May 24, 2016

பாகிஸ்தானில் இருந்து உதவிப்பொருட்களுடன் வருகிறது இரண்டாவது விமானம்!

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரணப் பொருட்களுடன்,
பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டாவது விமானம் இன்று கட்டுநாயக்கவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன், பாகிஸ்தான் விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதில், மின்பிறப்பாக்கிகள், கூடாரங்கள், மருந்துகள் போன்றன எடுத்து வரப்பட்டன. இவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் சையட் சகீல் ஹுசேன், சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கையளித்தார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 30 படுக்கைகளைக் கொண்டதும், அனைத்து வசதிகளையும் கொண்டதுமான கள மருத்துவமனை ஒன்றையும், 17 மருத்துவர்களையும் அனுப்பி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

எனினும், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கள மருத்துவமனைக்குப் பதிலாக அவசர நிவாரணப் பொருட்களை மாத்திரம் பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

அதேவேளை, நிவாரணப் பொருட்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம் பாகிஸ்தானில் இருந்து இன்று சிறிலங்கா வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment