June 20, 2016

இந்தோனேசியாவில் தரை இறங்கியுள்ள 44 ஈழத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் என்ன?

இந்தோனேசியாவில் தரை இறங்க அனுமதிக்கப்பட்ட 44 ஈழத் தமிழ் அகதிகளும் ஆஸ்திரேலியா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவுஸ்திரேலியா 44 ஈழத் தமிழரையும் ஏற்குமா என்பதில் சந்தேகம் இருப்பதால் மீண்டும் தமிழகத்துக்கே அவர்கள் திருப்பி அனுப்பப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்தோனேசியாவின் ஆச்சே பகுதி லோகாங்கா கடல் பகுதியில் ஒரு படகு இயந்திர கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளித்தது. இது குறித்து அந்நாட்டு மீனவர்கள் இந்தோனேசிய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தமிழ்நாட்டுப் பதிவெண் கொண்ட படகில் 9 சிறுவர்கள், கர்ப்பிணி பெண் உட்பட 44 பேர் இருந்தனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்தோனேசியாவில் தரையிறங்க கடற்படை வீரர்கள் அனுமதிக்கவில்லை.

இவர்கள் அனைவரும் தமிழக அகதிகள் முகாம்களில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சமடைய சென்றவர்கள். இதனால் இந்தோனேசியா கடற்படை அனுமதி மறுத்தது. அதே நேரத்தில் படகு இயந்திரக் கோளாறை சரி செய்யவும் படகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கவும் அந்நாடு முன்வந்தது.

தங்களை தரை இறங்க அனுமதிக்க கோரி சில பெண்கள் கடலில் குதித்த போது இந்தோனேசிய கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அப்பெண்கள் மீண்டும் படகில் ஏறினர்.

இந்த அவலத்தின் உச்சமாக 'எங்களை தரை இறங்க அனுமதியுங்கள் அல்லது சுட்டுக் கொல்லுங்கள்' என கெஞ்சும் நிலைக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

ஐநா தலையீடு இது தொடர்பான வீடியோ பதிவு வெளியாகி உலகை உலுக்கியது. பின்னர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டால் 5 நாட்களுக்குப் பிறகு அப்படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் அதன்பிறகும் படகில் இருந்து யாரும் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துகள் மட்டும் படகுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டன.

ஐ.நா. மனித உரிமை ஆணையம், அம்னஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகளின் கடுமையான நெருக்கடியால் 44 தமிழ் அகதிகளும் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்தோனேசிய துணை அதிபர் ஜுசப் கல்லா கூறுகையில்,

கடந்த 11-ந் தேதி ஆச்சே பெஹர் கடல் பகுதியில் 44 தமிழ் அகதிகள் ஒரு படகில் தத்தளிப்பது தெரிய வந்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அகதிகளுக்கு தேவையான உணவு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பழுதடைந்த படகை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. அவர்கள் அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து சுமார் 20 நாட்கள் கடல் பயணத்துக்குப் பிறகு இந்தோனேசிய கடல் எல்லைக்கு அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் விரும்பும்போது இந்தோனேசியாவை விட்டு புறப்படலாம்.

இந்தோனேசிய கடல் எல்லை வரைக்கும் எங்களது கடற்படை பாதுகாப்பு அளிக்கும். அதன்பிறகு சர்வதேச எல்லைக்குச் சென்றபிறகு அகதிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் விருப்பப்படி செயல்படலாம் என்றார்.

அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தென்கிழக்கு ஆசிய இயக்குநர் ஜோசப் பெனடிக்ட் கூறுகையில், ஒரு கர்ப்பிணி பெண், 9 சிறுவர்கள் உட்பட 44 பேர் படகில் பயணம் செய்துள்ளனர். அவர்களை அகதிகளாக பதிவு செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார்.

தற்போது ஈழத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு அல்லது தமிழகத்துக்கு திரும்பி செல்ல வேண்டும் என்று இந்தோனேசிய அரசு நெருக்கடி கொடுக்கிறது.

தாங்கள் அவுஸ்திரேலியா செல்லவே விரும்புகிறோம் என்கின்றனர் ஈழத் தமிழர்கள். ஆனால் அவுஸ்திரேலியா அரசு இவர்களை அகதிகளாக ஏற்குமா என்பது சந்தேகமே.

அந்நாட்டின் லேபர் கட்சியானது, அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்வோம் என்கிறது. அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்கிறது லிபரல் கட்சி.

இதனால் 44 ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்ன என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment