July 17, 2016

ஏன் வந்தார் நிஷா பிஸ்வால்?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வால் மீண்டும் ஒரு தடவை இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.


அவருடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், நிஷா பிஸ்வால் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது இது ஐந்தாவது தடவை.

கடந்த ஆண்டு பெப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில், அதிகாரபூர்வ பயணங்களையும், டிசம்பரில் தனிப்பட்ட பயணம் ஒன்றையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

அதுபோலவே ரொம் மாலினோவ்ஸ்கியும், கடந்த ஆண்டு ஏப்ரலிலும், ஆகஸ்டிலும் இலங்கை வந்திருந்தார்.இப்போது அவர் மூன்றாவது தடவையாக வந்து சென்றிருக்கிறார்.

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், அடிக்கடி அமெரிக்க அதிகாரிகள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது பற்றிய கேள்விகள் ஒரு புறத்தில் இருக்க, இம்முறை நிஷா பிஸ்வால் எதற்காக கொழும்பு வந்தார் என்று பார்க்க வேண்டியுள்ளது.

அரச மற்றும் ஏனைய தரப்புகளை சந்தித்துப் பேசுவதற்கா?

ரூபவாஹினியின் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா?

கொழும்புத் துறைமுகத்தைப் பார்வையிடுவதற்கா?

வர்த்தக சமூகத்தை சந்திப்பதற்கா?

திருக்கோணேஸ்வரப் பெருமானைத் தரிசிப்பதற்காகவா?
இந்தக் கேள்விகள் ஏன் எழுந்திருக்கின்றன என்றால், இவையெல்லாம்தான் அவரது மூன்றுநாள் பயண நிகழ்ச்சி நிரல்களாக இருந்தன.

பங்களாதேஷுக்கான பயணத்தையும், அதையடுத்து கொழும்புக்கான பயணத்தையும் நிஷா பிஸ்வால் மேற்கொண்டமைக்கு நீண்டகால நிகழ்ச்சி நிரல்கள் மாத்திரம் காரணமாக இருக்கும் எனக் கருத முடியாது.

நிஷா பிஸ்வாலின் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு விவகாரங்கள் இருந்தாலும், இன்னொரு முக்கியமான விடயமும் இடம்பெற்றிருந்தது.

அது, ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்ற விவகாரம்.பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள இராஜதந்திர அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மீது அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், அமெரிக்காவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

ஐ.எஸ். தீவிரவாதம், பாகிஸ்தானைத் தாண்டி தென்னாசிய நாடுகளுக்குள் பரவவில்லை என்றிருந்த நம்பிக்கைக்கு அது ஆப்பு வைத்திருக்கிறது.



இந்தோனேசியாவில் இடம்பெற்ற தாக்குதல் அதையடுத்து, டாக்காவில் நடந்த தாக்குதல் எல்லாமே, தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளும், ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்த்தியிருக்கிறது.

டாக்காவில் நடந்த தாக்குதல்கள், அமெரிக்கா, இந்தியாவையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. டாக்காவில் கொல்லப்பட்டவர்களில் அமெரிக்கர்களும் இருந்தனர்.

இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் அமெரிக்காவுக்கு, தெற்காசியாவில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு முக்கியமானதாக இருந்து வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் இடைத்தங்கல் நிலையமாக இலங்கை விளங்குவதாக அண்மைக்காலங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன.

இந்தநிலையில், இலங்கையின் பாதுகாப்பு விடயத்திலும் அமெரிக்கா கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நிஷா பிஸ்வாலின் பயணத்தின் போது இந்த விவகாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, பொருளாதார அபிவிருத்தி, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பு, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் உள்ளிட்ட ஏனைய கரிசனைக்குரிய விடயங்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இலங்கையுடனான ஒத்துழைப்பு விடயத்தில் அமெரிக்கா மிகக்கவனமாகவே இருந்து வருகிறது.

தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மாத்திரமன்றி, இலங்கையை மையப்படுத்திய கடற்பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் அமெரிக்காவுக்கு கூடுதல் அக்கறைகள் உள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில், கொள்கலன்களின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா அதிக அக்கறை செலுத்தி வருகிறது.

இதற்காக அமெரிக்கா பல ஸ்கேனர் இயந்திரங்களையும் நவீன தொழில்நுட்பங்களையும் கூட வழங்கியிருக்கிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், கொழும்பு, காலி துறைமுகங்களின் செயற்பாடுகளை அவ்வப்போது கண்காணித்து வருகிறார்.

இம்முறை கொழும்பு வந்திருந்த நிஷா பிஸ்வாலும் கூட கொழும்புத் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கொழும்புத் துறைமுகத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா கூடுதல் அக்கறை கொள்ள ஆரம்பித்திருப்பது இங்கு கவனிக்கத்தக்க விடயம்.

இலங்கையின் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார தன்மைகள் அமெரிக்காவின் பாதுகாப்புடனும் பொருளாதாரத்துடனும் நெருங்கிய செல்வாக்கை செலுத்தும் வகையில் அமைந்துள்ளதால், இரண்டு நாடுகளும் நெருக்கமான உறவுகளை கையாள வேண்டும் என்று கொழும்பில் வர்த்தக சமூகத்தினரைச் சந்தித்த போது நிஷா பிஸ்வால் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் பாதுகாப்பும், பொருளாதாரமும், அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் நெருங்கிய செல்வாக்கை செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளதில் இருந்தே, இலங்கையுடனான உறவுகளில் எந்தளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமன்றி, இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியையும், இலங்கைக் கடற்படையிடம் வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது.

இப்படியானதொரு நிலையில், இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடுகளும் ஈடுபாடுகளும் அதிகம் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் இலங்கையைத் தனது கைக்குள் தக்கவைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா பெரும் பிரதயத்தனம் எடுத்துக் கொள்கிறது.

அதற்காக, தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் அவ்வப்போது மாற்றியமைத்துக் கொள்ளவும் அமெரிக்கா தவறவில்லை.

மனித உரிமைகள் விவகாரத்தை முன்னிறுத்தி, இலங்கை மீது அமெரிக்கா கொடுத்து வந்த அழுத்தங்கள் மற்றும் அது சார்ந்த நிகழ்ச்சி நிரல்கள் அனைத்துமே, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மாற்றமடைந்திருக்கின்றன.

இதற்கான அடிப்படை, இலங்கையுடன் புதிதாக ஏற்பட்டிருக்கின்ற நெருக்கமான உறவுகள் தான்.

இப்போதும் கூட, பொறுப்புக்கூறல், நல்லிணக்க, மனித உரிமைகள் விவகாரங்கள் சார்ந்த இலங்கையின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்காவுக்கு அதிருப்திகள் இருக்கின்றன.

ஆனால் அவற்றையெல்லாம் அரசாங்கத்தின் மீது திணிக்க அமெரிக்கா முற்படவில்லை.

உதாரணத்துக்கு, பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பாக அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியிடப்படும் முரண்பட்ட கருத்துக்களை அமெரிக்கா கவனத்தில் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது, நிஷா பிஸ்வால் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்கும் விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் வெளியிடும் கருத்துக்கள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு முரணானவையாகவே இருக்கின்றன.

ஆனாலும் அதுபற்றிய அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்துக்கு வெளிப்படையாக எந்த அழுத்தங்களையும் கொடுக்க முனையவில்லை.பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்படுகின்ற போது, அதுபற்றிக் கருத்தை வெளியிடுவோம் என்று நிஷா பிஸ்வால் கூறியிருக்கிறார்.

இது ஒரு வகையில், இலங்கை அரசுக்குத் தொந்தரவு கொடுக்காத அணுகுமுறை தான்.இதுபோன்ற கருத்துக்கள், மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வெளிவந்திருந்தால், அமெரிக்காவின் அணுகுமுறைகள் வேறுபட்டவையாக இருந்திருக்கும்.

காரணம், அந்த ஆட்சிக்காலம் அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவில்லை.

தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில், இலங்கையின் பாதுகாப்பும், பொருளாதாரமும், விளங்குவதாக அமெரிக்கா பகிரங்கமாகவே கூறிவிட்ட நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் கவனம் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, அமெரிக்காவின் இந்தப் பகிரங்க அறிவிப்பு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும்.

அதனையும் கவனத்தில் கொண்டுதான் நிஷா பிஸ்வாலின் இலங்கைப் பயணம் அமைந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், திருக்கோணேஸ்வர வழிபாடு, ரூபவாஹினியின் சமையல் நிகழ்ச்சி மட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் கூட, அவரது பயணத்திட்டத்தில், ஒரு பொழுதுபோக்கு விடயமாகத்தான் தெரிகிறது.

No comments:

Post a Comment