மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 16 சிறிய குளங்கள் மற்றும் வாய்க்கால்கள் புனரமைப்பு, சிறு தானிய விதைகள் விநியோகம்
என்பன 157.6 மில்லியன் செலவில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் புனரமைக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தில் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டத்தின் கீழேயே இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி.ரோகினி சிங்கராஜா, ஆலோசகரும் விவசாய அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான கலாநிதி டி.பி.ரி.விஜயரெட்ண, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது, உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இந்த வருடத்தில் கிரான் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சோதயன் குளம், அத்திக்காட்டுக் குளம், இலுப்பைக் குளம், குறுக்கானமடுக் குளம், நவுண்டல்யமடுக் குளம், தரணிக்குளம், தரவைக்குளம், மியான்கல் குளம், வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிரிமிச்சையோடைக் குளம், ஆனைகட்ட காடு குளம் அகிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
அதே நேரம், செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அத்தியான்டமுன்மாரிக்குளம், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பழுகாமம் பிரதான வாய்க்கால், புழுக்குணாவை அணைக்கட்டு வாய்க்கால், கடுக்காமுனைக் குளம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மகிழூர் முனைக் குளம் மற்றும் வாய்க்கால், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடைச்சகல் குளம் ஆகியனவும் புனரமைக்கப்படவுள்ளன.
இந்தக் கூட்டத்தில், பிரதேச செயலாளர்கள், விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், உதவிப் பிரதேச செயலாளர்களும் பங்கு கொண்டனர்.
No comments:
Post a Comment