மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா, குருந்தையடி ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட கிணறுகள் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
மட்டு. மாவட்ட வவுணதீவுப் பிரதேசத்தின் கன்னங்குடா குருந்தியடி காஞ்சிரங்குடா ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர் நிலைகளிலுள்ள நீர் வற்றியதனால் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
ஒரு குடம் தண்ணீருக்காக காட்டுப்பகுதிகளினூடாக பல கிலோ மீற்றர் தூரங்களுக்குச் சென்று விஷ ஜந்துக்களிடம் தமது உயிரைப் பணயம் வைத்து தண்ணீரைப் பெற்று வரவேண்டிய நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கிணறுகளுக்குள் நீர் வற்றியுள்ளமை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று பல தேவைகளை முன்வைத்து மக்கள் தாம் நீருக்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் முறையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாக அரச சார்பற்ற தனி நபர்கள் மற்றும் சமூக சேவை உள்ளமுடைய அரேபிய நாட்டு தூதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டி நீர் வளமுள்ள இடங்களை அடையாளங்கண்டு இரண்டு இடங்களில் இரு கிணறுகள் அமைப்பதற்கு நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு கிணறும் 85,500 ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதற்கான அடிக்கல்லும் நடப்பட்டு கிணறுகள் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கிணறுகள் அப்பிரதேச மக்களிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், JASKA அரேபிய நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் அஷ்ஷேய்க் ஹாஸிம் சூரி, செயலாளர், உறுப்பினர்கள், முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment