June 25, 2016

ஒரே பார்வையில் EUவில் இருந்து UKயின் விலகலுக்கான வாக்களிப்பும், ஐரோப்பிய அதிர்வலைகளும்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்?உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும்.



ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும்.


அப்படியானால் அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி?


லிஸ்பன் ஒப்பந்தம் 50 ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது.


அதன்படி, வெளியேறுவதற்கான முறையான அறிவிப்பை கொடுத்த நாளிலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசமிருக்கிறது.அது எப்போது நடக்குமென தெரியவில்லை.பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் புது ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.


முதலாவது வர்த்தகம். ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க விரும்பினால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.


ஐரோப்பிய ஒன்றிய விதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச் சேர்ந்தவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டியும் வரலாம்.


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்கனவே வாழும் பிரிட்டிஷ் மக்களின் நிலைமை மற்றும் பிரிட்டனிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்குடிகளின் நிலைமை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டும்.


ஐக்கிய ராஜ்ஜியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம் உருவானபின், இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் இயற்றிய சட்டங்கள் அனைத்தையும் பிரிட்டன் சட்டங்களாக புதுப்பிக்க வேண்டும்.

'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


அப்படி தாமதிப்பது ஸ்திரமின்மையை நீடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், அதிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த முடிவு குறித்து ஆராய்ந்த ஐரோப்பிய தலைவர்களே இவ்வாறு கூறியுள்ளனர்.


தமது ஒன்றியத்தின் ஏனைய 27 நாடுகளும் அப்படியே தொடர்ந்து நிலைத்திருக்கும் என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான ஜோன் கிளவுட் ஜங்கர் வலியுறுத்தியுள்ளார்.


ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டின் சூலஸ், ஐரோப்பிய கவுன்ஸிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டி ஆகியோருடன் நெருக்கடிநிலை பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னரே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு குறித்து தாம் வருத்தமடைந்தாலும், பிரிட்டிஷ் மக்களின் முடிவை மதிப்பதாக கூறியுள்ளனர்.


பிரிட்டிஷ் மக்களின் முடிவை அமல்படுத்துவதை பிரிட்டன் முடிந்தவரை விரைவாக செய்ய வேண்டும் என்று கூறிய அவர்கள், அது மிகவும் வேதனையான நடவடிக்கை என்றும் கூறியுள்ளனர். எந்தவொரு தாமதமும், தேவையற்ற ஸ்திரமின்மையை நீடிக்கச் செய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக பெரிய அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த முடிவுகள் குறித்து கோர்பினை கடுமையாக விமர்சித்துள்ள தொழிற்கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர், இந்த முடிவுக்குக் காரணம் கோர்பினின் மந்தமான தலைமையே என்று கூறியுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்தில், கோர்பின் போதிய அக்கறை காட்டவில்லை என மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கோர்பினின் தலைமைக்கு தற்போது ஒரு பெரிய சவால் ஒன்று எழுந்துள்ளதாக பிபிசியின் அரசியல் பிரிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment