May 24, 2016

“எங்களை காப்பாற்றுங்கள், இரவு வேளைகளில் கல் வரும் என்ற அச்சத்தில்!

“எங்களை காப்பாற்றுங்கள், இரவு வேளைகளில் கல் வரும் என்ற அச்சத்தில் நித்திரை இன்றி வாழ்ந்து வருகின்றோம் என நுவரெலியா தவலந்தன்ன வெவண்டன் தோட்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.

நுவரெலியா – கொத்மலை – தவலந்தன்ன வெவண்டன் தோட்டத்தில் தற்பொழுது பாரிய கற்பாறை உடைந்து மண்சரிவு அபாயம் நேர்ந்துள்ளது.
2014 ஆரம்பமான இந்த மண்சரிவு, தற்பொழுது வரை பகுதி பகுதியாக ஏற்பட்டு வருகின்ற நிலையில் அந்த தோட்டத்திலுள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் 58 குடும்பங்களை சேர்ந்த இந்த தோட்ட மக்கள் இடம்பெயர்ந்து வௌண்டன் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதன்பின்னர், தற்காலிக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டு ஒரு வருட காலமாக தங்கியிருந்த நிலையில், இவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை முறையாக நடைபெறவில்லை.
இதனால் விரக்தியடைந்த இந்த மக்கள் தற்காலிக கூடாரங்களை கைவிட்டு, பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு திரும்பினர்.
இதன்பின்னர், வீடுகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டுக்கான தளமும் வெட்டப்பட்டது. குறிப்பிட்டவர்களுக்கு தகரம், சீட் வகைகளும் வழங்கப்பட்ட நிலையில், குறித்த காலப் பகுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தொடர்ந்து இந்த வேலைத் திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த தோட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் நாளாந்தம் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குறித்த தோட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்து அவர்களை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கம் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்காமை கவலையளிக்கின்றது.
இந்த நிலைமை தொடர்பாக பாதிப்புக்குள்ளான தோட்ட மக்களிடம் வினவிய போது, அய்யா எங்களை காப்பாற்றுங்கள். இரவு வேளைகளில் கல் வரும் என்ற அச்சத்தில் நித்திரை இன்றி வாழ்ந்து வருகின்றோம்.
கைக்குழந்தைகள், சிறுவர்கள், வயது முதிர்ந்தோர் உட்பட அனைவரும் பயத்துடன் உள்ளோம். நாளாந்தம் கற்கள் வந்த வண்ணமே உள்ளன. இப்போது எவரும் எங்களைப் பார்க்க வருவதில்லை.
வருடங்கள் 3 கடந்த போதும் இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. பலர் வந்து அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என்று என்னென்னவோ கூறிய போதும் ஒன்றுமே நடைமுறையில் இல்லை.
மூன்று வருட காலப் பகுதிக்குள் நாங்கள் 4 முறை மண்சரிவு அபாயம் ஏற்பட்டு பாடசாலைக்கும், தற்காலிக குடியிருப்புக்கும் மீண்டும் வீட்டுக்குமாக மாறி மாறி வாழ்ந்து வருகின்றோம்.
தற்பொழுது மலையகத்தில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றையாவது எமக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.






No comments:

Post a Comment