June 10, 2016

ஐங்கரநேசனுக்கு ஆதரவாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறுத்தக் கோரி இரு அரசியல்வாதிகள் தூது!

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராகக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படும்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறுத்துமாறு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கடந்த கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அரசியல்வாதி ஆகியோர் தூது சென்றுள்ளனர்.

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடமும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடமும் இவர்கள் இருவரும் தூது சென்றனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக மாகாண சபையின் அடுத்த அமர்வின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலரால் முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆனால், நேற்று வரை மாகாணசபையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் பொது நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த முயற்சியை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த க.அருந்தவபாலன் இலங்கைத்தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்து வலியுறுத்தி உள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முயற்சியை ஆளும்கட்சி உறுப்பினர்களிடம் கைவிடச் சொல்லுங்கள் என்று கோரியுள்ளார்.

அத்துடன் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அதனை நிகழ்ச்சிநிரலில் இணைக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் க.குருகுலராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் சொல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment