July 28, 2016

ஈழத்து கலைஞர்களிடையே அதி தீவிர நோயாக பரவி வருகின்ற ஒரு விடயம் !

இன்றைய சில ஈழத்து கலைஞர்களிடையே அதி தீவிர நோயாக பரவி வருகின்ற ஒரு விடயம் என்னவெனில் புது புது குறும்படங்கள் பாடல்கள் எடுப்பதாகவும் அதற்கான முதல் பிரதிகளை வெளியிடுவதுமே. அப்படி
வெளியிடப்படும் பிரதிகள் குறும்படங்கள் வெளிவருவதற்கு முன்னரே அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு விடுதல். இது கலைஞர்களுக்கு ஆரோக்கியமான விடயமா என்பதனை உணர வேண்டும். உண்மையில் இந்த விடயம் ஒரு ஆரோக்கியமான நிகழ்வாகாது. நாம் ஒரு படைப்பை பற்றி சிந்திக்கின்றோம் அந்த படைப்பு சில சமயங்களில் வெளிவருவதற்கு சில தடைகள் ஏற்படுவதனால் இன்னும் ஒரு படைப்பை நாம் வெளியிடுகின்றோம் என்று நீங்கள் முணுமுணுப்பது எமது காதுகளில் ஒலிக்கின்றது. ஒரு படைப்பை எடுக்கும்போது வரும் தடையை உடைத்தெறிந்து அந்த படைப்பை முதலில் வெளிக்கொண்டுவர பாடுபடாத நீங்கள் அடுத்த படைப்பிலும் தடைவந்தால் என்ன செய்வீர்கள்? அந்த படைப்பையும் இடையில் விட்டு விட்டு வேறு ஒரு படைப்பை நோக்கி நகர்வீர்களா? ஆக இப்போது பல படைப்புகள் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக செய்திகளை வெளியிடுதல் என்பது தம்மை ஒரு பெரிய கலைஞராகவும் தாம் பல படைப்புக்களை வெளியிடக்கூடிய வல்லமை கொண்டவர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி குறைந்தளவான காலப்பகுதியில் தம்மை பிரபலப்படுத்தும் ஒரு குறுநிலை நோக்கமே. எம்மை பொறுத்தவரை ஒரு படைப்பை எடுத்து அந்த படைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அந்த படைப்பை ஒரு கலைஞனின் உண்மை தோற்றத்துடன் வெளிக்கொண்டுவருதலே சிறப்பம்சம் என்போம். கீழ்த்தரமான ஆசைகளில் சிக்கித்தவிக்கும் அல்லது தம்மை விளம்பரபடுத்தும் நோக்கில் செயற்படும் எந்த ஒரு கலைஞரை பற்றியும் எம் கரம் எழுதிட போவதில்லை. இந்த எழுத்துத்துறையில் நீண்டகாலமாக பயணிக்கும் நாம் ஐரோப்பிய நாடுகளில் முதல் முதலில் ''தாளலயம்'' என்ற ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்து அன்று பிரபலமாக இருந்த ''டி.ஆர்டி'' என்ற தொலைக்காட்சிக்கு வழங்கிய பெருமை எமக்குண்டு. ஆனாலும் எம் முகம் பிரபலப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையில் அன்றில் இருந்து இன்றுவரை செயற்படவில்லை என்பதே எமது வாதமாகும். மிகவும் இளம் வயதில் எழுத்தின் மீது தீராத காதல் கொண்டு பல பல எழுத்துக்களை கிறுக்கும் நாம் எந்த ஒரு புத்தகங்களையும் வாசித்து இதிகாசங்களையும் சுவைக்கவில்லை. ஆக எழுத்தாற்றல் என்பது இயல்பாக தன்னிலை பெற்று கரங்களில் தவழும்போதே சிறப்பாகின்றது. எப்போது ஒரு கலைஞன் தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கில் செயற்பட ஆரம்பிக்கின்றானோ அன்றே அந்த கலைஞனின் கற்பனை இறந்துவிடுகின்றது என்றே தான் பொருள் கொள்ள முடியும். ஆகவே மதிப்புக்குரிய கலைஞர்களே உங்கள் எழுத்தாற்றலையும் படைப்புக்களையும் தரம்மிக்கதாக்க உங்கள் எண்ணங்களை தரப்படுத்துங்கள்.
 -யாரோ-
என்றும்
 காவியா

No comments:

Post a Comment