனிதா (வவுனியா மாவட்டம்), திருமதி இ.சுபலட்சுமி (மன்னார் மாவட்டம்), திருமதி த.புஸ்பாம்பாள் (முல்லைத்தீவு மாவட்டம்) திருமதி யோ.கனகரஞ்சனி (கிளிநொச்சி மாவட்டம்), திருமதி க.ஸ்ரீகாந்தி (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகியோர் தலைவர்களாக செயல்பட்டு வரும் அதேவேளை,

மாவட்ட வாரியான தமது சங்கங்களை ஒன்றிணைத்து, ‘தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) என்ற பெயரில், இவர்கள் தேசிய அளவில் ஒரு கூட்டு இயக்கமாகவும் தொழில்பட்டு வருகின்றனர்.

FFSHKFDR – Tamil Homeland இன்
தலைவராக திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா),
உபதலைவராக திருமதி அ.அமலநாயகி (அமலினி),
செயலாளராக திருமதி யோ.கனகரஞ்சனி (கலா),
உபசெயலாளராக திருமதி க.ஸ்ரீகாந்தி,
தலைமை ஊடகப்பேச்சாளராக திருமதி த.செல்வராணி,
இணை ஊடகப்பேச்சாளராக திருமதி த.புஸ்பாம்பாள்,
பொருளாளராக திருமதி கா.ஜெயவனிதா,
உதவி ஒருங்கிணைப்பாளராக திருமதி இ.சுபலட்சுமி ஆகியோர் தொழில்பட்டு வருகின்றனர். இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் திரு.கோ.ராஜ்குமார் (ராஜா) அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.

ஆதலால், OFSHKFDR என்று பெயரை மாற்றுமாறு நாங்கள் வலியுறுத்தும் தற்போதைய OMP ஆனது, மாவட்ட வாரியாக பிராந்திய அலுவலகங்களை திறக்கும் போது, FFSHKFDR இன் மாவட்டத்தலைவிகள் ‘தங்களுக்கு யார் நம்பிக்கையானவர்கள், தங்களுக்கு யார் விசுவாசமாக காரிய கருமங்களை ஆற்றுவார்கள், தங்களுக்கு யார் துரோகம் இழைக்க மாட்டார்கள்’ என்று நம்புகின்றார்களோ, அவர்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் யாருடைய பெயர்களை சிபாரிசு செய்கின்றார்களோ, அந்த செயல்பாட்டாளர்கள் ‘பணியாள்கள் தொகுதிக்குள்’ அவசியம் உள்வாங்கப்படல் வேண்டும். சர்வாதிகாரத்தனமாக இதற்கான பணியாள்கள் தொகுதி ஏலவே நியமிக்கப்பட்டிருந்தால், அந்த பணியாள்கள் தொகுதி உடனடியாக கலைக்கப்படல் வேண்டும்.

இதன் ஊடாக, மூன்று விதமான நன்மைகளை அடைந்துகொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு.

ஒன்று: மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், கைதுகள், தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியை கற்றுள்ள தகுதியான பிள்ளைகளையும் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுகளுடன் இரண்டறக்கலந்துள்ள ஆத்மாக்களின் பிரச்சினையுடன் தொடர்புபட்டுள்ள விவகாரத்தில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமையும். (இந்தப் பிள்ளைகளும் தமது நாளாந்த வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள பெருந்துயரை – வலியை ஆத்மார்ந்தமாக அநுபவித்துக் கொண்டிருப்பதால், அலுவலகத்தின் காரிய கருமங்களில் விசுவாசத்தோடும், அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் தொழில்படுவர்) தமது பிள்ளைகளே அலுவலகத்தின் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அலுவலகம் தொடர்பிலான அச்சங்கள் – ஐயங்கள் தீர்ந்து, நம்பிக்கையை தகவமைத்துக்கொள்ள முடியும்.

இரண்டு: சமகாலத்திலும் கூட நீங்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரம் தொடர்பிலும், இந்த விவகாரத்தை கையாள்வதற்கென்று பிரத்தியேகமாக ஒரு அலுவலகம் அமைப்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால்,
இலங்கை நாட்டின் ‘பயங்கரமான இருண்ட யுகம்’ என்று நம்பப்படும் சர்வாதிகாரி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் அவரும் – அவருடைய இராணுவப்புலனாய்வு கட்டமைப்பும், ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தை நாட்டுக்குள் இல்லாமல் செய்துவிடுவதற்காக வலிந்தும் – சூட்சுமமாகவும் முன்னெடுத்த பலதரப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் போதும், பெருத்த உயிர் அச்சுறுத்தல்கள் – ஆபத்துகள் – தாக்குதல்கள் – கைதுகளை எதிர்கொண்டு, மக்களை தெளிவுறுத்தி, அராஜகங்களுக்கு எதிராக தொய்வுறாத கவனவீர்ப்பு – கண்டனப் போராட்டங்களை நடத்தி, இன்றும்கூட நாட்டுக்குள் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ உள்ளிட்ட சில சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளுக்கே இப்பெருமை சாரும்.

பிரதியுபகாரம் எதனையும் எதிர்பாராத, அர்ப்பணிப்பும் – சேவை மனப்போக்கும் கொண்டுள்ள துணிகரமான இத்தகைய செயல்பாட்டாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் – கௌரவமும் வழங்கப்படுதல் வேண்டும். ஆதலால் எழுந்தாமானமாக – சர்வாதிகாரத்தனமாக பணியாள்கள் தொகுதியை நியமித்து, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் – இந்த மக்களின் நலன்கள் சார்ந்து பணிசெய்து கிடக்கும் குறித்த சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுக்கும் இடையிலான ஆத்மார்ந்தமான உறவை துண்டாட எங்கும் எதிலும் எவ்வேளையிலும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது.

மூன்று: அவ்வாறு எழுந்தாமானமாக – சர்வாதிகாரத்தனமாக பணியாள்கள் தொகுதி நியமிக்கப்பட்டால், நிகழக்கூடிய மிகவும் மோசமான விளைவுகள் தொடர்பில் (ஓர் முன்னெச்சரிக்கையாகவும் – விழிப்புநிலையாகவும்) இங்கு சுட்டுவதற்கு விளைந்துள்ளோம்.

எடுகோளாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் தகவல்களை (தகவல் திரட்டு) பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் ஏதேனும் கேள்வி பத்திரங்கள் – விண்ணப்ப கோவைகளை அலுவலகம் தயாரிக்கலாம். அவற்றில் நிபுணத்துவ சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் கூடியளவில் உண்டு. ஆனால் பாதிக்கப்பட்டுள்ள பாமர மக்கள், அவர்களுக்கு மயக்க கிரக்கமான – புரியாத இத்தகைய சொல்லாடல்களால் மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கப்பட்டு, சர்ச்சைக்குரிய கேள்விகளை கொண்டுள்ள அந்தப்பத்திரங்கள் – விண்ணப்ப கோவைகளை பூரணப்படுத்துவதற்காக வழிப்படுத்தப்படும் துர்ப்பாக்கிய (அபாய) நிலைமைகள் ஏற்படலாம். அல்லது அந்த மக்கள் நிர்ப்பந்திக்கவும் படலாம்.

இத்தகைய தவறான வழிநடத்தல்கள், அன்றி அழுத்த செயல்பாடுகள் இத்தனை வருட காலமும் அந்த மக்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ விவகாரத்தை மழுங்கடித்து, நீர்த்துப்போகச் செய்துவிடும்.

ஆகவே அலுவலகம் ஏதேனும் கேள்வி பத்திரங்கள் – விண்ணப்ப கோவைகளை தயாரிக்கும் தேவைப்பாடு இருந்தால் (ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு பத்திரங்கள் ஊடாக அரச (உத்தரவு) கட்டளைகளை மட்டும் சுயமாக பிறப்பிக்கலாம்) அந்தப்பத்திரங்கள் – விண்ணப்ப கோவைகளை தயாரித்து நேரடியாக மக்களின் சுற்றாடல் புழக்கத்துக்கு விடாமல், FFSHKFDR இன் எட்டு மாவட்டங்களின் தலைவிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, 14 நாள்கள் கால அவகாசம் வழங்கி, அவற்றில் ஏதேனும் சேர்க்கைகள் – தணிக்கைகள் (திருத்தங்கள்) வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக அவர்களிடம் கருத்தறிந்த பின்னர், மக்களின் சுற்றாடல் புழக்கத்துக்கு விடுவதே சகல குழப்பங்களுக்கும் – சந்தேகங்களுக்கும் உரிய தீர்வை அளிப்பதாக அமையும். இந்த அணுகுமுறை ஒன்றே உண்மையானதும் – வெளிப்படத்தன்மையானதும் ஆகும்.

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland)








No comments:

Post a Comment