August 15, 2014

மகிந்தவுக்காக யாகம் செய்ய சென்ற குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி

சிறீலங்கா அதிபர் ராஜபக்சேவின் ஆரோக்கியத்துக்காக யாகம் செய்ய இலங்கைக்கு சென்ற திருச்செந்தூர் கோயில் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள்
கட்சியினர் இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.  
இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
இதை தாங்க முடியாத இலங்கை அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் வகையில் இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் வெளியிட்ட செய்தி ஒட்டுமொத்த தமிழர்களையும் கொந்தளிக்க செய்தது.    
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குருக்கள் சிவசாமி தலைமையில் குழுவினர் இலங்கைக்கு சென்று ராஜபக்சேவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் இல்லத்தில் ஆயுள் ஆரோக்கியத்துக்காக சிறப்பு யாகங்கள் செய்து வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.    
இலங்கைக்கு யாகம் நடத்த சென்று வந்த கோயில் குருக்கள் சிவசாமி மற்றும் அவருடன் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி கோயிலுக்குள் நுழைய அவர்களை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வீரமாணிக்கம் கூறுகையில், ‘ராஜபக்சேவுக்காக யாகம் நடத்த சென்ற கோயில் குருக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அறிநிலையத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்றார்.  

No comments:

Post a Comment